இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் " என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர் எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல பொருள் இருந்தால் , அவற்றில் சில வழக்கத்தில் இருந்து போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில் புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்

என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள்.

நாராயணனே

நமக்கே

ஏன் ?இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று பெயர்.

நாராயணன் நமக்கு பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை.

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க தேவையில்லை என்பது புலனாகும்.

நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான் என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான் செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப் பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.