Sri Mahavishnu Info: Thiruppavai pasuram 30 | திருப்பாவை பாடல் 30 Thiruppavai pasuram 30 | திருப்பாவை பாடல் 30

Thiruppavai pasuram 30 | திருப்பாவை பாடல் 30

Sri Mahavishnu Info


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்*  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி* 
அங்குப் பறைகொண்ட ஆற்றை*  அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*  இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்* 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (30)

வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, ஆஸ்ரிதர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை – பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுக்கிரிஹித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்.

அணி புதுவை – இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த ஆஸ்ரிதரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம்  பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.

‘நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.

இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது.  இதில் சித்தாந்த விரோதமாகவோ, ஆசார்யர் உபதேச விரோதமாகவோ, பகவத் அபசாரமோ, பாகவத அபசாரமோ, இன்னும் அறியாத வகையில் எதாவது குறைகள் இந்த உரையில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், பெரியோர்கள் க்ஷமிக்க வேண்டும் என்று உளமாற சேவித்து கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புறுவர்.இனிய திருப்பாவை உரை இனிதே நிறைவடைந்தது.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்...!

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்