
🔱 ஸ்ரீ நம்மாழ்வார் வரலாறு
நம்மாழ்வார், ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப்படுகிறார். திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர், விஷ்வக்சேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீராமரின் ஜென்ம லக்னமான கடகம்.
நம்மாழ்வார் அவதரித்ததற்குப் பின், திருநகரி "ஆழ்வார் திருநகரி" என்று அழைக்கப்படத் தொடங்கியது. இதுவே அவரது மகிமையைப் பறைசாற்றும் ஆதாரம். இவர் பிறந்தபோது அழவும் இல்லை, பாலும் பருகவில்லை. திருக்குருகூர் ஆதிப்பிரான் ஆலயத்தில் புளிய மரத்தடியில் பத்மாசனத்தில் அமர்ந்தார். 16 ஆண்டுகள் அங்கேயே தியானத்தில் இருந்தார்.
வட தேசத்திலிருந்த மதுரகவி ஆழ்வார், வானத்தில் தோன்றிய ஒளி வட்டத்தைத் தொடர்ந்து தெற்கே வந்து, நம்மாழ்வாரை காண்கிறார். கண் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரிடம் ஒரு கல்லை "தொப்பென்று" போட அவரின் கண்கள் திறக்கின்றன.
மதுரகவி, "செத்ததின் வயிற்றுச் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்க, நம்மாழ்வார் பதிலளிக்கிறார்: "அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்". இதுவே அவரது முதல் திருவசனம்.
மதுரகவி, நம்மாழ்வாரின் சீடனாக தன்னை அர்ப்பணிக்கிறார். நம்மாழ்வாரும் ஏற்றுக்கொள்கிறார். அவர்தம் திருவாயிலிருந்து வெளிவந்த முதல் பாசுரம்: "பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும்" என தொடங்கும் திருவிருத்தம். பின் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என 1102 பாசுரங்களை அருளிச் செய்கிறார்.
நம்மாழ்வார் 36 திவ்ய தேச எம்பெருமான்களை மங்களாசாஸனம் செய்துள்ளார். அனைத்து திவ்ய தேசங்களினதும் பெருமாள்களும் அவரிடம் வந்து பாசுரங்களைப் பெற்றுச் சென்றனர்.
பெரியோர் கூறுவதுபோல், நம்மாழ்வாருக்கு ஒரு சிறிய வருத்தம் இருந்ததாகவும், கலியுகம் பிறந்து 43வது நாளில் தான் அவதரித்ததால், ஸ்ரீகிருஷ்ணருடன் வாழ்ந்த யுகத்தில் பிறக்க முடியாமல் போனதற்காக அவர் வருந்தினார் என்றும் கூறப்படுகிறது.
நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழியை வேண்டியபோது, நம்மாழ்வார் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் முழுமையாக அவரிடம் அருளினார். இன்று நாம் அதனை சேவிக்கக் காரணமான பெரும் வரம் நம்மாழ்வார் மூலமே கிடைத்துள்ளது.
🙏 நம்மாழ்வார் திருவடிகளே சரணம்