மகாலட்சுமியை பிரார்த்தித்து தங்க மழையையே நம் நாட்டில் வாழ்ந்த மகான்கள் பொழிய வைத்துள்ளனர். அதில் முக்கிய மூவரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
வேதாந்த தேசிகர் துதித்த திருமகள் துதி
வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதான பொருளில் “ நிகமாந்த மஹா தேசிகன்" என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரை சொல்வார்கள். ‘ நிகமாந்த' என்றாலும் ‘ வேதாந்த' என்றாலும் ஒன்றுதான். “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்" என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு. குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சமாக அருள் புரிந்தார். வடகலை சம்பிரதாயத்துக்கு மூலபுருஷர் அவர். தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிச்சை எடுத்துத்தான் ஜீவித்து வந்தார். பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்" என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
இந்த தேசிகர் அப்படி எதையும் சாதித்து விட முடியாது என்று நிரூபித்து விடவேண்டும். “ஸர்வதந்திர ஸ்வதந்திரப்பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி, மானபங்கப் படுத்த வேண்டும்" என்று அவருடைய விரோதிகள் நினைத்து ஒரு சூழ்ச்சி செய்தார்கள். பரம ஏழையான ஓர் அசட்டு பிராமணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகனின் விரோதிகள் இந்தத் தடிமண்டுப் பிரம்மசாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். “இந்தப் பையன் போய் அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக்கூடாது. ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர' என்றால், அவராகவே எப்படியோ இவனுக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும்.
அவரால் இப்படிச் செய்ய முடியாது. உடனே, ‘எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?' என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும்" என்று திட்டம் போட்டார்கள். அதன்படியே ஏழைப் பையனை அவர்கள் ஏவினார்கள். ஸ்ரீதேசிகனிடம் ஏழைப் பிரம்மசாரி போய்த் தன் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான். வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். மஹாலக்ஷ்மியை மனமுருக வேண்டி, ஒரு ‘ஸ்துதி’ செய்தார். அதுவே, உத்தமமான “ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம்''. உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மசாரிக்கு கொடுத்தார். விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று.
(இந்த “ ஸ்ரீஸ்துதி'' ஸ்தோத்திரம், இன்றும் வைணவர்களால், பாராயணம் செய்யப்படுவதுடன், லக்ஷ்மி குபேர பூஜையும் தனியாக
செய்வதும் உண்டு.)
கனகமழை பொழிய வைத்த சங்கரர்
ஆதிசங்கரர் ஒரு நாள் ஒரு ஏழைய அந்தணரின் வீட்டில் பிச்சை கேட்டார். அந்த ஏழையின் வீட்டில் மறு நாள் துவாதசியன்று சாப்பிடுவதற்காக வைத்திருந்த ஒரே ஒரு அழுகிய நெல்லிக்கனிதான் இருந்தது. இந்தக் கனியை எப்படி சங்கரருக்கு அளிப்பது என தயங்கியவாறே அக்கனியை அந்த வீட்டின் தலைவி சங்கரருக்கு பிச்சையிட்டாள். அந்த வீட்டின் வறுமையை உணர்ந்த ஆதிசங்கரர் மகாலட்சுமியை மனமுருகத் துதித்து அவ்வீட்டின் ஏழ்மையை நீக்க பிரார்த்தனை செய்தார். ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதிக்கிறபோது ஆகாயத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசிரீரி.
உடனே ஆதிசங்கரர், “இவர்கள் ஜன்மாந்திரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக் கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டிற்கே இல்லாத இவள் எனக்குப் பிச்சை போட்ட பலன் எல்லா பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!” என்றார். “அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா” என்று பிரார்த்தித்தார். லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண பெண்ணிற்காக முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே உட்சான்று இருக்கிறது.
“தத்யாத் தயாநுபவனோ” என்கிற ஸ்லோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும், உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் அருள் எனும் மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்த ஸ்லோகத்தில். இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலட்சுமிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஒரு அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லையின் வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.
இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்திற்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பெயரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் பொன்மழை என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான். ஆதிசங்கரர் முதன் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆதிசங்கரரின் அன்பு, அந்த பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் வறுமை நீங்கி, தர்ம நியாயமாக வாழ்க்கை நடத்துவதற்குக் குறைவில்லாதபடி செல்வம் கிடைக்கும்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை நிர்மாணித்த வித்யாரண்யர்
விஜய நகர சாம்ராஜ்யம் அமையக் காரணமானவரே வித்யாரண்யர். சந்நியாசியான வித்யாரண்யர். சந்நியாசம் ஏற்றுக் கொள்பவர்கள் அனைவருமே தமக்கென எதுவுமே வேண்டாம் என்று சபதம் செய்து விட்டே சந்நியாசம் ஏற்றுக் கொள்வர். ஆனால், இவர் சந்நியாசி ஆனதே வித்தியாசமான காரணத்திற்காகத்தான். வித்யாரண்யர் என்பது அவருடைய சந்நியாச ஆசிரமப் பேர், அதற்குமுன் அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை. அவர் பெரும் வறுமையில் இருந்தார். தன் கஷ்டமெல்லாம் தீரவேண்டும் எனில் அதற்கு ஒரே வழி திருமகளின் அருட்கடாட்சம் தன்மேல் பட வேண்டியது என தீர்மானம் செய்து திருமகளைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கி காட்சி தந்தாள் திருமகள். “அம்மா... அலைமகள் என்கிற தங்களின் பெயருக்கேற்றார்போல் தங்கள் பார்வையை அங்கே இங்கே என்று அலையவிடாமல், என் மேல் பதித்தீர்களானால் என்னுடைய வறுமையெல்லாம் தீர்ந்துவிடுமென்று வேண்டிக் கொண்டார்.’’
“இவ்வளவு கடுமையாக தவம் புரிந்து என்னை வேண்டினாய். அதற்காகவாவது நான் உனக்கு வரம் தந்துதான் ஆகவேண்டும். ஆனால், உன்னுடைய விதியில் இந்த ஜன்மாவில் உனக்கு வறுமைதான் என்று உள்ளது. அதை என்னால மாற்ற முடியாது. அதனால உன்னுடைய அடுத்த ஜன்மாவில் தங்கச் சுரங்கமாகவே செல்வம் தருகிறேன்! இப்போது வேறு ஏதாவது வரம் வேண்டுமென்றால் கேள்’’ என்றாள் திருமகள். வித்யாரண்யருக்கு திக்கென்றது. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற பருவத்திலேயே இந்த வறுமையை தாங்க முடியவில்லையே... இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்க வேண்டுமெனில் அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் செய்யும்படி ஆகிவிடுமே... இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமா என்று யோசித்தார். சட்டென்று ஓர் எண்ணம் அவர் சிந்தையில் உதித்தது.
ஒருவர் சந்நியாசம் ஏற்றுக்கொண்டார் எனில், அது அவருடைய இரண்டாவது ஜென்மா என்று சாத்திரம் கூறுகிறது. நாம் உடனே சந்நியாசம் ஏற்றுக் கொண்டுவிட்டால் இந்த ஜென்மா முடிந்து அடுத்த ஜென்மா எடுத்துக் கொண்டதாக ஆகிவிடும். அதன்பின் மகாலட்சுமி நமக்கு வரம் தருவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது! என்று தோன்றியது அவருக்கு. ‘‘தாயே மகாலட்சுமி நான் இந்த நொடியே சந்நியாசம் பெறுகிறேன். அதன்பின் இது என் இரண்டாவது ஜென்மாவாக ஆகிவிடும். அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைத் தா!’ என்று கேட்டார், வித்யாரண்யர். மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமாக மாறிற்று. மலைமலையாக பெரும் தங்கக் குவியல் அவரைச் சுற்றி இருந்தது. பார்த்தார் வித்யாரண்யர். அவரின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது.
“ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைத்தும் இதில் ஒரு தூசியைக்கூட தொட முடியாதபடிக்கு சந்நியாசம் வாங்கி விட்டோமே... சந்நியாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? திருமகள் சொன்னபடி அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை அனுபவித்திருக்கலாம். இப்போது திருமகளை, தெய்வத்தை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். சரி, நடந்ததை மாற்ற முடியாது. இனிமேலாவது நல்லபடியா நடக்க ஏதாவது செய்வோம் என்று நினைத்து கண்ணுக்கு எட்டின தொலைவில் யாராவது தென்படுகின்றனரா என்று பார்த்தார். கொஞ்சம் தொலைவில் குறும்பர்கள் அதாவது, ஆடு, மாடு மேய்க்கின்ற இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். துங்கபத்ரா நதியின் கரையில் ஒரு ராஜாங்கத்தை நிறுவி அதற்கு அவர்கள் இருவரையும் ராஜாக்களாக ஆக்கினார்.
செல்வம் முழுவதையும் அவர்களிடம் தந்து, மாலிக்காபூரின் படையெடுப்பால் சிதைந்து போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச் சொன்னார். அன்றைக்கு அவர் நிறுவியதுதான், விஜயநகர சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த இரண்டு ராஜாக்கள். அதன்பின் வித்யாரண்யர் சந்நியாச ஆஸ்ரமத்திலேயே இருந்து கொண்டு. நான்கு வேதங்களுக்கும் அர்த்தம் எழுதினார்.
யாருக்கு எப்போது எதைக் கொடுத்தால் நல்லது? எந்த சமயத்தில் தந்தால், அது அவர்களுக்கு பயன்படக் கூடியதாக இருக்கும்? கேட்டதைத் தருவதா, கேட்காததைக் கொடுப்பதா? இதெல்லாம் இறைவனின் தீர்மானப்படி நடந்தால் நல்லது. நாம கேட்கலாமே தவிர, பகவான் கொடுப்பதை மனப்பக்குவத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Follow Us