அனைத்து உயிர்களும் இன்பம் வேண்டுகின்றன. துன்பம் வேண்டும் உயிர் எதுவும் கிடையாது.

இருந்தும், துன்பம் வரத்தான் செய்கிறது.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, ஏமாற்றங்கள், தோல்விகள், கண்ணீர், என்று ஏதோ ஒன்று அவ்வப்போது தலை காட்டித்தான் போகிறது.

இன்பம் எவ்வளவு வந்தாலும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

துன்பம் வந்தால் ?

கொஞ்சம் துன்பம் வந்தாலும் துவண்டு போகிறோம்.

ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்துகிறோம் ? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன், எனக்கு ஏன் இது வர வேண்டும் என்று அங்கலாய்கிறோம்.

எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன், நினைக்கிறேன், கோவில் குளங்களுக்குப் போகிறேன், பூஜை புனஸ்காரங்கள் செய்கிறேன்...இருந்தும் எனக்கு ஏன் இந்த சோதனை என்று வருந்துகிறோம்.

சாத்திரங்கள் எல்லாம் பொய்யா ? இதுக்கெலாம் ஒரு அர்த்தம் இல்லையா , கடவுள் ஒன்று   இல்லையா என்று கூட சந்தேகம் வருகிறது.

யாரிடம் போனால் துன்பம் தீரும் என்று பார்க்கிறோம்.

கொஞ்ச பேர் வருந்துவார்கள், பின் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் சில பேர், "நல்லா வேணும் " என்று உள்ளுக்குள் மகிழக் கூட மகிழ்வார்கள்.

யார் துணை ?

நம் சமய இலக்கியங்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்ள நம்மை பக்குவப் படுத்துகின்றன.

பொதுவாக இலக்கியங்களையும், குறிப்பாக சமய இலக்கியங்களையும் படிக்கும் போது , துன்பம் என்பது ஏதோ நமக்கு மட்டும் வருவது அல்ல, நம் துன்பம் ஒன்றும் அப்படி பெரியது அல்ல, இதைவிட பெரிய பெரிய துன்பங்களை மனிதர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அவற்றிற்கு முன்னால் என் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற ஆறுதல் பிறக்கும்.

மேலும், துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற எண்ணம் வரும். துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் வரும்.

நோய் என்றால் துன்பம். நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவம் என்கிறார் திருவள்ளுவர்.

உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

துன்பம்     வரும்போது அதை அமைதியோடு ஏற்றுக் கொள்வதுதான் தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது ? 
துன்பம் வந்து விட்டால் என்ன செய்வது ?

சரி, துன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எனக்கு துன்பம் தா என்று யாராவது வேண்டுவார்களா ?

என்னை கத்தியை எடுத்து வெட்டு, எனக்கு சூடு போடு என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டுவார்கள்.

அப்படி வெட்டுவதன் மூலமும், சூடு போடுவதன் மூலமும் அதை விட பெரிய துன்பம் தீரும் என்றால்.

மருத்துவரிடம் போய் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுக்கிறோம். என்னை வெட்டு, அறு , ஊசியால் குத்து , தையல் போடு என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி செய்வதற்கு பணம் தருகிறோம். செய்து விட்டால் மருத்துவருக்கு நன்றி சொல்கிறோம்.

ஏன், அறுக்கும், வெட்டும், ஊசி குத்தும் துன்பங்கள், அவற்றை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கும் என்பதால்.

இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த துன்பங்கள், அவற்றை விட  ஒரு பெரிய துன்பத்தில் இருந்து உங்களை காக்கும் என்றால், வந்த துன்பத்தை  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா ?

இறைவன் நமக்குத் துன்பத்தை தருகிறான் என்றால், அதை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கிறான் என்று பொருள். அதற்காக அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சொன்னார் - குலசேகர ஆழ்வார்.

பாடல்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

வித்துவ கோட்டத்தில் உள்ள பெருமாளே, நீ எனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும், அந்த துன்பங்களை தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன் என்கிறார். மருத்துவன் அறுத்து சுட்டாலும், அவன் மேல் மீளாத காதல் கொண்ட நோயாளன் போல, நீ எனக்கு துன்பங்களைத் தந்தாலும், அதற்கான உன் அருளையே நான் நினைப்பேன் என்கிறார். 

பொருள்

வாளால் அறுத்துச் = கத்தியால் அறுத்து

சுடினும் = புண் புரையோடாமல் இருக்க சூடு வைத்தாலும்

மருத்துவன் பால் = மருத்துவன் மேல்

மாளாத = தீராத

காதல் = காதல் கொண்ட

நோயாளன் போல் = நோயுள்ளவனைப் போல்

மாயத்தால் = மாயத்தால்

மீளாத் துயர் தரினும் = இறுதியே இல்லாத துயரை நீ தரினும்

வித்துவக்கோட்டம்மா நீ = வித்துவக் கோட்டத்தில் உள்ள பெருமானே

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே! = உன் அருளையே நான் அதில் பார்ப்பேன்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வாசியுங்கள். வாழ்க்கையில் துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, தாங்கிக் கொள்வது என்று புரிபடும்.