""செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே!''
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.
பிரகார தெய்வங்கள்
வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.
உண்டியல் மண்டபம்
கோயிலுக்குள் செல்லும் பக்தர்களில் ஒருவர் விடாமல் உண்டியல் செலுத்த சென்று விடுவார்கள். தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள், ""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,''என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவர் நம்மிடமிருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். "காவாளம்' எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப் படுவர். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி, பெரும் தொகை, நகைகளுடன் உள்ளே சென்றுவிட்டால், அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும்.சில பக்தர்கள் தங்கள் நகைகளை உண்டியல் முன்னால் நின்று கழற்றிப் போடுவதாக நேர்ச்சை செய்துகொள்வர். இந்த நேர்ச்சையை "நின்றபடியே உருவிப்போடுதல்' என்பர். தெலுங்கில் இதை "நிலுவு தோபிடி' என்பார்கள். உண்டியல் மண்டபத்தை "பரகாமணி மண்டபம்' என்பர்.
வரதராஜ சுவாமி சன்னதி
திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
யோக நரசிம்மர் சன்னதி
முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந் துள்ளது. இவரை கிரிஜாநரசிம்ம சுவாமி என்று அழைப்பர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப் பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற் களாக இருக்கின்றன.
கருடாழ்வார் சன்னதி
வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்ஸவ கொடியேற்றும்போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்க பட்டிருக்கும். இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத் தால் நோய், நொடி எதுவும் வராது என்பது நம்பிக்கை. வெங்கடாசல பதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்துசெல்வார்கள். அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார்.
ராமானுஜர் சன்னதி
சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே, ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை, "பாஷ்யக்காரர் சன்னதி' என அழைக் கிறார்கள். ராமானுஜர் திருமலைக்கு வந்தபோது, பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம்புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண் டில் இவரது சன்னதி அமைக்கப் பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சங்கீர்த்தன பண்டார அறை
ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் "தலப்பாகமரா' எனப்படும் "சங்கீர்த்தன பண்டார' என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். "தலப்பாக' கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக இதற்கு "சங்கீர்த்தன பாதுகாப்பு அறை' என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும், அவரது மகன், பெயரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். தென்னிந்திய இசைக் கலைக்கு இவர்களது பாடல்கள் மகுடம் சூட்டுவது போல் உள்ளன.
மடப்பள்ளி
பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறையை "பொட்டு' என்று சொல்கிறார்கள். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். அவளை "பொட்டு அம்மா' என்கிறார்கள். இதற்கு "சமையலறை பெண்மணி' என்பது பொருள். இவளை "மடப்பள்ளி நாச்சியார்' என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம், பணியாரம், லட்டு, வடை, அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறையை "படிப்பொட்டு' என அழைக்கிறார்கள்.
திருப்பதியில் ஆண்டுதோறும் குவியும் முடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும்.... அப்பாடா! கொஞ்சம் மூச்சு விட்டு படியுங்கள்! ரூ.100 கோடி. டிக்கட் விற்பனை மூலமும் ரூ. 100 கோடி கிடைக்கிறது. உண்டியல் அல்லாத நன்கொடை வருமானம் மட்டும் ரூ.100 கோடி. இங்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் குடும்பத்துடன் (ஐந்து பேர்) வந்து வி.ஐ.பி., காட்டேஜ்களில் இலவசமாகத் தங்கி சுவாமியை சிறப்பு தரிசனம் செய்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு வஸ்திரமும், ஆறு லட்டுகளும் வழங்கப்படும். ஐந்து லட்சம் முதல் பத்துலட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் மூன்று நாட்கள் தங்கி வஸ்திரம், பத்து மகாபிரசாத பாக்கெட், 10 சிறிய லட்டு பெற்றுக் கொள்ளலாம். பத்துலட்சத்துக்கு அதிகமாக நன்கொடை செலுத்துவோர் 5 பேர் கொண்ட குடும்பமாக ஐந்து நாட்கள் தங்கி சுவாமியை வழிபடலாம். அர்ச்சனைக்கு பிறகு நடக்கும் பூஜையை இவர்கள் பார்க்க அனுமதியுண்டு. முதல் தடவை வரும்போது ஐந்து கிராம் தங்க காசு, தங்கமுலாம் பூசிய வெள்ளி பதக்கம் ஆகியவை தரப்படும். ஆண்டுதோறும் பத்து மகாபிரசாதம் பாக்கெட் மற்றும் 20 சிறிய லட்டுகள் வழங்கப்படும். இந்த நன்கொடைக்கு வருமானவரி விலக்கும் உண்டு. திருப்பதியில் காட்டேஜ்கள் கட்டவும் விதிகளின் அடிப்படையில் நன்கொடை வழங்கலாம். இவர்கள் திருப்பதியில் ஆண்டில் ஒரு மாதம் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால், ஒரே சமயத்தில் பத்துநாட்களுக்கு மேல் தங்க முடியாது. திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நூலகம் 1993ல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்நூல்கள் இருக்கும்.
பிரார்த்தனை
செல்வச்செழிப்புக்காகவும், பிறப்பற்ற நிலை வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்
முடி காணிக்கை, அங்கப்பிரதட்சணம், மலையேறி பெருமாளை சேவித்தல்.
தலபெருமை
யார் பொறுமைசாலி:ஒரு முறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது, பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும், என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்.... இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.
முனிவரின் சோதனை
பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக்கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார்.பக்தனை வரவேற்கான பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு,சிலோகம் சென்றார்.சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டு மென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.
பத்மாவதி பிறப்பு
பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.
வேடனாக வந்த சீனிவாசன்
பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார்.
கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.
அதிகாலையில் எழும் சீனிவாசன்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம்' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220 இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை' என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா' என மாறிவிட்டது.
கொலுவு தர்பார்
ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முதல் மணி
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.
இரண்டாவது மணி
இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.
சகஸ்ரநாம அர்ச்சனை
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம்' என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.
சகஸ்ர தீப அலங்கார சேவை
ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.
ஆபரணம் இல்லாத நாள்
வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு' என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.