Sri Mahavishnu Info: Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 16 Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 16

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 16

Sri Mahavishnu Info

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 16
அலங்கார ஆயுதம்!

ராமர் கண்ணன் போன்ற அவதாரங்களால் முடிக்கப்பட்டு பிற்பாடு சாப விமோசனம் ஏற்பட்டு பிறகு மறுபடியும் அவர்கள் ஜெயவிஜயர்களாகவே பிறந்தார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவன் அல்லவா ஹிரண்யன். பொன்னை உருக்கி வார்த்தாற்போலே உருவம் கொண்டவன். மிகவும் சிறந்த பலம் படைத்தவன். அவன் பிரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி, நீண்ட வரங்களைப் பெற்றிருக்கிறான். அகோர தபஸ் செய்தான். பிரம்மா வந்து “என்ன வேணும்"னு கேட்டார். “எனக்கு எதாலும் மரணம் கூடாது. மனுஷனால் கூடாது. மிருகத்தால் கூடாது. ஆகாசத்தில் கூடாது. பூமியில் கூடாது. உள்ளே கூடாது. வெளியில் கூடாது. பகல் பொழுதில் கூடாது. ராத்திரியில் கூடாது. பிராணன் இருக்கும் ஆயுதத்தால் கூடாது. பிராணன் இல்லாத ஆயுதத்தால் கூடாது." இதைவிட என்ன மிச்சம் இருக்கிறது? எல்லாவற்றையுமே கேட்டுவிட்டான். பிரம்மா பயந்தே போய்விட்டார். ‘அப்படியானால் இவனை என்ன அழிக்கவே முடியாதா?’ என்று. நல்ல வேளையாகக் கடைசியாக ஒன்று கேட்டான்: பிரம்மனே, உன்னால் படைக்கப்பட்ட எதுவும் என்னைக் கொல்லக் கூடாது" என்று கேட்டான்.

பெருமூச்சு விட்டார் பிரம்மா. ‘நல்ல வேளை. என்னால் படைக்கப்பட்டதுதானே கொல்லக் கூடாது? என்னைப் படைத்தவர் கொல்லலாம் அல்லவா!’ என்று. அவர்தான் பூவில் நான் முகனைப் படைத்ததேவன். திருவனந்தபுரத்துக்குப் போனால் அனந்த பத்மநாப சுவாமியை சேவிக்கிறோம். அவருடைய நாபி கமலத்திலிருந்து பிரம்மா தோன்றுகிறார். ‘பூவில் நான்முகனைப் படைத்த தேவன்’ என்பது ஆழ்வாரின் பாசுரம். மேற்கொண்டு எல்லா தேவதைகளையும் படைப்பதற்காக நாபி கமலத்தில் பிரம்மாவை பகவான் படைத்தார். நான்முகன் மேற்கொண்டு மற்றபேர்களையெல்லாம் படைக்கிறார் என்கிறது உபநிஷதம். அப்படியானால் அனைவருக்கும் முழு முதற்கடவுள் பகவான்.

திருமாலின் மார்பில் ஸ்ரீமகாலட்சுமி இருப்பதைப் பார்த்தவுடனேயே வேதாந்தம் விசாரத்தை முடித்துக் கொண்டுவிட்டது. ‘இனி விசாரம் செய்வதற்கு எதுவும் இல்லை. இவர்தான் பரதேவதை. இவர் தான் சர்வாதிகன்’ என்று. திருமாலின் மார்பில் மகாலக்ஷ்மி இருக்கும் தழும்பைப் பார்த்தவுடனேயே வேதாந்தம் தன் விசாரத்தை முடித்துக்கொண்டுவிட்டதாம்.

பொன் வண்ணத்தில் இருக்கும் திருமகளை, கருநீல வண்ணனாகிய திருமால் மார்பில் தரித்தாராம். கருநீலத்துடன் சிவப்பான ஒன்றை சேர்த்தால் அழகிய வர்ண சேர்க்கை உண்டாகும். ‘🌷வீங்கோத வண்ணன்’🌷 என்கிறார் ஆழ்வார். பிராட்டி எழுந்தருளியிருப்பது ஒரு அழகு. அவள் சிவந்த நிறம் கொண்டவள்.

பகவானோ ஓத வண்ணன். அதாவது கருநீலவண்ணன். சிவப்பையும் கரு நீலத்தையும் சேர்த்தால் வர்ண சேர்க்கை எப்படி இருக்கும்? நாம் புடைவை, வேட்டி சட்டை ஆகியவற்றை எந்தெந்த வர்ணங்களில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வர்ண சேர்க்கை உள்ளது அல்லவா? கருப்பா உள்ளவர்களும் வெளுப்பா உள்ளவர்களும் அதற்குத் தகுந்தாற் போன்ற வர்ணத்தில்போட்டுக் கொள்ள வேண்டும். இடுப்புக்குக் கீழேயும் மேலும் உள்ள உடைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும்போதும் அதற்குத் தகுந்த வண்ணத்தில்தான் சேர்க்க வேண்டும்.

முண்டாசு ஒரு நிறத்தில் இருந்தால் அங்க வஸ்த்திரம் வேறு நிறத்தில் இருக்க வேண்டும். அததற்குத் தகுந்த வர்ணம் இருந்தால்தானே எடுக்கும்? அதே போலத்தான் இங்கும். பெருமாள் நீல வர்ணத்தில் இருக்கிறார். பிராட்டி செக்கச் செவேல் என்று இருக்கிறாள். அது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறதாம்? தங்கத் தகட்டில் வைரத்தைப் பதித்து அட்டிகை செய்தாற்போலே இருக்கிறதாம்! அது மாதிரி ஆச்சர்யமாக இருக்கிறதாம்.

அந்த எம்பெருமானின் பலத்தை... சக்தியை என்னவென்று சோல்வோம்! ஒரு நிமிஷநேரத்துக்குள் ஹிரண்யனையே முடித்துவிட்டான் அல்லவா நரசிம்மப் பெருமான்? அந்தத் தழும்பை சேவிப்போம். இந்தப் பாசுரப்படி மூன்று தழும்புகள் உள்ளன. ஒன்று திருத்தோள்களில் வில்லை ஏந்தி ஏந்தி, அந்த நாணினுடைய சொரசொரப்புத் தழும்பு. இரண்டாவது சகடாசுரனை முடித்தபடியால் திருவடிகளில் இருக்கும் தழும்பு. மூன்றாவது பெரிய பிராட்டியாரை மார்பிலே அமர்த்தி அமர்த்தி அதனால் ஏற்பட்ட தழும்பு. இப்படிப்பட்ட லக்ஷ்மி நரசிம்மனை நாம் வணங்குவோம் - என்று பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதிப் பாசுரத்தில் தெரிவிக்கிறார்.

அதே ஆழ்வார் அதே திருவந்தாதியில் அடுத்தொரு பாசுரத்தில் என்ன விண்ணப்பிக்கிறார் தெரியுமா?

புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி
அரியுருவம் ஆளுருவம் ஆகி எரியுருவ வண்ணத்தான்
மார் பிளந்த மாலடியை அல்லால்
மற்றெண்ணத்தானாலாகுமோ இமை?

லக்ஷ்மி நரசிம்மருடைய திருவடிகளைத் தவிர மற்றொரு திருவடி நமக்கு ஒருநாளும் தஞ்சமாகாது என்பது முதலாழ்வாருடைய பாசுரம். புரி ஒரு கை பற்றி என்றால் வலம்புரி சங்கை ஒரு கையில் ஏந்தி என்று பொருள். சங்கை இடது கையாலே பற்றியிருக்கிறார். வலக்கையில் பொன்னாழி அதாவது பளபளப்பான சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார். ஆயிரம் சூரியர்களை ஒரே சமயத்தில் எரித்தால் என்ன ஒளி இருக்குமோ அந்த அளவு பளபளப்பு உள்ளது சக்கராயுதம். ‘அரியுரவம் ஆளுருவம் ஆகி’ என்றால் சிங்கத்தின் உருவமும் மனிதனின் உருவமும் கொண்டு என்ற பொருள். எரிகின்ற நெருப்பைப் போன்ற உருவம் படைத்த ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தாராம். அப்படிப்பட்ட பெருமானின் திருவடியை இமைப் பொழுதாவது எண்ணத் தோன்றுமோ? இமை என்பதை இமைப் பொழுது அல்லது அல்பக்ஷணம் என்று இங்கே கொள்ள வேண்டும்.

நரசிம்மப் பெருமான் சங்கு சக்கரம் பிடித்துக் கொண்டிருந்தாரா அதை வைத்துக்கொண்டுதான் கொன்றாரா என்ன? ஏன் முதல் ஆழ்வார் இதைப் பாசுரத்தில் சொல்கிறார்?

இன்றைக்கு நாம் எங்கு சேவித்தாலும் அந்தப் பெருமான் சங்கு சக்கரத்துடன்தான் இருக்கிறார்! ஆனால் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காக வந்தபோது சங்க சக்கரத்துடன் வந்தாரா? வந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இரண்டு திருக்கைகளோடு இருந்திருக்கலாம். நான்கு திருக்கைகளோடு சேவை சாதித்திருக்கலாம். ஏனெனில் கண்ணன் அவதரித்த போதே நான்கு திருத்தோள்களோடுதான் அவதரித்தார்.

பாகவதத்தில் சுகாச்சாரியார் பரீட்சித்துக்கு சொல்லும்போது, ‘சங்கு சக்கர கதையுடன் நான்கு தோள்களுடன் அவதரித்தார் என்றும் தேவகியும் வசுதேவரும் சேவித்தார்கள்’ என்றும் சொல்கிறார். அவர்கள் பயப்பட்டதனால் அதிகப்படியான இரண்டு தோள்களை மறைத்துக்கொண்டு சாமான்ய உலகக் குழந்தையைப் போல் சாதாரணமாகக் காட்சி அளித்தாராம்.

அதேபோலவே ஒருவேளை நரசிம்மப் பெருமானும் நான்கு தோள்களுடன் சங்க சக்கரங்களைப் பற்றியிருந்திருக்கலாம். அவற்றை வைத்துக்கொண்டு இந்த அவதாரத்தில் என்ன செய்தார் என்று கேட்டால், அலங்காரத்துக்குப் பிடித்துக் கொண்டிருந்தார் என்றார் ஆழ்வார். ஆயுதமாக அல்ல! அலங்காரமாக. நீங்கள் எங்கு லக்ஷ்மி நரசிம்மனை சேவித்தாலும் சங்கு சக்கரத்தை வைத்திருப்பார்.

இதை ஏன் அவர் பயன்படுத்தவே இல்லை? ஹிரண்யகசிபுவை சக்கராயுதம் விட்டுக் கொன்றிருக்கலாம் அல்லவா? ஏன் நகத்தால் கொன்றீர்கள் என்று கேட்டால், அவன்தான் வரம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறானே? ‘பிராணன் இருக்கும் எதுவும் என்னைக் கொல்லக்கூடாது, பிராணன் இல்லாத எதுவும் என்னைக் கொல்லக்கூடாது’ என்று கேட்டிருக்கிறானே. சங்கு சக்கரம் இரண்டும் பிராணன் இல்லாத ஆயுதங்கள். எனவே, அவற்றை உபயோகப்படுத்தவில்லை. நகத்தை வைத்து மார்பைக் கிழிக்கும்போது கரகரவென்று சத்தம் வருகிறதல்லவா? கூரத்தாழ்வார் அந்த சத்தத்தை வைத்தே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். கரகரவென்று கிழிந்து ரத்தம் பீறிட்டு மேல்நோக்கி எழுந்ததாம்.

நகத்தாலே மரணம் சம்பவிப்பதை மட்டும் ஒத்துக் கொண்டானா ஹிரண்ய கசிபு? நகத்துக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒரு தன்மை வெட்ட வெட்ட வளர்தல். அப்படியானால் உயிர் இருக்கிறது என்று அர்த்தம். வெட்டினால் வலிக்கவில்லை அல்லவா? உயிர் இல்லை என்று அர்த்தம்.

வைபவம் வளரும்...

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்