Sri Mahavishnu Info: Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 22 Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 22

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 22

Sri Mahavishnu Info

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 22
அம்மான்!

பெருமாள் காரியமெல்லாம் தாயாரிடத்தில் ஒன்றும் செல்லுபடியாகாது. நாம் இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பெருமாளுடைய காரியம் சுமாராத்தான் செல்லுபடியாகும்! பிராட்டி நினைப்பதுதான் எப்போதும் நிறைவேறும்!

பங்குனி உத்திரத் தன்றைக்குப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சேர்த்தி நடக்கிறதல்லவா? அப்போது ஸ்ரீரங்கத்தில் பார்த்தீர்களானால், ஸ்ரீரங்க நாச்சியார் உட்கார்ந்திருப்பாள். நம்பெருமாள் நின்று கொண்டிருப்பார். எப்போதுமே யார் உட்கார்ந்திருக்கிறார்களோ அவர்கள்தானே ஆணையிடப் போகிறார்கள் என்று அர்த்தம்! யார் நின்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் வேலை செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம்.

இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா! அமரிக்கையா அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்க நாச்சியார். நடத்துவதற்காக… ஆணையை நிறைவேற்றுவதற்காக… நம்பொருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிக்கிறார்கள் அல்லவா? அவள் ஆசைப்பட்டபடியெல்லாம்.அவர் நடத்தி விடுகிறார். ஆனால் ஒரு விஷயம் தெரியுமா? அவர் திருவுள்ளத்தில் என்ன ஆசை இருக்குமோ அதைத்தாள் இவள் பேசுவாள்! அதுதான் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை. இவள் பேசினால் அவர் செய்து முடித்துவிடுவார். அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் இவர் பேசுவார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை. அதன் பெயர்தான் ஒற்றுமையான தாம்பத்யம்.

நம்மையெல்லாம் தம்பதிகள் என்பார்கள். ஆனால் பெருமாளையும் பிராட்டியையும் திவ்ய தம்பதிகள் என்பார்கள். ஏனெனில், அவர் நினைப்பதை அவள் பேசுகிறாள்; அவள் பேசுவதை அவர் செய்துவிடுகிறார் அல்லவா! அந்த லக்ஷ்மி நரசிம்மனான பெருமானின் திருவடிகளை நாம் பற்றுவோம்.

இவர் கோபமே வடிவெடுத்திருந்தாலும், அவள் கருணையே வடிவெடுத்தவளாக இருப்பதால் அந்த பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு இவரே ஸ்வாதந்த்ரியத்தை இழந்துவிட்டார். அவளைப் போலவே ஆகிவிட்டார். கோபத்தை மறந்து இவரே கருணை வள்ளலாக இருக்கிறார். அப்படிப்பட்ட பெருமாளைப் பற்றாமல் போய் ஹிரண்யன் தவறிழைத்தான். லக்ஷ்மி நரசிம்மனாகிய பெருமானின் திருவடிகளே அமிர்தம். சம்சாரம் என்பது பெரும் விஷம். சம்சாரம் என்னும் பெரும் பாம்புக்கும் அமிர்தமாகவே லக்ஷ்மி நரசிம்மன் இருக்கிறான். இது பூதத்தாழ்வாருடைய பாசுரம்.

அடுத்ததாக, ஐப்பசி மாதத்திலே சதய நட்சத்திரத்திலே, மைலாப்பூரிலே திரு அவதாரம் செய்த பேயாழ்வார் சாதிக்கிறார்.
அங்கற்கிடரின்னி அந்திப் பொழுதத்து
மங்க இரணியன் தாகத்தை
பொங்கி அரியுருவமாப்பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து

ஒருத்தர் நரசிம்மப் பெருமான். ஹிரண்ய கசிபுவை முடித்தவன். இன்னொருத்தன் கண்ணன். அவன் கரியுருவன் கொம்பொசித்தான். அதாவது, குவலயா பீடம் என்ற யானையை வதைத்தவன். கொம்பொசித்தான் என்றால் தந்தத்தை முறித்தான் என்று அர்த்தம் அல்லவா? அங்கே அரியுருவமாக முடித்தான். இங்கே கரியுருவத்தை முடித்தான். அரியுருவமே கரியுருவத்தை முடித்தது என்கிறார் ஆழ்வார். அரி என்றால் சிங்கம். கரி என்றால் யானை. சிங்கத்துக்கு யானையைக் கண்டாலே பிடிக்காதல்லவா? சிங்கமும் யானையும் ஜென்மப் பகை அல்லவா?

ஆனால், நரசிங்க அவதாரத்தில் யானையைக் கொன்றதாக நாம் படித்ததில்லையே! கேள்விப்பட்டதில்லையே? கிருஷ்ணாவதாரத்தில்தான் குவலயா பீடம் என்ற யானையைக் கொன்றார் என்று தெரிகிறது. அப்படியானால் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? பழைய அவதார வாசனை! அந்த நரசிம்மனே கண்ணனாக அவதாரம் பண்ணியிருக்கிறார். அப்போதே யானையைக் கொன்றிருக்க வேண்டும். விட்டு விட்டு விட்டு இந்த அவதாரத்தில் ஒரு வழியாக் கொன்றிருக்கிறார். சிங்கம் என்றால் யானையைக் கொன்றிருக்க வேண்டுமல்லவா? பழைய ஞாபகத்தில்தான் இப்போது கொன்றிருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அங்கற்கிடறின்றி என்பதில் அங்கன் என்றால் மகன் என்று அர்த்தம். ஹிரண்யகசிபுவின் அங்கத்திலிருந்து தோன்றியவன். ‘அங்கஜ’ என்பார்கள். எனவே, அங்கன் என்று பெயர் கொடுத்தார். அங்கற்கிடறின்றி என்றால் அந்தக் குழந்தை பிரஹ்லாதனுக்கு எந்த ஓர் இடருமில்லாமல் - அதாவது ஒரு கஷ்டமும் வராமல், அந்திப் பொழுதத்து என்றால் மாலைப் பொழுதில் பெருமாள் தோன்றினார். எப்போதும் நரசிம்மப் பொருமானுக்கு எது சொன்னாலும் மாலைப் பொழுது முக்கியமல்லவா? அவரை மாலை வேளையிலும் ஸ்தோத்திரம் பண்ண வேணும். ஏனென்றால் அவர் அவதாரம் பண்ணினதே மாலைப் பொழுதில்தான்.

ராமாவதாரம் பகல் அவதாரம். கிருஷ்ணாவதாரம் ராத்திரியில் பண்ணினார் - இருட்டோடு இருட்டாகக் கரிய உருவத்தில் பிறந்து மறைந்து ஒளிய வசதியாக! பகலில் பிறந்திருந்தால் கம்சன் உடனே கண்டுபிடித்துவிடுவான். ராத்திரியிலேயே கிளம்பிப் போய்விட்டான். எனவே, கண்ணன் இருளன்ன மாமேனி வண்ணன். வெய்ய கதிரோன் குலத்திற்கோர் விளக்கு என்பது ராமரின் பெருமை. சூரிய குலத்தவன் என்பதால் ராமர் பகலில் அவதாரம் செய்தார்! கண்ணன் பிறந்தது சந்திர குலத்தில். சந்திரன் உலவும் இரவு வேளையில் அவதாரம் பண்ணினார்.

நரசிம்மர் என்ன செய்தார்? அதுதான் ஹிரண்யன் வரம் கேட்டிருக்கிறானே! உள்ளே மரணம் கூடாது. வெளியில் மரணம் கூடாது. மனிதரால் மரணம் கூடாது. விலங்கினால் மரணம் கூடாது. பகலில் மரணம் கூடாது. இரவில் மரணம் கூடாது. என்றெல்லாம் கேட்டிருக்கிறான் அல்லவா? அவர் உள்ளேயும் உட்கார்ந்து கொள்ளவில்லை, வெளியிலும் உட்கார்ந்து கொள்ளவில்லை. ரேழியில் உட்கார்ந்து கொண்டார். இடை கழி என்று சொல்வோமல்லவா. அந்தப்பகுதி தான் ரேழி. நரங்கலந்த சிங்கமாய் இருந்ததால் மனிதனும் அல்ல. மிருகமும் அல்ல. சாயங்காலத்தில் தான் கிழித்தார். பிராணன் இருக்கும் ஆயுதமும் இல்லை. பிராணன் இல்லாத ஆயுதமும் இல்லை. ஆகாயத்திலும் இல்லை பூமியிலும் இல்லை. நகத்தையே ஆயுதமாக வைத்துக் கொண்டுவிட்டார்.

அவர் நினைத்தாராம். தன்னுடைய பிள்ளை பிரம்மா. அவன் ஒன்றை சொல்லிவிட்டான். அதிலிருந்து துளியும்மாறக் கூடாதாம். ஒன்றுகூட வீணாய்ப் போய்விடக் கூடாதாம். எனவே ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பிறக்கிறாராம். பெருமாள் பிறவியே இல்லாதவன். அப்படி இருக்கும்போது, தன் பக்தனுக்காக எத்தனை பாடுகள் பட்டு சிரமங்களுடன் பிறக்கிறார் பாருங்கள்! நாம்தான் கர்மாதீனமா மிகுந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பிறக்க வேண்டும். அவர் பிறக்கவே வேண்டாம். இருந்தாலும் ஆசையாகப் பிறக்கிறார். அப்படி இச்சாதீனமாய் பிறப்பதற்கு இத்தனை சட்டம். இவ்வளவு நியமங்கள்!

அது மட்டுமில்லாமல் அங்கற் கிடறின்றி… குழந்தையாகிய... பிள்ளையாகிய பிரஹ்லாதனுக்கு சிரமம் இல்லாமல், அந்திப் பொழுதத்து அதாவது, மாலைப் பொழுதிலே, மங்க இரணியனதாகத்தை அதாவது இரணியன தாகத்தை மங்க என்று நாம் படிக்க வேண்டும். இரணியனின் உடம்பு மங்கிப் போகும்படி என்று அர்த்தம். பொங்கி அரியுருவாப்பிளந்த அம்மானவனே. பொங்கி, அதாவது கோபத்துடன் பொங்கி எழுந்து, அம்மான் அதாவது ஸ்வாமி. அவனே அம்மான். நமக்கு ஸ்வாமி. ஒரு குழந்தைக்கு இடர் வந்ததென்றால் பெருமாள் பொறுத்துக் கொண்டிருப்பதில்லை. யானைக்கு இடர் ஏற்படுகிறது என்று கஜேந்திரவரதன் ஓடோடி ரக்ஷித்தான். ஒரு சிறுவனான, அசுரனாகிய ஹிரண்ய கசிபுவின் குழந்தைக்கு இடர் ஏற்பட்ட அன்றும் ஓடோடி வந்தான். பெற்ற தந்தையே கைவிட்டாலும் எல்லாருக்கும் தந்தையான பகவான் கைவிடுவதேயில்லை!

வைபவம் தொடரும்...

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்