Sri Mahavishnu Info: Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 25 Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 25

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 25

Sri Mahavishnu Info

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 25
பிரம்மாவின் பாட்டி!

நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கொண்டு, இப்போது நரசிம்மப் பெருமானை அனுபவிக்க வேண்டும். நரசிம்மாவதாரம் என்பதே ஓர் அடியவனுக்காக ஏற்பட்டது. பிரஹ்லாதன் தன் தந்தையிடமே அபசாரப்பட்டான். தன் பக்தன் பட்ட அபசாரத்தைப் பொறுக்க முடியாமல், ‘ஸ்தம்பே சபாயாம் ன ம்ருகம் ன மானுஷம்’ அதாவது சபையிலே... ராஜ சபையிலே… தூணிலிருந்து தோன்றினான்.

மிருக உருவமும் இல்லாமல், மனித உருவமும் இல்லாமல் நரம் கலந்து சிங்கமாகத் தோன்றினான். ஏன்? மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ, உயிருள்ள ஆயுதத்தாலோ, உயிரற்ற ஆயுதத்தாலோ, தனக்கு மரணம் நேரக்கூடாது என்று, பிரம்மாவிடம் தான் பெற்ற வரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ஹிரண்யனை மாய்க்க. அந்த நம்பிக்கையைக்கூட, பிரம்மாவைப் படைத்த ஸ்ரீமன் நாராயணனிடம் வைக்கவில்லை அவன்! அதைத்தான்,

வரத்தினில் சிரத்தைமிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்

என்கிறார் திருமழிசையாழ்வார். வரத்தினில் சிரத்தை வைத்தான். ஆனால், அந்த வரம் மட்டுமே போதாது. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ராமரைக் குறிக்கப் பின்வரும் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பரர்தி, பரம ஸ்பஷ்ட, துஷ்ட, புஷ்ட, சுபேக்ஷண, ராம, விராம.

விராமம் என்றால் ஓய்வு. (விடுமுறை) பள்ளிக்கூடம் பத்து மாதங்கள் நடக்கிறது. இரண்டு மாதங்கள் ஓய்வு. அதைப் போன்றுதான் விராமம் என்பது. யார் ஓய்வெடுத்துக் கொள்வார்களாம்? பகவான் வந்து நம்மை ரக்ஷிக்க வேண்டும் என்றாலோ சிக்ஷிக்க வேண்டும் என்றாலோ, வரம் பெற்றவன் வரம் கொடுத்தவன், கொடுக்கப்பட்ட வரம் மூவருக்கும் ஓய்வு. ராவணன் வரம் பெற்றான். அதற்காக? இல்லை! ராவணனே உயிரிழந்து போனான். ராவணன் சாகமாட்டான் என்னும் வரம் பிழைத்ததா? அதுவும் போய்விட்டது! ஏனெனில் அவனுக்குப் பிராணன் போய்விட்டது. வரம் கொடுத்தவராவது நிலைத்தாரா? அதுவும் இல்லை. இவை எல்லாமே ஓய்வெடுக்கப் போய்விடுமாம்.

ராமனுக்கு முன்பாகவும் நரசிம்மனுக்கு முன்பாகவும் வந்தால், வரமும் நிற்காது. வரத்தைப் பெற்றவனும் நிற்க மாட்டான். வரத்தைக் கொடுத்தவனும் நிற்கமாட்டான்.

வேதாந்த தேசிகன் காமாசிகாஷ்டகம் என்ற அற்புதமான பிரபந்தம் பாடியிருக்கிறார். வேளுக்கை ஆளரி பெருமாளுக்காகப் பாடினார். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பல திவ்ய தேசங்கள் உள்ளன. பெருமாளும் திவ்ய தேசங்களை சட்டென்று சௌகர்யமாக சேவித்துவிட்டு வரும் படியாகத்தான் அமைத்திருக்கிறார். அவர் ஒருவேளை நூறு நூறு மைல் தள்ளி ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் அமைத்திருந்தாரானால் அடியார்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்.

நீங்கள் காஞ்சிபுரத்துக்குச் சென்றால், ஒன்றரை இரண்டு நாட்களுக்குள், பதினைந்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். சீர்காழிக்குப் போனால் ஒன்றரை இரண்டு நாட்களுக்குள் பதினைந்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். மதுரைக்குப் போனால், இரண்டு நாட்களுக்குள் பத்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஒரே நாளுக்குள் பத்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். அதை விட்டுவிட்டு, தமிழகத்தின் வரைபடத்தைப் பிரித்துப் போட்டு, நூறு நூறு மைல் இடைவெளி விட்டு, பெருமாள் அவற்றை அமைத்திருந்தாரானால், நாம் அங்கு போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

அவருக்கும் தெரிகிறது; நாம் அருகருகில் அமைத்தாலன்றி, இவன் வரமாட்டான் என்று ஏற்பாடு செய்திருக்கிறார். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பல திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில் வேளுக்கை என்பது ஒரு திவ்ய தேசம். ஆளரி - அதாவது நரசிம்மப் பெருமானாக சேவை சாதிக்கிறார். எம்பெருமானுக்கு சமஸ்கிருதத்தில் ஸ்தோத்திரம் பண்ணினார் ஸ்ரீவேதாந்த தேசிகர்.

‘நீ ரக்ஷிக்கிறேன் என்று வரும்போது, வேறு யாரும் ரக்ஷிக்கிறேன் என்று வர வேண்டிய தேவை இல்லை. அதேசமயம், நீ சிக்ஷிக்கிறேன் என்று - அதாவது தண்டிக்கிறேன் என்று வந்தாயானால், நான் யாரை ஒத்தாசைக்குக் கூட்டிக் கொண்டு வந்தும் பிரயோஜனம் இல்லை.’

உண்மைதானே? பெருமாள் சிக்ஷிக்கிறேன் என்று வரும்போது, இந்திரனைத் துணைக்கு அழைக்கிறேன் என்றோ, பிரம்மாவைத் துணைக்கு அழைக்கிறேன் என்றோ அழைத்து ஜெயிக்க முடியுமா? அல்லது, பெருமான் ரக்ஷிக்கிறேன் என்று வரும்போது, வேறு யாரையாவது அழைத்து, ‘ஸ்வாமி பெருமாள் ரக்ஷிக்கிறேன் என்று வந்திருக்கிறார். நீரும் கொஞ்சம் ஒத்தாசைக்கு வந்து ரக்ஷியுங்களேன்’ என்று துணைக்கழைப்போமா? அது பைத்தியக்காரத்தனம். எம்பெருமான் ரக்ஷிக்க வேண்டும் என்று வந்துவிட்டால், வேறு ஏதும் தேவை இல்லை. சிக்ஷிக்க வந்தால், அந்த வரங்கள் ஓய்வு பெற்றுவிடுகின்றன.

அதைத்தான் ‘விராம:’ என்ற ஆச்சர்யமான திருநாமத்தாலே பார்த்தோம்.
தேசிகர் சாதிக்கும்போது, ‘பெருத்த அசுரன்... பொன் பெயரோனான ஹிரண்ய கசிபு... அவனுடைய அரண்மனையில் இருக்கும் தூண்... பிதாமஹி ஆயிற்று’ என்றார். பிதாமஹி என்றால், பாட்டி என்று அர்த்தம். தூண் பாட்டியாகிவிட்டது என்கிறார். தூண் எப்படி பாட்டியாகும்? தூண் என்பது அஃறிணை. அது போய்த் தாத்தா பாட்டியாகவெல்லாம் ஆகுமா? என்றால், உலகத்துக்கே தாத்தா யாரோ அவருக்குத் தாத்தா - அதாவது, பிதாமஹர் என்பது பிரம்மாவுக்குப் பெயர். பிரம்மாவைப் படைத்தவன் பகவான். ‘நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்று திருமழிசை ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.

நாராயணாத் பிரம்மா ஜாயதே
நாராயணாத் ருத்ரோ ஜாயதே

என்று உபநிஷதங்கள் ஓதுகின்றன. ஆக, நாபி கமலத்தில் பிரம்மாவைப் படைத்தவன் திருமால். அவர் தந்தை யார். அந்த பகவானே இப்போது இந்தத் தூணுக்குள் கர்ப்பமாக இருக்கிறார் அல்லவா! அப்படியானால் பெருமாளுக்குத் தாயார் இந்தத் தூண்தானே? பிரம்மாவுக்குத் தகப்பனார் பெருமாள். பெருமாளுக்குத் தாயார் இந்தத் தூண். அப்படியானால் தூண் பாட்டிதானே?

வைபவம் தொடரும்...

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்