மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 17
துரோணர் ஏகலைவனை பார்த்து என்னை குருவாக எண்ணுகிறாயா என்று கேட்டார். அவன் துரோணருடைய பாதங்களில் வீழ்ந்தான். அவனுடைய கண்களில் தண்ணீர் வழிந்தது தங்களுடைய அருளால் தாங்கள் எனக்கு குருவானீர்கள் என்று ஏகலைவன் தெரிவித்தான். எனக்கு குரு தட்சணை தருவாயா என்று கேட்டார் துரோணர். குரு தட்சணை கேட்பதன் வாயிலாக நீங்கள் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டீர்கள். நான் பாக்கியவான் ஆனேன். என்னுடைய அனைத்தும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் என்று ஏகலைவன் துரோணரிடம் தெரிவித்தான். உன்னுடைய வலக்கை கட்டை விரலை தட்சணையாக நான் வேண்டுகிறேன் என்றார் துரோணர். உடனே குருவின் மீதுள்ள பக்தியின் வேகத்தால் ஏகலைவன் தன்னுடைய வலது கை கட்டை விரலை வெட்டி இரத்தம் சொட்ட துரோணரின் பாதங்களின் முன் சமர்ப்பித்தான். ஏகலைவன் குருவின் மீது வைத்த பக்தியின் உண்மை அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் வில் வித்தைகள் மற்றும் தனூர் வேதத்தின் மேலான ரகசியங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகியது. கொடூர செயல் போல தெரியும் இந்த நிகழ்வைப்பற்றி துரோணாச்சாரியார் சில அடிப்படை கோட்பாடுகளை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜீவாத்மாவும் நிறைஞானம் வாய்க்கப்பெற்றவர்களே. அதனை தக்க முறையில் நாடினால் அது உள்ளத்திலிருந்து வெளியாகின்றது. அந்த தத்துவத்தின் படி ஏகலைவனும் குரு பக்தி மூலம் தக்க முறையில் நாடி வில்வித்தைகளையும் தனுர் வேதத்தையும் அடைந்தான். குருபக்தியின் வாயிலாக ஏகலைவன் வில்வித்தையில் அர்ஜூனனைவிட மேலானவன் ஆகின்றான். அவனுடைய கட்டை விரலை கேட்டு அவனுடைய வில்வித்தையை பாழ்படுத்தியது போல பார்ப்பதற்கு தோன்றலாம். ஆனால் ஏகலைவனின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ய அவனது குருவாய் எமக்கு சூழ்நிலை அமைந்தது. தனுர் வேதத்தைக் கற்றுக்கொண்டால் அந்த வேதத்தின் நியமங்களை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்கவில்லை என்றால் அது வேதத்தைக்கற்றவரை மேன்மை நிலையிலிருந்து கீழ் நிலைக்கு தள்ளி விடும். பெற்ற ஞானங்கள் அனைத்தும் மறந்து போகும். வேடுவனாய் இருக்கும் ஏகலைவன் வேதத்தின் நியமங்களை கடைபிடிக்கும் சூழ்நிலை அவனுக்கு இல்லை. இப்போது அவன் குருபக்தியின் விளைவாக தனுர் வேதத்தை கற்றவனாகின்றான். குருவிற்கு தனது விரலை வெட்டி காணிக்கை கொடுத்ததின் விளைவாக மேலும் இறை ஞானத்தை பெற்றவனாகின்றான். குருவாய் அவனுக்கு தேவையானதை அவனுக்கு செய்து விட்டேன். ஏகலைவனின் குரு பக்தியை உலகம் அறிந்து கொள்ளும். அவன் புகழ் நிடுழி பல்லாண்டு காலம் இருக்கும் என்று அனைவரிடமும் சொல்லி முடித்தார்.

தம்முடைய சிஷ்யர்கள் வில்வித்தையில் அடைந்திருந்த திறமையை சோதிக்கும் பொருட்டு துரோணாச்சாரியார் ஒருநாள் அம்மாணாக்கர்களுக்கு இடையில் பரிட்சை ஒன்று வைத்தார். குருவும் சிஷ்யர்களும் மரச்சோலையில் கூடினர். மரக்கிளைகளின் இடையே அடர்ந்து வளர்ந்திருந்த பச்சை இலைகளுக்கு இடையில் உலர்ந்து போன சில இலைகள் ஒன்றுபட்டு ஒரு பறவை போல தென்பட்டன. அதனை துரோணாச்சாரியார் சிஷ்யர்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலே முக்கோணம் போன்று தென்படுகின்ற மரக்கிளையை பாருங்கள் அதற்குள் ஒரு சிறிய பறவை ஒன்று அமர்ந்திருப்பது போன்று தென்படுகிறது பாருங்கள் என்று கூறினார். அனைவருக்கும் அக்காட்சி தெரிந்தது. ஒவ்வொருவராக அப்பறவையின் மீது குறிவைத்து வில்லில் அம்பை பூட்ட வேண்டும். அதன் பிறகு தான் கேட்கின்ற கேள்விகளுக்கு விடை கொடுக்க வேண்டும். தாம் ஆணையிடுகின்ற போது அந்த பறவை போல் இருக்கும் குறியின் மீது அம்பை விட வேண்டும் என்று மாணாக்கர்களுக்கு கூறினார்.