மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 20
கல்வி அறிவிலும் வில் வித்தையிலும் கர்ணன் கொண்டிருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் சூதபுத்திரன் என்னும் நாமம் அவனுடைய ஆர்வத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. அவனை வாட்டி வந்த இந்த பெயரை முன்னிட்டு கர்ணன் தன்னை ஒரு கீழோனாக ஒருபோதும் கருதவில்லை. தன்னை ஓர் சூத்திரியனாகவே எண்ணிக்கொண்டான். தனுர் வேதத்தில் பிரசித்தி பெற்ற பார்க்கவ ரிஷியை பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது. பிறகு அந்த எண்ணம் உறுதியாக நிலைத்து அவரை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான். பார்க்கவ ரிஷி சூத்திரியர்களுக்கு வித்தைகளை கற்றுக்கொடுப்பதில்லை பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தார். தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதில் கர்ணனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அவரிடம் தன்னை ஒரு பிராமணன் என்று பொய் கூற தீர்மானித்தான். ஞான வேட்கையை முன்னிட்டு கல்வி கற்கவும் வில்வித்தையை கற்கவும் பொய் கூறுவதில் குற்றமில்லை என்று அவன் எண்ணினான்.

கர்ணன் தன்னை ஒரு பிராமண இளைஞன் என்று பார்க்கவ ரிஷியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன் விளைவாக அவன் அக்கணமே தங்குதடையின்றி மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். வில்வித்தைக்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என கர்ணன் தன்னை நிரூபித்தான். சில ஆண்டுகளாக அவன் குருகுல ஆசிரம வாசத்தில் இருந்து அனைத்தையும் கற்று தலை சிறந்த மாணவனாக திகழ்ந்தான். பார்க்கவரிஷி கர்ணனுக்கு பிரம்மாஸ்திரம் உட்பட பல மந்திரசக்தி வாய்க்கப்பெற்ற அஸ்திரங்களை கற்றுக் கொடுத்தார். கல்வியை பூர்த்தி செய்த பொழுது குருவானவர் சீடனுக்கு உபதேசம் செய்தார். தகுதி மிக வாய்க்கப் பெற்ற மாணாக்கன் என உன்னை நீ நிரூபித்துள்ளாய். என் வசம் இருக்கும் ஞானம் அனைத்தையும் நான் உனக்கு கற்பித்து உள்ளேன். நீ சத்தியம் பேசுபவனாகவும் முதியோர்கள் இடத்தில் வணக்கம் மிக படைத்தவனாகவும் இருக்கின்றாய். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நீ பெற்றுள்ள ஞானத்தை பயன்படுத்துவாயாக என்று கூறினார்.

ஒரு நாள் நண்பகலில் பார்க்கவரிஷி சிறிது நேரம் கர்ணனின் மடிமீது தலைவைத்து படுத்திருந்தார். அப்பொழுது கர்ணனுடைய தொடையை வண்டு ஒன்று கடித்தது. அதன் விளைவாக ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது. குருவின் தூக்கத்திற்கு பங்கம் ஏற்பட கூடாது என்று கர்ணன் வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ரிஷியின் உடம்பில் இரத்தம் பட்டு அவரது தூக்கம் கலைந்தது. தன் உடம்பில் ரத்தம் பரவியதற்கு என்ன காரணம் என்று கர்ணனிடம் கேட்டார். அப்போது கர்ணன் தனது தொடையை வண்டு ஒன்று குடைந்தது என்றும் அதன் விளைவாக இரத்தம் வழிந்து தங்கள் உடலில் பட்டு தங்களது தூக்கம் கெட்டது தன்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான். அதற்கு அவர் வண்டு கடித்ததும் நீ ஏன் கத்தி குதித்து எழவில்லை என்று கேட்டார். தங்கள் உறக்கத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதை பொறுத்து வலியை தாங்கிக் கொண்டேன் என்றான்.