மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 22
துரோணாச்சாரியார் பெரிய விளையாட்டுப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார். தம்முடைய சிஷ்யர்களின் விதவிதமான ஆற்றல்களை மக்களிடையே விளம்பரப்படுத்துவது அவரின் நோக்கமாக இருந்தது. பீஷ்மரும் திருதராஷ்டிரனும் துரோணரின் செயலை முற்றிலும் ஆமோதித்தனர். விளையாட்டு பந்தயத்திற்கு ஏற்ற மேடை ஒன்று அதிவிரைவில் தயார் செய்யப்பட்டது. இந்த நாளிலே அக்கம் பக்கத்தில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு வந்து கூடினர். ராஜ குடும்பத்தாருக்கு ஏற்ற மேடை ஒரு பக்கம் அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு என்றும் முக்கியமான பிரமுகர்கள் என்றும் அடுத்த பக்கத்தில் மற்றொரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியாரின் மகனான அசுவத்தாமன் ஆகியோர் விளையாட்டு அரங்கத்தில் முதலில் பிரசன்னமானார்கள். இவர்களை திருதராஷ்டிர மன்னன் வரவேற்றான். அது ஒரு கவர்ச்சிகரமான காட்சியாய் இருந்தது. ராஜகுமாரர்கள் ஒருவர் பின் ஒருவராக அரங்கத்தில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களும் முறையாக ஆச்சாரியார்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஒவ்வொரு ராஜகுமாரனும் எந்தெந்த ஆயுதப்பயிற்சி பெற்று இருந்தார்களோ அந்தந்த கலைகளை எல்லாம் அவனவன் நன்கு பிரயோகித்து காட்டினான். அவர்கள் காட்டிய பயிற்சி திறமையை பார்த்து மக்கள் திகைத்துப் போயினர்.

துரியோதனனுக்கும் பீமனுக்கும் நிகழ்ந்த கதாயுதப் போராட்டம் அனைவர் உள்ளத்திலும் பதைபதைப்புடன் கவர்ந்தது. சிரமம் ஏதுமின்றி மிகவும் லாவகமாக அவர்கள் இருவரும் கலைத் திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டாக துவங்கிய போராட்டம் வம்புச்சண்டை வடிவெடுக்கும் அறிகுறிகள் தென்பட்டன. அந்த நெருக்கடியில் அசுவத்தாமன் இருவருக்கும் இடையில் நுழைந்து அந்த விளையாட்டு வீரர்களை பிரித்து வைத்தான். திருதராஷ்டிர மன்னனுக்கு கண் பார்வை இல்லை ஆகையால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை விதுரர் அவருக்கு விளக்கி வந்தார். தன் கணவன் நிலைக்கு ஏற்றபடி தன் கண்ணை துணியால் கட்டிக் கொண்டிருந்த காந்தாரி மகாராணிக்கு குந்தி அங்கு நிகழ்ந்தவைகளை விளக்கிக் கொண்டிருந்தாள். எங்கு திரும்பி பார்த்தாலும் எல்லோருடைய முகத்திலும் குதுகலமே ததும்பிக் கொண்டிருந்தது.

கடைசியில் மேடையின் மீது அர்ஜுனனை அறிமுகப்படுத்தி வைப்பது துரோணாச்சாரியார் மிக்க மகிழ்வு கொண்டிருந்தார். சிஷ்யனும் வில்வித்தையில் தனது திறமையை மிக அற்புதமாக செய்து காட்டினான். அவனைப் பாராட்டிய போது வானளாவிய ஓலமிடுதல் உச்ச நிலைக்கு சென்றது. இதற்கு காரணம் என்ன என்று விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்து விளங்கினார். அப்பொழுது அவனுக்கு தன் தம்பியாகிய பாண்டுவின் புதல்வர்களை குறித்து பொறாமை உண்டாயிற்று. ஆனால் மற்றவர்களை போன்று தாமும் அதனை பாராட்டி அவர் பாசாங்கு செய்தார். அன்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் அர்ஜுனனே தலை சிறந்தவன் என்று எல்லோரும் முடிவு செய்தனர்.