மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 24
கர்ணன் தன்னோடு தனியாக போட்டி போடும் படி அர்ஜுனனை அறை கூவினான். இருவரும் போட்டி போட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் கிருபாச்சாரியார் மேடைமீது தோன்றினார். இருவருக்கிடையில் நடக்கும் போட்டிக்கு உரிய சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும் என்றார். மேலும் அர்ஜுனன் பிரசித்தி பெற்ற குரு வம்சத்திற்குரிய ராஜகுமாரன். அவன் பாமரனோடு போட்டியிட மாட்டான். ஆகவே நீ உன்னுடைய வம்சத்தைப் பற்றி விளக்குவயாக என்றார். கர்ணனுடைய தலை கவிழ்ந்தது. ஏனெனில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்த ராஜகுமாரனும் இல்லை.

நடந்தவைகள் அனைத்தையும் கவனித்து வந்த துரியோதனன் அர்ஜுனனை எதிர்த்து நிற்க ஒருவன் இருக்கிறான். அவனுடன் நட்பை உண்டாக்கி அர்ஜூனனை எதிர்க்க உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி போட்டி மேடைமீது வந்தான். மூன்று வித அரசர்களை அறநெறி அங்கீகரிக்கிறது. பிறப்பில் வேந்தன், பராக்கிரமத்தை முன்னிட்டு வேந்தன், வெற்றியை முன்னிட்டு வேந்தன் ஆகிய மூன்று வித வேந்தர்களை தர்மம் ஏற்றுக்கொள்கிறது. பராக்கிரமத்தை முன்னிட்டு இந்த இளைஞனை அரசனாக அங்கீகரித்து கொள்ளதகுதி வாய்ந்தவன் ஆகின்றான். ஆனால் அர்ஜூனனை எதிர்த்து போட்டியிட வந்திருப்பவன் ஒரு நாட்டுக்குரிய அரசனாக இருக்கவேண்டும் என்று இங்கு இருப்பவர்கள் வற்புறுத்துவார்கள் எனில் அந்த நிபந்தனையை இப்பொழுதே நிறைவேற்றுகின்றேன். என்னுடைய கட்டுப்பாட்டில் அரசன் இல்லாமல் இருக்கும் அங்க நாட்டுக்கு கர்ணனை அரசனாக முடி சூட்டுகிறேன் என்று அறிவித்தான். முடிசூட்டு விழா அப்பொழுதே அங்கு நடத்தப்பட்டது. தன்னுடைய கீரிடத்தை எடுத்து துரியோதனன் கர்ணனுடைய தலையில் வைத்தான். தன் உடைவாளை எடுத்து புதிதாக அரசனாக முடி சூட்டப்பெற்ற கர்ணனுடைய வலக்கையில் வைத்தான். அங்கு கூடியிருந்த பலபேர் ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்த பொருத்தமான செயலை பெரிதும் பாராட்டினார்கள்.

அப்போது கையில் கழி ஒன்றைப் பற்றிக்கொண்டு வயதானவர் ஒருவர் தள்ளாடி மேடையில் ஏறினார். கர்ணனுடைய வளர்ப்புத் தந்தையாகிய அதிரதன் தான் அப்படி வந்தவர். ஆகையினால் அவருடைய வளர்ப்பு மகனான கர்ணன் விரைந்து ஓடி தான் புதிதாகப் பெற்ற அரசபதவிக்கான கீரிடத்தை தந்தையின் பாதங்களில் வைத்து வீழ்ந்து வணங்கினான். அப்பொழுது அதிரதன் கர்ணனை பார்த்து என் அருமை செல்வா கர்ணா நெடுநாட்களுக்கு பிறகு உனக்கு சௌபாக்கியம் வாய்த்திருப்பதை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ராஜகுமாரனாகிய துரியோதனனை நான் போற்றுகின்றேன் என்றார். கர்ணன் சூதபுத்திரன் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தது.

பாண்டவர்களுக்கு இப்பொழுது உற்சாகம் ததும்பியது. அப்போது பீமன் தேரோட்டி மகனே கையில் சாட்டையை எடுத்து கொண்டு உன்னுடைய தொழிலை செய்வாயாக. அர்ஜுனனுடன் போட்டி போட தகுதி வாய்ந்தவன் நீ இல்லை என்றான். கர்ணனுடைய முகம் வாடியது. உணர்ச்சியினால் தூண்டப்பட்டு துடித்தான். ஆயினும் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அமைதியுடன் தான் வணங்கும் தெய்வமாகிய சூரிய பகவானை வானத்தை நோக்கி உற்று நோக்கினான். ஆனால் அதே சூரிய பகவான் தான் தனது தந்தை என்பது அவனுக்கு தெரியவில்லை. குந்திதேவி மட்டுமே அந்த உண்மையை அறிந்திருந்தாள் அந்த நெருக்கடியான நேரம் அவளுக்கு மிக்க துக்கத்தை விளைவித்தது.