மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 3
கிருஷ்ணன் அர்ஜுனன் பீமன் மூவரும் ஜராசந்தனைப் பற்றி கூறியவற்றைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் ஜராசந்தனை கொல்வதற்கு அனுமதி வழங்கினான். இப்பொழுது கிருஷ்ணனும் பீமனும் அர்ஜுனனும் வழிப்போக்கர்கள் போன்று மாறுவேடம் அணிந்து ஜராசந்தன் இருக்கும் மகத நாட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அரண்மனைக்கு சென்று ஜராசந்தனை துவந்த யுத்தத்திற்கு வரும்படி அழைத்தனர்.

மூவரையும் பார்த்த ஜராசந்தன் பீமனே மூவருள் என்னுடன் சண்டையிட தகுதியானவன் என்று கூறி பீமனோடு சண்டையிட துணிந்தான். இருவருக்குள் சண்டை நெடுநேரம் நிகழ்ந்தது. பிறகு பீமன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து தரையில் போட்டான். ஆனால் இரண்டாக கிழிந்த ஜராசந்தனின் இரண்டு பகுதிகளும் மீண்டும் ஒட்டிக்கொண்டது. ஜராசந்தன் உயிர் பெற்று எழுந்து புதிதாக சண்டையிட துவங்கினான். இருவருக்குள் சண்டை நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் வைக்கோல் ஒன்றை எடுத்து அதை இரண்டாக கிழித்து அதனை மாற்றி தரையில் போட்டான். அதை பார்த்த பீமனுக்கு விஷயம் விளங்கியது. அவன் ஜராசந்தனை மீண்டும் இரண்டாக கிழித்து உடலை மாற்றி போட்டான். இப்போது கிளிந்த இரண்டு பகுதிகளும் ஒட்டவில்லை அத்தோடு ஜராசந்தன் அழிந்தான்.

சிறையிலிருந்த அனைத்து ராஜகுமாரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஜராசந்தனின் மகன் மகத நாட்டிற்கு அரசனாக்கப்பட்டான். சண்டையில் வெற்றி வீரர்களாக மூவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அவர்களின் பராக்கிரமத்தை பெரிதும் பாராட்டினான். மகத நாட்டில் தாங்கள் புரிந்த வீரச் செயலை துவாரகா வாசிகளுக்கு எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் துவாரகாவிற்கு புறப்பட்டான்.

ராஜசூய யாக்ஞம் சிறப்பாக நடைபெற பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஆகிய யுதிஷ்டிரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசைகளில் சென்று ஆங்காங்கு இருந்த அரசர்களின் நட்பையும் செல்வத்தை பெற்றார்கள். எடுத்த காரியம் நன்கு நிறைவேற்றப் பெற்று நால்வரும் தங்கள் தலைமை பட்டணத்திற்கு வெற்றியுடன் திரும்பினார்கள். அரசர்கள் அனைவரும் ராஜசூய யாக்ஞத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்த முதியோர்களும் தாயாதிகளும் அந்த யாக்ஞத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தம் சொர்கம் போன்று இருந்தது. ராஜசூய யாக்ஞம் அற்புதமாக நிறைவேறியது. பாண்டவர்களிடம் மேன்மையும் மகிமையும் மிளிர்ந்தது. இதன் காரணமாக கௌரவர்களிடம் வெறுப்பும் பொறாமையும் உருவெடுத்தது. ராஜசூய யாக்ஞம் இனிது நிறைவேறியது. வந்திருந்த விருந்தினர்களுக்கு வந்தனையும் வழிபாடும் செலுத்துவது கடைசி நிகழ்ச்சி ஆகும்.