துரோணர் கூறியதை கேட்ட யுதிஷ்டிரன் ஆச்சாரியாரே தங்களை யாரும் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அப்படி இருக்க நாங்கள் எப்படி இந்த யுத்தத்தில் தங்களை வெற்றி பெறுவோம் என்று கேட்டார். நீ சொல்வது சரியானதே. ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் போது என்னை யாரும் வெல்ல முடியாது. ஆனால் என்னை துக்கத்தில் ஆழ்த்தும் செய்தி ஏதேனும் சத்தியம் தவறாதவன் சொல்ல கேட்டு நான் மனம் குழம்பினால் அப்போது என்னுடைய ஆயுதங்கள் எனக்கு பயன்படாது போய் விடும். அப்போது நான் தோற்கடிக்கப்படுவேன் என்று கூறினார். யுதிஷ்டிரன் மீண்டும் தரையில் விழுந்து வணங்கினான். அதுபோலவே கிருபரிடமும் யுத்தம் செய்ய அனுமதி வேண்டிப் பெற்றான். பிறகு தமது இடம் சென்று போர்க்கோலம் பூண்டு யுத்தத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.
தவிர்க்க முடியாத யுத்தம் தொடங்கியது. முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப்படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் ஒருவனோடு ஒருவன் முறை இல்லாமல் போரிடுவது சங்குல யுத்தம் ஆகும். இருதரப்பு படைகளும் மோதின. கடலில் உருண்டோடி வருகிற ஒரு அலை மற்றொரு அலையின் மீது மோதுவது போன்று இரண்டு பக்கங்களிலும் உள்ள சேனைகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. அதனால் விளைந்த ஆரவாரம் மிகப்பெரியதாக இருந்தது. வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர். யானைப்படையும் குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. ஒளிர்கின்ற வால் நட்சத்திரங்கள் போன்று அம்புகள் பறந்தன. அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது. வீரர்கள் ஈட்டி, கத்தி, கதை, வளைதடி, சக்கரம் கொண்டு போரிட்டனர். குடும்ப பந்த பாசங்களை மறந்துவிட்டு அவரவர்கள் சுற்றத்தாரை எதிர்த்துப் போராடினார்கள்.
பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். இவருடைய ரதம் சென்ற இடங்களிலெல்லாம் சேனைகள் அணியணியாக வீழ்ந்தது. யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கம் அர்ஜுனுடைய மைந்தனாகிய அபிமன்யு பாராட்டத்தக்க முறையில் எதிரிகளைத் தாக்கினன். விராடனுடைய மைந்தனாகிய உத்தரனும் சல்லியனும் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்தார்கள் அதன் விளைவாக உத்தரன் கொல்லப்பட்டான். அதனால் கோபமடைந்த அவனுடைய தம்பி சுவேதன் சல்லியன் மீது விரைந்து சென்று தாக்கினான். அவனுடைய பராக்கிரமத்தை இரு அணியினரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால் பீஷமர் சுவேதனை ஒரே அடியில் வீழ்த்தினார். சுவேதன் மரணம் பாண்டவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கௌரவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். முதல் நாள் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனார்கள். அந்த யுத்தம் கௌரவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் பாண்டவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணுவதாகவும் முடிவடைந்தது. யுத்தத்தில் நடந்தவைகள் அனைத்தும் சஞ்சயன் மூலமாக திருதராஷ்டிரர் தெரிந்து கொண்டர்.
Follow Us