அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். அர்ஜூனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். எனவே சகடவியூகம் மகர வியூகம் பத்ம வியூகம் என மூன்று விதமான வியூகங்களை வகுத்தார். இந்த மூன்று வியூகங்களும் விண்ணவர்களே வந்தாலும் அசைக்க முடியாது.
துரியோதனனின் தனது திட்டத்தில் ஒன்று ஜயத்ரதனை அன்று மாலை வரை தன் முழு படைபலம் கொண்டு காக்க வேண்டும். அல்லது அன்று மாலை வரை அவனை மறைத்து வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அர்ஜுனன் சபதத்தில் தோற்பான். அர்ஜுனனை எதிர்த்து போரிடுவதை விட ஜயத்ரதனை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தனர்.
ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் விற்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன்.
பதினான்காம் நாள் யுத்தம் துவங்கியது. கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜூனன் கண்கள் சிவக்க மனதில் வெறி கொண்டு மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க காண்டீபத்துடன் போர்க்களத்திற்குள் வந்தான். துரியோதனன் தன் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ஜூனனை நோக்கி அனுப்பினான். நேற்று அபிமன்யூவின் வீரத்தை கண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத துர்மர்ஷணன் அர்ஜுனனை கண்டு புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ஜூனனை எதிர்த்தான். துச்சாதனன் படைகளை அனைத்தையும் அர்ஜூனன் அழித்தான். அர்ஜூனனை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்று அவனும் கௌரவ பாசறைக்கு திரும்பினான்.
ஜயத்ரதனை தேடிச் சென்று வியூகத்தை உடைக்க அர்ஜூனன் முன்னேறினான். அர்ஜூனனை துரோணர் தடுத்து போரிட்டார். துரோணரை பொருட்படுத்தாமல் தன் தாக்குதலின் வலிமையை காண்பித்தான் அர்ஜூனன். துரோணரால் அர்ஜூனனை தடுக்கமுடியவில்லை. மேலும் முன்னேறினான். அதைக்கண்ட துரியோதனன் துரோணரை பார்த்து அர்ஜுனனை உங்களால் தடுக்க முடியவில்லை. நீங்கள் படை தளபதியாக இருக்க தகுதி அற்றவர் என்று கடுமையாக சாடினான். அதற்கு துரோணர் துரியோதனா அர்ஜூனனை ஜயத்ரதனை தேடி வேறு பக்கம் போக வைத்தால் யுதிஷ்டிரரை கைதியாக பிடித்து விடலாம் இதுவே எனது திட்டம் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
Follow Us