நாவை, ஆண்டவன் படைத்தது சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் மட்டும் அல்ல. அவன் நாமத்தை, அவனது பெயரை எப்போதும் நாம் உச்சரிக்கவேண்டும் என்று தான். ஆகையால் தான் நம்முடைய நா நாமோடு இருக்கிறதாம்.
‘கையெழுத்து போடுங்கள்’ என்றால் ‘ஆஹா பேனாவை எங்கேயோ வைத்து விட்டேன்’ என்று தப்பிக்கலாம். ‘இறைநாமம் சொல்லுங்கள்’ என்றால் ‘ஆஹா, நாவை எங்கோ கழற்றி வைத்துவிட்டேன்’ என்று தப்பிக்க முடியுமா? ‘புத்தகம் படியுங்கள்’ என்று அலுப்பேற்படுத்துகிற புத்தகம் கொடுத்தால் ‘கண்ணாடியைக் காணோமே’ என்று டபாய்க்கலாம். ஆனால் இறைநாமத்தைச் சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டுக்கொள்ளும்போது ‘என் நாவு எங்கே?’ என்று ஏய்க்க முடியாது. அதனால்தான் ‘நாவுண்டு நமோ நாராயணா என்ன’ என்கிறார் ஆழ்வார்.
எப்போதும் ‘ராம்… ராம்’ என்றதால்தான் இறுதி நேரத்திலும் ‘ஹே ராம்’ என்றார் மகாத்மா காந்தி!
நாம் எந்த பணியை செய்தாலும், ‘ராம, கிருஷ்ணா’ என்றோ, ‘ராம் ராம்’ என்றோ, என்றோ சொல்லியபடி தான் செய்யவேண்டும். சரி… அப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? இது தானே உங்கள் கேள்வி.
பக்த துக்காராம் அவர்களின் வாழ்வில் உண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை உங்களுக்கு கூறவிரும்புகிறோம்.
இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். “சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள்!” என்றாள்.
துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.
பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார்.
“உங்களில் வரட்டி தட்டும்போது, ‘விட்டல! விட்டல!’ என சொன்னது யார்?” என்றார்.
திருட்டுக் கொடுத்த பெண், “நான் தான் அவ்வாறு சொன்னேன்”, என்றாள். “அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. இடப்பக்கம் அவளுடையவை!” என்று கூறிவிட்டு, “திருடுவது மாபாவம். இனி அப்படி செய்யாதே” என்று திருடிய பெண்மணிக்கு அறிவுரை கூறினார்.
“ஒரு தொழிலைச் செய்யும் போது, கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது!!” என்றார்.
திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன், கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக, நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள். இப்போது புரிகிறதா அன்றாட வேலைகளை செய்யும்போது இறைவனின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் பலனை?
பகவந்த நாம ஸ்மரணையை “பவித்ரானாம் பவித்ரம்” - “புனிதமானதிலும் புனிதமானது” என்று சொல்லியிருக்கிறது.
பகவந் நாமத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லுவது தான் நாமாவளி.
திரும்ப திரும்பச் சொல்லும் வார்த்தைகளுக்கு என்ன சக்தி உண்டு என்று யாராவது கேட்டால் அவர்கள் அதன் விஞ்ஞான நுட்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள். ஒளி-ஒரு சக்தி. அதே போல ஒலியும் சக்தி.
பகவான் நாமாவை உரக்க உச்சரிப்பதால் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் மனம் பரிசுத்தமடைகிறது.
யோக முறைப்படி மூலாதாரத்திலிருந்து உருவாகும் ஒலி அலை உடம்பில் ஆறு சக்ர நிலைகளைக் கடக்கும் போது பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. நம் மனதை மூடியிருக்கும் பல்வேறு கர்ம வாசனைகளை இந்த ஒலி அலைகள் விலக்குகின்றன. மனம் பரிசுத்தடைகிறது சாந்தமடைகிறது.
Follow Us