பிறருக்கு ஏன் உதவ வேண்டும் ?
உண்மை உணர்த்தும் மகாபாரதக் கதை !

மத்தவங்களுக்கு உதவுறதா! மத்தவங்களைப் பத்தி நினைக்கக்கூட நேரம் எங்கே இருக்கு?’ என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத ஓர் ஓட்டப்பந்தயத்தில் நாம் எல்லோருமே ஓடிக்கொண்டேயிருக்கிறோம்,

அவரவருக்கான தேடல், தேவையின் பொருட்டு. அதிலேயே சுருண்டும் போகிறோம்.

இதில் பிறரைப் பற்றி அக்கறைகொள்ள நமக்கு நேரமே இல்லை என்பதே உண்மை.

ஆனால், சக மனிதர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யும்போதுதான் மனித வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது.

நம் சுயநலத்தை, சுய லாபத்தை நினைக்காமல், பிறருக்காக ஒரு காரியத்தைச் செய்தால் என்ன நடக்கும்... அதனால் யாருக்கு ஆதாயம்? விளக்குகிறது மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்தக் கதை.

அது ஒரு காலை நேரம். அஸ்தினாபுரம். தன் மாளிகை உப்பரிகையில் கிருஷ்ணரோடு நின்று பேசிக்கொண்டிருந்தான் அர்ஜுனன்.

வீதியில் நடந்து வருபவர்களைப் பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார்கள் இருவரும்.

திடீரென்று அர்ஜுனன், ``கிருஷ்ணா அங்கே பார்!’’ என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான்.

கிருஷ்ணர் பார்வையைத் திருப்பினார். அங்கே அந்தணர் ஒருவர், தன் மேல் துண்டை ஏந்தி யாரிடமோ யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.

``பார்த்தால் வேதம் கற்றவர்போல் தெரிகிறது. இவருக்கு ஏன் இந்த நிலை கிருஷ்ணா?’’

``அதுதான் விதி.’’

``நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவர் நிலையை மாற்றப் பார்க்கலாமா?’’

``முயற்சி செய்து பாரேன்...’’

அர்ஜுனன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. ஒரு சேவகனைக் கூப்பிட்டான்.

அந்த அந்தணரை அழைத்துவரச் சொன்னான். அந்தணர் வந்தார்.

சோர்ந்து போயிருந்தார். வயிறு ஒட்டிப்போயிருந்தது; கண்களிலேயே பசி தெரிந்தது.

அர்ஜுனன், ஒரு பை நிறைய பொற்காசுகளை நிரப்பி அவரிடம் கொடுத்தான்.

அந்தணர் மகிழ்ந்து போனார். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நன்றி சொல்லிவிட்டு வெளியே போனார்.

அர்ஜுனன் நிறைந்த மனத்தோடு கிருஷ்ணரைப் பார்த்து சிரித்தான்.

அன்று கிருஷ்ண பரமாத்மா சொன்ன விதி அந்தணரை விரட்டியது.

வீடு செல்லும் வழியில், ஒரு வனம் இருந்தது.

தனியாகச் சென்ற அந்தணர் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டார். பொற்காசுப் பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் அந்தத் திருடன்.

அடுத்த நாள் காலை.
முதல் நாளைப்போலவே கிருஷ்ணரும் அர்ஜுனனும் மாளிகை உப்பரிகையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தைப் பார்த்த அர்ஜுனன் அதிர்ந்துபோனான்.

அங்கே முதல் நாள் பார்த்த அதே அந்தணர், யாரிடமோ அன்றைக்கும் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.

சேவகனை அழைத்து அவரை அழைத்துவரச் சொன்னான் அர்ஜுனன்.

விசாரித்தான். ``என் தலையெழுத்து அப்படியிருக்கிறது.

நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை. அதுதான் உங்களிடம் வாங்கிய பொற்காசுகூட கொள்ளை போய்விட்டது...’’ கண்களில் நீர் துளிர்க்கச் சொன்னார் அந்தணர்.

அர்ஜுனனுக்கு அவர் பேசியதைக் கேட்டு இரக்கம் சுரந்தது.

விலையுயர்ந்த வைரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். ``அந்தணரே... கவனம்! இந்த முறையாவது இந்த வைரத்தை வைத்து, புத்திசாலித்தனமாகப் பிழைத்துக்கொள்ளும் வழியைப் பாரும்...’’ அவர் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

இந்த முறை இருட்டுவதற்கு முன்னரே வீடு திரும்ப முடிவு செய்தார்.

`இந்த வைரத்தை எப்படி விற்கலாம், யாரிடம் விற்கலாம், இதை வாங்கும் அளவுக்கு நம்மூரில் வியாபாரிகள் இருக்கிறார்களா, ஏனென்றால் அர்ஜுனன் கொடுத்த வைரமாயிற்றே..!’ என்றெல்லாம் யோசனை செய்தபடி நடந்து போனார்.

அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமில்லை. அந்தணருக்கு இப்போது
அந்த வைரத்தை எங்கே ஒளித்துவைப்பது என்கிற சங்கடம்.

அவர் வீட்டில் பாதுகாப்பான பெட்டிகளோ, அலமாரிகளோ இல்லை.

அப்போதுதான் ரொம்ப நாள்களாகப் பயன்படுத்தாத ஒரு மண் பானை இருப்பது நினைவுக்கு வந்தது.

அதில் வைரத்தை ஒளித்துவைப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்தார் அந்தணர்.

அந்தப் பானைக்குள் வைரத்தைப் போட்டுவைத்தார். அன்று இரவு நன்றாக உறங்கியும் போனார்.

அடுத்த நாள் காலை, அந்தணருக்கு முன்னதாகவே எழுந்துகொண்டாள் அவரின் மனைவி.

ஒரு பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு நீரெடுக்கச் சென்றாள்.

திரும்ப வரும் வழியில், ஓரிடத்தில் கால் தடுக்கி, பானையைக் கீழே போட்டுவிட்டாள். பானை உடைந்து போனது.

அப்போது அவளுக்கு வீட்டிலிருக்கும் பழைய
பானை நினைவுக்கு வந்தது.

வீடு திரும்பியவள், கணவர் வைரத்தைப் போட்டு வைத்திருந்த பானையை எடுத்துக்கொண்டு திரும்பவும் ஆற்றை நோக்கிச் சென்றாள். பானையைக் கழுவுவதற்காக தண்ணீருக்குள் அவள் பானையை அழுத்த, அதற்குள்ளிருந்த வைரம் ஆற்றுத் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது.

மூன்றாம் நாள். அதே அஸ்தினாபுரம். அன்றைக்கும் அந்தணர் யாசகம் கேட்பதைப் பார்த்து துடித்துப்போனான் அர்ஜுனன்.

அவரை அழைத்து விசாரித்தான்.

அவர் நடந்ததைச் சொன்னார். இந்த முறை அர்ஜுனனை முந்திக்கொண்டார் கிருஷ்ணர்.

இரண்டு செப்புக் காசுகளை எடுத்து அந்தணரிடம் கொடுத்தார்.

``போய் வாருங்கள் ஐயா..!’’ என்று அனுப்பிவைத்தார்.

``கிருஷ்ணா, பொற்காசுகளாலும் வைரத்தாலும் மாற்றியமைக்க முடியாத இவரின் வாழ்க்கையை, இந்தச் செப்பு காசுகளா மாற்றிவிடப் போகிறது?

எனக்கு நம்பிக்கையில்லை’’ என்றான் அர்ஜுனன்.

``பொறுத்திரு!’’

அந்தணர் மாளிகையிலிருந்து வெளியே வந்தார்.

அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கு மனம் ஒருபக்கம் உறுத்தியது.

`ஒருவேளை கிருஷ்ணரும் அர்ஜுனனும் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பார்களோ..!’ என்றெல்லாம் எண்ணம் ஓடியது.

கால்போன போக்கில்
நடந்தார் அந்தணர்.

ஆற்றங்கரையோரம். ஆற்று நீரில் ஒருவன் தூண்டில் போட்டுக் காத்திருப்பதையும், அப்போதுதான் ஒரு அழகான மீன் அதில் மாட்டிக்கொண்டதையும் பார்த்தார்.

உடனே அவனிடம் ஓடினார். `ஏம்ப்பா... அந்த மீனை விட்டுடேன். பாவம் அழகா இருக்கு’’ என்றார்.

``சரிங்கய்யா... இந்த மீனை விட்டுடுறேன். எனக்கு நீங்க என்ன தருவீங்க?’’

அந்தணர் தன்னிடமிருந்த இரண்டு செப்பு காசுகளைக் கொடுத்தார்.

அவன், மீனை அவரிடம் கொடுக்க வாங்கி ஆற்றுக்குள் எறிந்தார்.

அந்த வேகத்தில் அதுவரை மீனின் தொண்டையில் மாட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று எகிறி கரையில் வந்து விழுந்தது.

அந்தணர் அதை எடுத்துப் பார்த்தார். அவர் முதல் நாள் பானைக்குள் பத்திரப்படுத்திய அதே வைரம்.

அவர் மகிழ்ச்சியில் ``பிடிச்சிட்டேன்...பிடிச்சிட்டேன்... கண்டுபிடிச்சுட்டேன்!’’ என்று சத்தம் போட்டார்.

யதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த திருடன் (அவரிடம் கொள்ளையடித்தவன்) அவர் போட்ட சத்தத்தில் பதறிப் போனான்.

என்ன நினைத்தானோ... அவரிடம் திருடிய பொற்காசுப் பையை அவரிடமே கொடுத்துவிட்டு, தன் வழியே போனான்.

மறுநாள் காலை அந்தணர், அர்ஜுனனைத் தேடிப் போய் நடந்ததைச் சொன்னார்.

மறுபடியும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

அவர் போனதும் அர்ஜுனன் ஆச்சர்யத்தோடு கேட்டான்... ``கிருஷ்ணா... இதெல்லாம் என்ன?’’

``அது ஒன்றுமில்லை. அந்தணருக்கு பொற்காசுகளும் வைரமும் கிடைத்தபோது, அவர் அவரைப் பற்றியும், அவருடைய தேவைகளைப் பற்றியுமே யோசித்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் இரண்டே இரண்டு செப்பு காசுகள் மட்டும் இருந்தபோது இன்னோர் உயிரைப் பற்றி நினைத்தார்.

அந்த எண்ணம்தான் அவருக்கு உதவியது.

மற்றவர்களின் வேதனையை உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கு உதவ நினைத்து செயல்படும்போது, ஒருவர் கடவுளின் வேலையைச் செய்கிறார்; கடவுளே அந்த மனிதருக்கு உதவ முன்வருகிறார்.’’