இறைவனை நாள்தோறும் வணங்க வேண்டும் என்றார்கள் நமது பெரியவர்கள். ஏன் அப்படி சொன்னார்கள். இதற்கு ஏராளமான அளவில் புராணங்களும் கதைகளும் சொல்லி வந்தார்கள். இவை நமக்கு எதை உணர்த்துகிறது. இதன் தாத்பரியம் என்ன? இதற்கு இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் நமக்கு தெளிவு படுத்துகிறது

தெளிவுபடுத்திய நாயகர்

இராவணனின் சகோதரனான வீடணன், நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டபோது இராமரை நாடி வந்தான். இராமபிரான் திருவடியில் சரணாகதி அடைந்தான். அப்போது அனுமனைத் தவிர, கிட்கிந்தை சாம்ராஜ்யத்தின் தலைவனாம் சுக்ரீவன் உட்பட எல்லோரும் மறுக்கின்றனர். அப்போது வீடணனை ஆதரித்த இராமபிரான் ஒரு கதை மூலமாக வானரங்களுக்கு உபதேசம் செய்தார்.

அது என்ன?

காட்டில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற வேடுவன் ஒருவன் இரண்டு பட்சிகள் மரத்தில் நிற்பதைப் பார்த்தான். அதில் பெண் பட்சியை அம்பெய்திப் பிடித்துக்கொண்டு தன் இல்லம் கொண்டு சென்று சமைத்து உண்டான். தன் இணையை இழந்த ஆண் பட்சி மிகுந்த வேதனையோடு இருந்தது.

மீண்டும் இரவு வேடன் வேட்டைக்கு வந்தான். ஆனால் வேட்டையாக எதுவுமே கிடைக்கவில்லை. பகலில் எந்த மரத்தில் இருந்த பட்சியை வேட்டையாடினானோ, அதே மரத்தின் அடியில் வந்து நின்றான்.

குளிர்காற்று கடுமையாக வீசியது. குளிரில் நடுங்க ஆரம்பித்தான். சுற்றியிருந்த சுள்ளிகளையும், சருகுகளையும், எடுத்து வந்து தீமூட்டி குளிர் காய்ந்தான். அந்த மரத்தின் மேலே இருந்த ஆண் பட்சி இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. வேடுவன், குளிரில் நடுங்குவதோடு பசியிலும் தவிப்பதை ஆண் பட்சி புரிந்து கொண்டது.

அப்போது "நாம் வசிக்கும் மரத்தை நாடி வந்த ஒருவர் பசியில் தவிக்கலாமா..." என்று நினைத்த பட்சி, உரிய முறையில் விருந்தோம்பல் செய்ய எண்ணி, அவன் மூட்டிய நெருப்பில் வீழ்ந்து அவனுக்கு உணவானது.

இக்கதையைக் கூறிய இராமபிரான் மேலும் தொடர்ந்தார். "இந்த நிலைதான் எனக்கும்... அந்த மரம்தான் நான் இருக்கும் இடம். அந்த ஆண் பட்சிதான் நான். பெண் பட்சிதான் சீதை. வேடுவன் பறவையைக் கொன்று தின்றான். இராவணனோ சீதையைக் கவர்ந்து சென்றான். கதையில் அந்தக் கொடூரமான வேடுவனே திரும்பி அந்த மரத்தின் அடியில் வந்து நின்றான். ஆனால் இங்கோ அந்தக் கெட்ட இராவணனின் தம்பியான நல்லவனான விபிஷணன் வந்திருக்கிறான். தவறே செய்தவனாக இருந்தாலும், அவனே மனம் திருந்தி சரணாகதி அடைந்து விட்டால், ஆதரிப்பது தான் அறம்".

அந்த வேடுவன் தனக்குப் பசிக்கிறது என்று வாய் திறந்து சொல்லவில்லை ஆனால் அதைப் புரிந்துகொண்டு அந்த ஆண்பட்சி தன்னையே அவனுக்குத் தந்தது. ஆனால் என்னை நாடி, "சரணாகதி அடைகிறேன்" என்று வாய் திறந்து சொல்லி நிற்கும் வீடணனை நான் அங்கீகரிக்க வில்லை என்றால் அந்த ஆண் பட்சிக்கு இருந்த மனம்கூட எனக்கு இல்லையே என்கிற இழுக்கு நேரும் அல்லவா... என்றார்.

இராமபிரான் உபதேசம் நமக்கு எதைக் காட்டுகிறது. நமது குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்திலோ, உறவுகளின் வரிசையிலோ பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள், வரலாம். செய்தவர்களே திருந்தி நம்மை நாடி வரலாம். பகை என்று பாராமல் மீண்டும் அன்பு செய்ய தவறுகிறோம் என்றால், மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் என்ன வித்தியாசம். மன்னிப்பு ஒன்றே நம்மை மகாத்மாவாக மாற்றுகிற குணம்.

இந்த உயரிய பண்பை உணர்த்துவதே ஆன்மிகம். எத்தனை பாவங்களை செய்திருந்தாலும், இனி மறந்தும் செய்யக் கூடாது என்ற எண்ணத்துடன் இறைவனின் திருவடியை பற்றுங்கள். வாழ்வு வளம் பெறும். நம்மை பக்குவப் படுத்துவதே பக்தி, செம்மையாக்குவதே ஆன்மிகம். வாழ்வை வளமாக்க அந்த வைகுண்ட வாசனின் திருவடியை பற்றுவோம்.

ஓம் நமோ நாராயணாய