மன்னார்குடி | ராஜகோபால சுவாமி கோவில்
ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில் ஒரு வைணவக் கோயில் ஆகும். இந்தக் கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.
மூலவர்: வாசுதேவப்பெருமாள்;
தாயார்: செங்கமலத்தாயார் (செண்பகலெட்சுமி, படிதாண்டாப் பத்தினி)
உற்சவர்: ராஜகோபாலர்
ஸ்தலவிருட்சம்: செண்பகமரம்
தீர்த்தம்: ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: சுயம்பு விமானம்
புராணபெயர்: ராஜமன்னார்குடி

ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழுமண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில்குளங்கள்) உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும்.

ஸ்தல புராணம்:

குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார். அவரு ’கோபிளர்,’ ‘கோபிரளயர்’ என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன் நாரயணணை நோக்கி கடுமையான தவமியற்றி வந்தனர்.

அவர்களுக்கு காட்சியளித்த பெருமாள், அவர்கள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் அவர்கள் விரும்பும் மோட்சம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அதன்படியே ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராடியவாறு துவாரகை நோக்கி பயணித்தனர். அப்படி செல்கையில் வழியில் நாரதரை சந்தித்தனர். இவர்களது பயண நோக்கத்தை அறிந்த நாரதர், துவாரகையில் கண்ணபிரான் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு மீண்டும் விண்ணுலகம் சென்றுவிட்டதாக கூறியதைக் கேட்ட இரு சகோதரர்களும் மூர்ச்சையடைந்தனர். அவர்களது பக்தியை கண்டு பெருமகிழ்ச்சியடைந்த நாரதர், அவர்களை செண்பகாரண்யம் சென்று அங்கு ஹரித்ராநதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார்.
மன்னார்குடி | ராஜகோபால சுவாமி கோவில்
இதை கேட்டு ஆனந்தமடைந்த இருவரும் அவர் சொல்படி செண்பகாரண்யம் சென்று தவமிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணராக காட்சியளித்த கண்ணபிரானிடம் அவர் துவாரகையில் நடத்திய கிருஷ்ணலீலைகளை நடத்தி காட்ட சொல்லி வேண்டினர். அதனால் கிருஷ்ணாவதாரதில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான். கிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் "வாசுதேவர்' என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார். தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "ராஜமன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய "குழந்தை'' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.

ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி) எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.

32 லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம்.

உற்சவம்:

மன்னார்குடியில் ஆண்டின் 12 மாதங்களிலும் உற்சவம் நடக்கும் ஊர்.
சித்திரை மாதம் - கோடை உற்சவம் - 10 நாட்கள்
வைகாசி மாதம் - வசந்த உற்சவம் - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு
ஆனி மாதம் - தெப்போற்சவம் - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று ஹரித்ராநதி குளத்தில் தெப்பம் நடைப்பெறும்.
ஆடி மாதம் – ஆடிப்பூரம் - 10 நாட்கள். செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப் பெறும்.

ஆவணி மாதம் - பவித்ரோற்சவம் - 10 நாட்கள்.
புரட்டாசி மாதம் - நவராத்திரி - 10 நாட்கள்.
ஐப்பசி மாதம் - கோலாட்ட உற்சவமும் தீபாவளி உற்சவமும் கொண்டாடப் படும்
கார்த்திகை மாதம்- சொக்கப் பானையுடன் கார்த்திகை உற்சவம்
மார்கழி மாதம் - அத்யயன உற்சவம் - 20 நாட்கள்.இராப்பத்து, பகல் பத்து உற்சவம்.
தை மாதம் - பொங்கல் உற்சவம்- 10 நாட்கள், தாயாருக்கும் உற்சவம் நடைப்பெறும்
மாசி மாதம் - டோலோற்சவம் -10 நாட்கள்
பங்குனி மாதம் - ’பிரம்மோற்சவம் - 18 நாட்கள்

கட்டமைப்பு

ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால் கட்டப் பட்டது. அப்பொழுது ’இராஜாதிராஜ விண்ணகரம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் 100 ஆண்டுகள் கழித்து குலோத்துங்க சோழனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் உட்பிரகாரம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதால் இவ்வூருக்கு ’குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்ற பெயரும் உண்டு.

பிறகு 16. நூற்றாண்டின் முடிவில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் மீண்டும் சிறப்போடு விளங்கியது. அச்சுதப்ப நாயக்கர் என்பவரால் கருட த்வஜ ஸ்தம்பம் கட்டப் பட்டது. பின்னர் கி.பி. 1633 - 1673 ம் ஆண்டுகளில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் வெளியே இருக்கும் பெரிய இராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவைக் கட்டப்பட்டது.ஸ்ரீ இராஜகோபாலசுவாமியையே தனது குல தெய்வமாக கருதிய விஜயராகவ நாயக்கர் ‘மன்னாரு தாசன்’ என்றே அழைக்கப்பட்டார். நாட்டியம், நாடகம் போன்ற கலைகளில் ஆர்வமுடைய விஜயராகவ நாயக்கர், தான் தெலுங்கில் இயற்றிய படைப்புகளை ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கே சமர்ப்பித்தார். அது மட்டுமின்றி அவர் இயற்றிய பல நாடகங்களும் இந்த கோயிலின் ஆயிரம்கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப் பட்டது.

விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு பல கோபுரங்களும், மண்டபங்களும், குளங்களும் கட்டியதால், இன்றும் இக்கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவத்தின்போது ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கு விஜயராகவ நாயக்கரின் அலங்காரம் செய்து, அவரது பெயரை கூவி கட்டியம் கூறுகின்றனர்.

பெயர்க்காரணம்

ராஜாதி ராஜ சோழனால் கட்டப்பட்டதால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "ராஜமன்னார்குடி'. என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

மன்னார்குடியில் ஓரிரவு தங்கினால் ஒரு கோடியாண்டுகள் தவமியற்றியதற்கு சமம் என்கிறார்கள்.

விபரம்:
நடை திறப்பு: காலை 6.30 - 12, மாலை 4.30 - 9 மணி.
ஊர்: மன்னார்குடி,
மாவட்டம்: திருவாரூர்

மன்னார்குடிக்கு கோயம்புத்தூர் சென்னை, போன்ற முக்கிய ஊர்களிலிருந்தும் நேரடியாக ரயில் வசதி மற்றும் பேருந்து வசதி உள்ளன. திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், போன்ற ஊர்களிலிருந்தும் சாலை வழியாக சென்றடையலாம்.