இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய நகரங்களில் ஒன்றான, மிகப் புகழ்பெற்ற வடநாட்டு வைணவத் தலங்களில் ஒன்றான பல மர்மங்கள் நிறைந்த, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவ மூர்த்தி மாற்றி அமைக்கப்படும்  ஒடிசா மாநிலத்தில் உள்ள  பூரி (புருஷோம க்ஷேத்திரம் பூரி ஜெகந்நாதம்) ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை திருக்கோயில் வரலாறு :

பூரி, ஒடிசா மாநிலத்தில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம். பூரி ஜகந்நாதர் கோயில் உலகப் புகழ்பெற்றது. ‘புருஷோத்தம க்ஷேத்திரம் பூரி ஜகந்நாதம்’ என்று புராணங்களால் போற்றப்படும் அற்புதத் தலம். பல்வேறு புராண நிகழ்வுகள் இங்கு நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். பகவான் கிருஷ்ணர் இங்கு விரும்பி வந்து கோயில் கொண்டார் என்கிறார்கள். இங்கு பகவான் விஷ்ணு வாசம் செய்வதால் பக்தர்களால் இது வைகுண்டத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

பழமையான இந்த ஆலயத்தில் பெருமைகள் மிகவும் அதிகம். இங்கு பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக இருக்க, அவரின் அண்ணனான பலராமரும் மாயா சக்தியாய்த் தோன்றிய சுபத்ராவும் அவருடன் கோயில் கொண்டுள்ளனர். இந்த ஆலயத்தின் அதிசயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது இங்கு பகவான் கோயில் கொண்ட வரலாறு.

பகவான் கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்தபோது அவர் உடலில் இருந்து இரண்டு பகுதிகள் மட்டும் பிரிந்து ஒன்று கடலிலும் மற்றொன்று வனத்துக்குள்ளும் விழுந்தன. வனத்தில் விழுந்த பகுதியை பழங்குடி மக்கள் கண்டெடுத்து, ‘நீல மாதவர்’ என்று வழிபட்டனர். கடலில் விழுந்த பகுதி மூன்று கட்டைகளாக மாறி மிதந்துகொண்டு இருந்தது.

இந்தப் பகுதியை இந்திரத்துய்மன் என்ற விஷ்ணு பக்தன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு நாள் வனத்துக்குச் சென்றபோது அங்கே நீல மாதவரைப் பற்றி அறிந்து அவரை தரிசனம் செய்ய விரும்பினார். ஆனால் பழங்குடி மக்கள் அதுவரை வேறு யாரையும் அந்த விக்ரகத்தை தரிசனம் செய்ய அனுமதித்ததில்லை. மன்னன் கேட்கும்போது மறுக்க இயலாமல் அவனை விக்ரகம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சென்று பார்த்தபோது நீல மாதவர் திருமேனி மறைந்துவிட்டது. பழங்குடி மக்களும் மன்னரும் இதனால் வருத்தமடைந்தனர்.

பகவான் விஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பலாம் என்று அவன் ஆசைப்பட்டு இப்படி விக்ரகம் மறைந்து போனது அவனுள் வருத்தத்தை தந்தது. அன்று அவன் கனவில் தோன்றி பகவான் விஷ்ணு, “மன்னா வருந்தாதே... நீ எங்கே கோயில் கட்டுகிறாயோ அங்கேயே நான் கோயில் கொள்வேன். அது வைகுண்டத்துக்கு இணையான தலமாகத் திகழும்” என்று உறுதியளித்தார். இதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து பூரியில் பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினார் என்கிறது தலவரலாறு.

ஆலயம் தயாரானதும் அதற்குள் வழிபட திருமேனிகள் வேண்டும் அல்லவா... அதற்காக அவர் பெருமாளை தியானித்தார். பெருமாள் கனவில் தோன்றி “நாளைக் காலை கடற்கரைக்குச் செல். அப்போது உன் அருகே வரும் கட்டையைக் கொண்டு மூலவர் திருமேனியைச் செய்” என்று கட்டளை இட்டார். மன்னனும் அதேபோன்று காலையில் கடற்கரைக்குச் செல்ல, பல கட்டைகள் கடலில் மிதந்து சென்றன. ஆனால் எதுவும் மன்னன் அருகே வரவில்லை. மன்னன் மனத்தில் இறைவனைத் துதித்தார். அப்போது மூன்று கட்டைகள் அவன் அருகே வர மூன்றையும் எடுத்துக்கொண்டு ஆலயத்துக்குத் திரும்பினான்.

நாட்டின் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். வைகுண்டத்தில் பெருமாள் இருப்பதுபோன்று உங்களால் ஒரு திருவடிவைச் செய்யமுடியுமா என்று கேட்டான். யார் வைகுண்டம் சென்று பெருமாளை பார்த்திருகிறார்கள்... அதேபோன்று திருமேனி செய்ய?

அதனால் யாரும் முன் வரவில்லை. அப்போது வயதான ஒரு சிற்பி வந்தார். 28 நாள்களில் தான் அந்தத் திருமேனியைச் செய்வதாகவும் அந்த 28 நாள்களும் ஆலயத்துக்குள் தன்னை வைத்துப் பூட்டிவிட வேண்டும் என்று சொன்னார். மன்னரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

தினமும் மன்னன் ஆலய வாசலுக்குச் செல்வார். உள்ளே சிற்பி வேலை செய்யும் ஒலி கேட்கும். மகிழ்ச்சியோடு திரும்ப வந்துவிடுவார். ஆனால் 27-ம் நாள் மன்னன் சென்றபோது சத்தம் எதுவும் இல்லை. ஒருவேளை வயதான சிற்பிக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்து ஆலயத்தின் கதவைத் திறந்தான். என்ன ஆச்சர்யம், உள்ளே யாரும் இல்லை. அந்த சிற்பி மாயமாகி இருந்தார். சிற்பங்களும் கைகால்கள் இன்றி முழுமையடையாமல் இருந்தன. தான் தவறு செய்துவிட்டதை எண்ணி மன்னன் வருந்தினான்.

அப்போது பகவான் மகாவிஷ்ணு அசரீரியாக, தானே சிற்பியாக வந்ததாகவும், நிபந்தனையை மீறிக் கதவைத் திறந்ததால் சிலை வடிக்கும் பணி தடைப்பட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் இதனால் பாதகம் இல்லை. இதே திருமேனியில் நான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்று உறுதியளித்தார். அங்கே கறுமை நிறத்தில் உள்ள விக்கிரகம்தான் தான் என்றும் வெண்மை நிறத்தில் இருப்பது பலராமர் என்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது, கோகுலத்தில் அவதரித்த மாயா துர்கையான சுபத்திரை என்றும் சொல்லியருளியது அந்த அசரீரி. மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டு அவற்றை பிரத்ஷ்டை செய்து வழிபாடுகள் செய்தான்.

மற்ற இந்து கோவில்கள் போல அல்லாமல் இந்த கோவிலில் உள்ள மூலவர் சிலை புனித வேம்பு என்று அழைக்கப்படுகின்ற தாது பிரம்மத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அதே மரத்தினால் மீண்டும் மூலவர் சிலை மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது.

ஸ்கந்த புராணம், பிரம்மபுராணம் மற்றும் பிற புராணங்கள் மற்றும் பிற்கால ஒரிய படைப்புகளில் காணப்படும் புராண விவரங்கள், ஜகந்நாதரை முதலில் நிலமாதவா என்று விஸ்வவாசு என்ற சவர அரசன் (பழங்குடித் தலைவர்) வழிபட்டதாகக் கூறுகிறது. தெய்வத்தைப் பற்றி கேள்விப்பட்ட மன்னன் இந்திரத்யும்னன், விஸ்வவசுவால் ஒரு அடர்ந்த காட்டில் ரகசியமாக வழிபட்ட தெய்வத்தைக் கண்டுபிடிக்க வித்யாபதி என்ற பிராமண புரோகிதரை அனுப்பினான். வித்யாபதி கடுமையாக முயன்றும் இடம் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியில், அவர் விஸ்வவாசுவின் மகள் லலிதாவை திருமணம் செய்து கொண்டார். வித்யாபதியின் பலமுறை கோரிக்கையின் பேரில், விஸ்வவசு தன் மருமகனின் கண்களை கட்டி நீலமாதவ் வழிபட்ட ஒரு குகைக்கு அழைத்துச் சென்றார்.

வித்யாபதி மிகவும் புத்திசாலி. வழியில் கடுகு விதைகளை தரையில் போட்டார். சில நாட்களுக்குப் பிறகு, விதைகள் முளைத்தன, பின்னர் அவை குகையை ஆராய உதவியது. அவற்றைக் கேட்ட மன்னன் இந்திரத்யும்னன், தெய்வத்தை தரிசிக்கவும் வழிபடவும் உடனடியாக ஒத்ரா நாட்டிற்கு (ஒடிசா) யாத்திரை சென்றார். ஆனால் தெய்வங்கள் மறைந்துவிட்டன. அரசன் ஏமாற்றமடைந்தான். தெய்வம் மணலில் மறைந்திருந்தது. குலதெய்வத்தைத் தரிசிக்காமல் திரும்பி வரமாட்டேன் என்று உறுதியாக இருந்த மன்னன் நீலாச்சலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது, நீ அவரைக் காண்பாய் என்று தெய்வீகக் குரல் வந்தது. பின்னர், மன்னர் ஒரு குதிரையை பலியிட்டு விஷ்ணுவுக்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டினார். நாரதர் கொண்டு வந்த நரசிம்மர் சிலை கோயிலில் நிறுவப்பட்டது.

மன்னன் தூங்கும் போது ஜெகநாதரை பார்த்தான். மேலும், ஒரு நுட்பமான குரல் கடற்கரையில் ஒரு மணம் கொண்ட மரத்தைப் பெற்று அதிலிருந்து ஒரு தெய்வத்தை உருவாக்க அறிவுறுத்தியது. அதன்படி, மன்னன் தெய்வீக மரத்தின் மரத்தில் ஜெகன்னாதர், பலபத்ரா, சுபத்ரா மற்றும் சுதர்சன சக்ரா உருவங்களை உருவாக்கி கோயிலில் நிறுவினார்.

இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கங்க வம்ச மன்னர் அனந்தவர்மன் சோடகங்கா என்பவரால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது, அவரது வழித்தோன்றல் இரண்டாம் நரசிம்மதேவரின் கெந்துபட்னா செப்புத் தகடு கல்வெட்டு மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அனந்தவர்மன் முதலில் சைவனாக இருந்தான், கி.பி 1112 இல் உத்கல பகுதியை (கோயில் அமைந்துள்ள) கைப்பற்றிய பின்னர் வைஷ்ணவனாக மாறினான். கிமு 1134-1135 தேதியிட்ட கல்வெட்டு அவர் கோயிலுக்கு நன்கொடை அளித்ததைப் பதிவு செய்கிறது. எனவே, கோவில் கட்டும் பணி கி.பி.1112க்கு பின் சில காலம் துவங்கியிருக்க வேண்டும்.

கோயில் வரலாற்றில் உள்ள ஒரு கதையின்படி, இது இரண்டாம் அனங்கபீமா-தேவாவால் நிறுவப்பட்டது: கட்டுமான ஆண்டு 1196, 1197, 1205, 1216 அல்லது 1226 என பல்வேறு வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாகவோ அல்லது அனந்தவர்மனின் மகன் அனங்கபீமன் காலத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டதாகவோ இது தெரிவிக்கிறது. கங்க வம்சம் மற்றும் கஜபதி வம்சம் உட்பட அடுத்தடுத்த மன்னர்களின் ஆட்சியின் போது கோயில் வளாகம் மேலும் மேம்படுத்தப்பட்டது.

தேர்த் திருவிழா:

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

பக்தை கருமாபாய்:

பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். அவளுக்கு சோதனைகள் பல இருந்தும் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற்கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன். இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று கூறி அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.

அவர், இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே. இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.

அன்று முதல் கருமாபாயும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள். பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள். இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள். அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, "பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா? காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே!" என்றார்.

ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப் பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார்.

விமலா (பிமலா) தேவி சக்தி பீட சன்னதி:

பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவி (பிமலா தேவி) சக்தி பீட சன்னதி உள்ளது. இது சார் சக்தி தாம்கள் என்றும் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.

கோவர்தன பீடம்:

ஆதி சங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன பீடம் புரியில் அமைந்துள்ளது.

மூலவர்:

உலகிலேயே வேறு எந்த கோவிலிலும் இல்லாத படி, இந்த பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் நிறைய மரத்தாலான சிலைகள் இருக்கின்றன. உலகிலேயே இதுபோன்ற அமைப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல இந்த மூலவர் சிலைகள் முழுமையடையாத நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயத்தில் பறக்கப்படும் கொடியானது காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

நவகலே பரா:

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் நவகலே பரா என்ற பெயரில் மிக பிரமாண்டமாக திருவிழா நடத்தப்படும். அதில் ஒவ்வொரு திருவிழாவின் போது, இந்த மூலவர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று போல மாற்றிவிட்டார்கள்.

பொதுவாக கோவில் கோபுரங்களைச் சுற்றி புறாக்கள், கழுகு போன்ற பறவைகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவில் கோபுரங்களைச் சுற்றி எந்த பறவைகளும் பறப்பதில்லையாம். அதேபோல் இந்த கோபுரத்தின் மீது எந்த பறவைகளும் அமருவதே கிடையாதாம். அது ஏன் என்ற கேள்விக்கு இன்றும் யாருக்கும் விடை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

பொதுவாக கொடிகள் காற்று வீசும் திசையை நோக்கிப் பறக்கும். ஆனால் இந்த கோவில் கொடிமரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் வீசுகிறது. இதை பல இயற்பியலாளர்கள், விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து பார்த்தும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கடற்கரையை ஒட்டி தான் இந்த கோவில் அமைந்திருக்கிறது. ஆனால் மிக ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கோவிலுக்குள் நுழைந்து விட்டால், எவ்வளவு அமைதியாக இருந்தாலும் வெளியே இருக்கும் கடலின் அலை சத்தம் கொஞ்சம் கூட கேட்காதாம்.

இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்துவுிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. தனித்தனி பாத்திரமாக இல்லாமல் ஐந்து பாத்திரங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஐந்திலும் சமையல் செய்கிறார்கள். பொதுவாக அடியில் தீ எரிந்து கொண்டிருந்தால் அடியில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் ரெடியாகும். ஆனால் இங்கு இதிலும் சில அதிசயம் நடக்கிறது. மேலே முதலில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் வெந்து தயார் நிலைக்கு வருமாம். அதேபோல் எவ்வளவு சமைத்தாலும் துளி கூட வீணாகாமல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த கோவிலின் தேர்த் திருவிழாவின் பொழுது, பூரி மன்னரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு, கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பாதை, தெருவையும் சுத்தம் செய்வார்களாம். இங்கு தேரும் ஒவ்வொரு முறை திருவிழாவின் போதும் புதிது புதிதாகவே செய்யப்படுகிறது. இதற்கான காரணமும் இன்று வரை யாருக்கும் புலப்படவே இல்லை.

இத்தனை மர்மங்களும் நிறைந்த இந்த கோவிலின் மர்மம் எப்போது தீரும் என்று தெரியவில்லை. அதுவும் இது ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவில் என்பது இன்னும் கூடுதல் ஆச்சர்யம்.

ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் விளங்குகிறது. அதோடு இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. ரத யாத்திரை திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆசாட மாதம் எனும் (ஆடி மாதம்) இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த தேரோட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னரின் பரம்பரைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் சுறுப் பாதையை தெருவையும் சுத்தம் செய்வார்களாம். இந்த தெர் திருவிழாவிற்ஆக ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தேர்கள் செய்யப்படுகிறது. இதன் காரணம் இதுவரை புலப்படவே இல்லை.

பிரபஞ்சத்தின் அதிபதியான ஜெகன்நாதர், கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்காக கோவிலை விட்டு தானே வெளியே வந்து அருள் வழங்குவதாக நம்பப்படுகிறது.

மற்றொரு புராண நம்பிக்கையின்படி அரசன் இந்திரத்யும்னனின் முன்னாள் ராணியான குண்டிச்சா ராணிக்கு வாக்களித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் ஜெகன்நாதர் வருகை தருவதாக கூறப்படுகிறது.

அதனால் ஜெகன்னாதர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு செல்கின்றனர். பிறகு, எட்டு நாட்கள் அங்கேயே தங்குவார்கள்.

இந்த ராத யாத்திரை திருவிழாவின் 4 ம் நாளில் ஜெகன்நாதரின் மனைவியான லட்சுமி தேவி இறைவனை தேடி குண்டிச்சா கோயிலுக்கு வருவதாக நம்பப்படுகிறது. எட்டு நாட்கள் குண்டிச்சா கோயிலில் தங்கிய பிறகு, தெய்வங்கள் ஒன்பதாம் நாளில் தங்கள் வீடான ஜகன்நாதர் கோயிலுக்கு திரும்புகின்றன, இது பஹுதா யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.

சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.

ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

பலன்கள்:

எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பூர்வஜென்ம காலத்தில் செய்த பாவங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையினை வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது.

போக்குவரத்து வசதிகள்:

புவனேசுவரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் புரியில் உள்ள இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து ரயில் வசதிகள் உள்ளன.

ஜெய் ஜெகன்நாதா