திருக்கோயில்களில் இறைவன் திருவீதியுலா வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. இது பற்றி அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் காரணங்களை அறிவோம்.

உலா வரும் இறைவன்

கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில், கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. இதற்கென்று தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள். நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதி வேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது. செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை அடைய அடைய, அவன் பேரின்ப நிலையை விரைவாக அடைகிறான். இதற்காகவே, வீதிகளில் சுவாமி பவனி வருவதை உருவாக்கினார்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

ஆன்மிகப் பெரியோர்கள் கூற்று

கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் (முதியோர்கள்), கோயிலுக்குச் செல்லக் கூடாதவர்கள் (தீட்டுப்பட்ட பெண்கள்),

மரணம் போன்ற தீட்டுப்பட்ட குடும்பத்தினர்கள்,

நோய், கர்ப்பகாலம், போன்ற பல காரணங்களால் செல்ல இயலாதவர்கள் என பல்வேறு காரணங்களால் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும், வணங்க வேண்டும் என்பதற்காகவே உற்சவரான இறைவன் திருவீதியுலா வருகிறார். தீட்டுப் பட்டவர்களும் திருவீதியுலா வருகிற உற்சவரான இறைவனை வணங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலாவரும் இறைவனுக்கு திருஷ்டியை நிவர்த்தி செய்த பின்பே, மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்வார் எனவே உற்சவர் இறைவனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். அதற்கு தடை ஏதும் கிடையாது. அதனால், எந்த பாபம் நேராது.