மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும், மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு பூமிக்கு வருகிறார்கள் என்றும், அதுவும் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
மகாளய பட்சம்
ஒரு மாதத்தின் சரிபாதியை பட்சம் என்பார்கள். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் என்றும், பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் என்றும் கூறியுள்ளனர். அதில் மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்று ஆனது. அதாவது ஆன்மாக்கள் லயிக்கும் இடமே ஆலயம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்ச காலமாகும். இந்த காலகட்டத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களது பரிபூரண ஆசியைப் பெற்றுத் தரும். நமது சந்ததியே சிறப்போடு வளரும்.
பித்ரு தர்ப்பணம்
பித்ரு தர்ப்பணம் என்பது ஓராண்டிற்கு 96 நாட்கள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எல்லோராலும் இயலாது என்பதால், ஓராண்டில் வருகிற ஒவ்வொரு அமாவாசை தினத்திலாவது செய்ய வேண்டும்.
அதுவும் செய்ய இயலவில்லையா.... ஆடி, புரட்டாசி, தை, மாசி, ஆகிய நான்கு அமாவாசைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த பட்சம் இந்த நான்கு மாத அமாவாசைகளிலாவது முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அந்த நான்கும் இயலாது என்பவர்கள், ஆண்டிற்கு ஒருமுறை மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தாலே, முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
யாரெல்லாம் செய்ய வேண்டும்?
தந்தையை இழந்த மகன் தான் செய்ய வேண்டும். தந்தை இருக்க தாய் இறந்திருந்தால் கூட மகன் செய்யக் கூடாது. அவனது தந்தையே மனைவிக்காக செய்ய வேண்டும்.
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு மருமகன் செய்யலாம். மகளின் திருமணத்திற்கு முன்பே தந்தை மறைந்து விட்டால், பங்காளி வகையில் செய்யலாம்.
ஒருவேளை செய்ய இயலாமல், விபரம் அறியாமல் தவற விட்டவர்கள் குடும்பத்திற்காக யார் செய்வது என்று கேட்கக்கூடும். நாடாளும் அரசன் அனைத்து மக்களுக்காகவும் செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஏன் செய்ய வேண்டும்?
நமது உடல் உருவாகி, இந்த உலகத்தில் சுதந்திரமாக உலாவர முக்கிய காரணம்,
படைத்த இறைவன், பெற்ற தாய் தந்தையர்.
கண்களுக்கு அகப்படாத இறைவனை ஆண்டு முழுவதும் வழிபடுகிறோம். பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களையும், அவர்களை பெற்ற முன்னோர்களையும் ஆண்டிற்கு நான்கு முறையாவது வழிபட்டு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?
Follow Us