குரு எப்படி இருக்க வேண்டும் ?

குரு எப்படி இருக்க வேண்டும் ?
ஒரு சிறுவனுக்கு இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை. அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று சொன்னார். சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம் என்றாலும் சாமியாரை வணங்கிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன் தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார்.

பையனின் முகத்தில் மலர்ச்சி. அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி என்றார்.

சாமியார் முகத்தில் புன்னகை. போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல்ல முடியும் ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன். தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா என பார்ப்பது குருவின் பொறுப்பு என்றார். அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் கதையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.