Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 46 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 46

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 46

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 46
ராமர் விபீஷணனிடம் கோபத்துடன் பேசியதை கவனித்த லட்சுமணன் சிந்திக்க தொடங்கினான். சீதை வருகிறார் என்ற மகிழ்ச்சி ராமரின் முகத்தில் இல்லை. அவரின் அங்க அசைவுகளை வைத்து பார்க்கும் போது சீதை வருவதே விரும்பாதவர் போல் காணப்படுகிறார். சீதையை அழைத்து வர உத்தரவிட்ட போது கூட தரையை பார்த்தவாரே மிகவும் யோசித்து விட்டே பேசினார் என்று சிந்தித்த வண்ணம் லட்சுமணன் மிகவும் வருத்தமடைந்தான். ராமர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று லட்சுமணனுக்கு புரியவில்லை. ராமருக்கு இத்தனை உதவிகள் செய்து இப்போது சீதையை அழைத்துக் கொண்டு வரும் விபீஷணனை பாராட்ட வேண்டிய நேரத்தில் ராமர் கோபத்துடன் பேசியது சுக்ரீவனையும் அனுமனையும் வருத்தமடையச் செய்தது. தரையை பார்த்தவாரே விபீஷணனை தொடர்ந்து வந்த சீதை ராமரிடம் வந்து வெட்கமுடன் அவரின் முகத்தை பார்த்து என் உயிர் துணையே என்று சொல்லி வணங்கி நின்று ஆனந்தக் கண்ணீருடன் அழத்தொடங்கினாள்.

ராமர் அனைவருக்கும் கேட்கும்படி சீதையிடம் பேசத் தொடங்கினார். சத்ரியனாக போரில் எதிரியை வென்று உன்னை மீட்டு விட்டேன். ராவணன் உன்னை தூக்கிச் சென்று இத்தனை காலம் அவனது நகரத்தில் வைத்திருந்தான். ஒரு வருட காலம் ராவணனது பிடியில் நீ இருந்ததால் என்னுடைய குலத்திற்கு பெரும் தலை குனிவு உண்டாகி விட்டது. அந்த தலைகுனிவை எனது நண்பர்களான அனுமன் சுக்ரீவன் விபீஷணன் இவர்களின் உதவியுடன் போக்கி விட்டேன். அவனது பிடியில் இருந்த உன்னை அவன் தொடாமல் இருந்திருப்பானா? இத்தனை பெரிய யுத்தத்தை செய்தது உனக்காக இல்லை என்பதை நீ முதலில் தெரிந்து கொள். இந்த உலகத்தை வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் கண் வலி உள்ளவனுக்கு வெளிச்சம் ஆகாதது போல எனக்கு வெளிச்சமாக இருந்த நீ இப்போது எனக்கு தேவையில்லை. உனக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ சென்று உன் விருப்பப்படி வாழலாம். நான் நன்றாக யோசித்த பின் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதுபற்றி நீ லட்சுமணனிடமோ பரதனிடமோ உன் விருப்பமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் நீ ஆலோசித்துக் கொள்ளலாம் என்று சீதையிடம் பேசி முடித்தார்.

ராமர் அனைவருக்கும் முன்பு கோபத்துடன் பேசிய இத்தகைய கொடூரமான வார்த்தைகளை கேட்ட சீதை மிகவும் மனம் தவித்து வெட்கத்தால் தலை குனிந்தபடி அழுதாள். பின்பு ராமரிடம் பேச ஆரம்பித்தாள். உங்களது வார்த்தைகள் இத்தனை காலம் என்னுடன் வாழ்ந்த மேன்மை பொருந்திய மனிதனின் வார்த்தைகளைப் போல் இல்லை. ஒரு பாமர மனிதன் பேசுவதைப் போல் உள்ளது. மிகவும் கடுமையான சொற்களை பயன்படுத்தி விட்டீர்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் எப்படி நினைத்து பேசினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தான் குற்றமற்றவள் என்று எனது கற்பின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களை பிரிந்திருந்த இத்தனை காலமும் என்னுடைய மனம் உங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது. அனுமனை முதல் முறையாக அசோகவனத்திற்கு அனுப்பினீர்களே அப்போதே இந்த செய்தியை நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பியிருந்தால் அக்கணமே நான் என் உயிரை விட்டீருப்பேனே இதனால் யுத்தமும் நடந்திருக்காது. தங்களது உயிரை பலர் இழந்திருக்க மாட்டார்கள் என்று அழுதபடி கூறினாள். ராமர் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக நின்றார். லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள் சீதை. எனக்கு எற்பட்டுள்ள துயரத்திற்கு அக்னியைத் தவிர வேறு மருந்து இல்லை. பொய்யான பழியை சுமந்து கொண்டு நான் வாழ விரும்பவில்லை. மரக் கட்டைகளை அடுக்கி இங்கே நெருப்பை மூட்டு அந்த அக்னியில் விழுந்து எனது பழியை தீர்த்துக் கொண்டு நான் எனது உடலை விடுகின்றேன் என்று கோபமடைந்தவளாக கூறினாள். சீதை பேசிய இத்தனை வார்த்தைகளை கேட்ட பிறகாவது ராமரின் மனம் மாறுகின்றதா என்று லட்சுமணன் ராமரின் முகத்தை பார்த்தான். மௌனமாக இருந்த ராமரின் உள்ளத்தை குறிப்பால் உணர்ந்து கொண்ட லட்சுமணன் மரக் கட்டைகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தான். ராமர் ஏன் இச்செயலை செய்கிறார் என்பதனை அறிந்து கொள்ள விண்ணவர்களும் அங்கு வந்து நின்றார்கள்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்