
🌷ஒரு மனிதனுக்கு முதல் தேவை ஞானம் தான்.
ஒருவருக்கு ஞானம் இருந்து விட்டால், புத்தியில் தெளிவு கிடைத்துவிடும்.
தெளிவான சிந்தனைகளும் செயல்களும் கைகோர்த்து இருந்து விட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
நல்ல கல்வி வாய்க்கப் பெற்றால், உத்தியோகமும் அதன் வாயிலாக செல்வங்களும் கை கூடும்!
ஆக, அனைத்து சந்தோஷங்களுக்கும் அஸ்திவாரமாகத் திகழ்வது... ஞானம்!
அந்த ஞானச்செல்வத்தை அள்ளி அள்ளி வழங்குபவன் ஸ்ரீகண்ணபிரான்.
அதனால் தான், சஹா எனும் திருநாமம் அமைந்தது, அவனுக்கு!
அதே போல், வஹா எனும் திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு.
அதாவது வசிப்பவன். அங்கிங்கெனாதபடி, எல்லா இடங்களிலும் இருப்பவன்; வசிப்பவன்!
இந்தப் பரந்த வெளியில் நமக்கு வெளியேயும் இருக்கிறான். நம் உள்ளுக்குள்ளேயும் இருக்கிறான்.
சஹா என்றால் ஞானத்தைத் தருபவன். வஹா என்றால் எங்கும் வசிப்பவன்.
அடுத்து உள்ள திருநாமம்... கஹா! ஒளி விடுகிறவன் என்று அர்த்தம்.
அதெப்படி? மாணிக்கமானது சேற்றில் விழுந்து விட்டால், அதன் ஒளி மறைந்து விடுகிறது.
நறுமணம் கொண்ட ரோஜாப்பூ குப்பையோடு குப்பையாகக் கலந்துவிட்டால், அந்த துர்நாற்றத்தில் தன் நறுமணத்தை இழந்து விடுகிறது.
அதேபோல், உடல் மற்றும் மன ரீதியாக அழுக்குகளைக் கொண்டிருக்கிற மனிதர்களுக்குள் இருக்கிற கடவுள், மனிதனைப்போல் அதாவது ஜீவாத்மாவைப் போல தாழ்ந்துவிட மாட்டானா?
மாட்டான். ஏனெனில், அவன் பரமாத்மா, மாணிக்கங்களுக்கும் ரோஜாக்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நம் மன அழுக்கை அகற்றி தூய்மைப்படுத்துவதற்காகவும் மன இருளை அகற்றி பிரகாசிக்கச் செய்வதற்காகவும் அவன் நமக்குள்ளே வியாபித்திருக்கிறான்.
ஆகவே ஒளிமயமானவன் இறைவன். எப்போதும் எல்லாக் காலத்திலும் சுடர் விட்டபடியே ஜோதியாக, பிரகாசத்துடன் திகழ்பவன் அவன்!
ஒரு போதும் அவன் ஒளி குன்றுவதில்லை; மாறாக, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இருக்கிற இருளை அகற்றுகிறது.
ஆக, சஹா, வஹா, கஹா என்கிற திருநாமங்களுடன் திகழ்கிறவன் கிருஷ்ண பரமாத்மா.
இவனுடைய திவ்விய நாமங்களைச் சொல்வதும் இவனை ஆராதிப்பதுமே புண்ணியம் நிறைந்தவை!
அடுத்ததாக இன்னொரு திருநாமத்தைப் பார்ப்போம்.
'இறைவன் எங்கு இருக்கிறான்?'
'இறைவன் எங்கும் இருக்கிறான்!'
ஆனால், 'கிம்’ என்கிறது ஒரு திருநாமம்.
'கிம்’ என்றால் என்ன?
'யார் என்று தேடினால் இறைவன் கிடைப்பான்?'
இதைக் கேட்டுச் சிலர் கேலி செய்யலாம். பகபகவெனச் சிரிக்கலாம். இன்னும் சிலர் குழம்பித் தவிக்கலாம்.
'இறைவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டுவிட்டு, அதற்கு 'இறைவன் எங்கும் இருக்கிறான்’ என்று பதிலும் சொல்லிவிட்டு, 'யார், எங்கே என்று தேடினால், கிடைப்பான்’ என்று சொன்னால், முரண்பாடாக இருக்கிறதே... எனச் சொல்லி எள்ளி நகையாடலாம்.
சட்டைப் பையின் ஓட்டையில் இருந்து எட்டணா விழுந்துவிட்டது.
விழுந்த அந்த நிமிடமே, அந்த இடத்திலேயே அந்த இருட்டு வேளையில் தேடுகிறோம்.
தரையில் கை வைத்து துழாவுகிறோம்.
மெள்ள இருட்டுக்கு கண்களைப் பழக்கமாக்கிக் கொண்டு, கூர்ந்து கவனிக்கிறோம்.
இருட்டில் லேசான பளபளப்புடன் அல்லது ஏதோ ஒன்று வட்டமாகத் தெரிய... கைகளால் தடவி, கண்களால் ஊடுருவி, கடைசியில் காசை எடுத்து விடுகிறோம்.
அதாவது, இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். ஆனால் எங்கே, எப்படி, எந்தவிதமாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதற்கான சாதுர்யமும் சங்கல்பமும் நமக்கு வேண்டும்.
அவை இருந்தால் தான் இறைவனை அறிய முடியும்!
எல்லா இடங்களிலும் பரந்தாமன் இருந்தாலும் அவன் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது தானே முக்கியம்?!
'கறந்த பாலுள் நெய்யே போல்...' என்றொரு பாசுரம் கேட்டிருக்கிறீர்களா?
எவ்வளவு அழகான பாடல் அது. எத்தனை உயிர்ப்பான உதாரணங்கள் அவை
மாடு நெய் தருகிறது என்றால் என்ன இது முட்டாள்தனம்
அது பால் அல்லவா தருகிறது?' என்போம்
அந்தப் பாலை உறைக்குத்தி வைத்தால், தயிராகி விடுகிறது
அந்தத் தயிரை நன்றாகக் கடைந்து, பிரித்தெடுத்தால்... வெண்ணெய் கிடைத்து விடும்
அந்த வெண்ணெய்யை உருக்கிப் பார்க்க நெய் வந்துவிடும்
மாடு, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என சகலமும் தருகிறது அல்லவா
பாலில் துவங்கி நெய்யாக உருமாறுகிறது அல்லவா
இந்த உண்மையை கருத்தில் கொண்டு, கடவுள் எங்கே, எந்த வடிவத்தில், எப்படியாக இருக்கிறார் என்பதை நாம் தான் தேடிக் கண்டு கொள்ள வேண்டும்
அதற்காகத்தான் 'கிம்’ என்று 'தேடிக் கண்டறியலாம் பரந்தாமனை...' என்று திருநாமம் அமைந்தது
பரம்பொருளை அடைய வேண்டும் என்றால் தேடத்தான் வேண்டும்
இந்த உலகில் எல்லா மனிதர்களும் பிரம்மத்தை அறிவதிலும் அடைவதிலும் ஆர்வம் கொள்கிறவர்களாகத் தானே இருக்கிறார்கள்
ஆனால் அடுத்ததாக இன்னொரு திருநாமத்தைச் சொன்னால், நீங்கள் குழம்புவீர்கள்; வியப்பீர்கள்; குதூகலம் கொள்வீர்கள். 'அடடா, கண்ணனே... உன் கருணையே கருணை’ என்று சிலிர்ப்பீர்கள்
அந்தத் திருநாமம் - 'யத்’. பரந்தாமனைத் தேடுகிற மகரிஷிகளையும் மக்களையும் அரவணைக்கவும் காப்பாற்றவும் பிரயத்தனப்படுகிறான் ஸ்ரீகண்ணபிரான்
யத் என்றால் யத்தனம்; முயற்சி மேற்கொள்பவன் என்று அர்த்தம். என்ன முயற்சி? எதற்காக யத்தனம்?
தாமரையானது தண்ணீரில் இருந்து எப்படி மேலேறி வெளிவந்து, தன் உருவத்தையும் நறுமணத்தையும் காட்டுகிறதோ... அதேபோல் நரகம் எனும் பிறவியில் உழன்று தவிக்கும் என் அடியவர்களை நான் அதனிலிருந்து மீட்பேன்'' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
முதல் திருநாமத்தில், 'தேடினால் தான் கிடைப்பான் இறைவன்’ என்று பொருள் படும்படியாகவும், அடுத்ததாகவே நமக்கு அருள்வதற்காகவும் நம்மை ஆட்கொள்வதற்காகவும் அவன் முயற்சி மேற்கொள்கிறான் என்றும் முரண்பாடான, அதே நேரம் பகவானின் கருணையையும் நம் பக்தியையும் ஒரு சேரச் சொல்லி வைத்திருக்கிறார்கள், பெரியோர்
பகவானை அடைவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பக்தி மார்க்கம்
ஸ்லோகங்களைச் சொல்லி, பாசுரங்களைப் பாடி, தீப - தூபங்கள் காட்டி ஆராதித்து, 'சதாசர்வ காலமும் உன்னையே நினைத்திருக்கும் எனக்கு அருள்வாயாக என்று பிரார்த்திப்பது
நீதான்டாப்பா எனக்குக் கதி உன் பாதார விந்தங்களில் என்னைச் சேர்த்துக்கொள்
உன் திருவடியின் கீழ், ஒரு துரும்பாக இருக்கிற அடியேனை ஏற்றுக் கொள்
உன் திருவடியைத் தவிர வேறு கதியில்லை எனக்கு என்று சரணாகதியாவது, இன்னொரு வகை
இந்த இரண்டு வகை என்பது ஒரு கணக்கு தான். நாம் இந்த இரண்டில் எந்த வகையாக இருந்தாலும் நம்மை அந்தக் கண்ணபிரான் ஏற்றுக் கொள்வான்; ஆட்கொள்வான்
ஆனாலும் கண்ணனைச் சரணடைதல் மிகவும் உசத்தியான விஷயம்