
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. நான்கு பிள்ளைகளும் நான்கு தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தார்கள். தர்மம் நான்கு வகைப்படும்:
- சாமான்ய தர்மம்
- சேஷ தர்மம்
- விசேஷ தர்மம்
- விசேஷதர தர்மம்
சாமான்ய தர்மம்:
பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் ராமர்.
சேஷ தர்மம்:
சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பு ஏற்படும். இதுவே சேஷ தர்மம். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.
விசேஷ தர்மம்:
தூரத்தில் இருந்தே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.
விசேஷதர தர்மம்:
பகவானை விட அவரது அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதர தர்மம். சத்ருக்னன், பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறினார்.
ஆகவே இந்த நான்கு தர்மங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் ராமாவதாரத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தனர் — ராமர், லட்சுமணர், பரதன் மற்றும் சத்ருக்னன்.