Sri Mahavishnu Info: Thiruppavai pasuram 5 | திருப்பாவை பாடல் 5 Thiruppavai pasuram 5 | திருப்பாவை பாடல் 5
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Thiruppavai pasuram 5 | திருப்பாவை பாடல் 5

Sri Mahavishnu Info
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க* 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசு ஆகும் செப்பு - ஏலோர் எம்பாவாய்.

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (5)

இந்தப் பாடலில் உயர்ந்த தத்வ விசாரம் இருக்கிறது. ஒரு இடைப்பெண் இன்னொரு இடைப்பெண்ணைப் பார்த்து கேட்கிறாள் “நாமெல்லாம் கர்ம வசப்பட்டவர்கள் – விதிப்படி கர்மாப்படி தான் எல்லாமும் நடக்கிறது என்றால், நாம் எப்படி பரமனை அடையமுடியும்? நம் பிழைகள் நம்மை தடுத்து விடாதா? இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்? இது வரை செய்த கர்மங்கள், கர்மத்துக்கான பலன்கள் நம்மை விட்டுவிடுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்து செல்கிறதே? இதிலிருந்து எப்படி மீள்வது?” என்று கேட்பதாகவும், அதற்கு இன்னொரு இடைப்பெண்ணாக ஆண்டாள் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.

கர்ம ஞான பக்தி யோகங்கள் தன் சுயமுயற்சியால் வசிஷ்டர் வாமதேவர் போல செய்து முக்தியடையக் கூடிய சக்தர்கள் அல்ல நாம் – நமக்கு வேத வேதாந்தங்கள் தெரியாது, சாஸ்திரம் தெரியாது, சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நாம் செய்யக் கூடியவைகள் சில உண்டு. அந்த மாயனை, வடமதுரை மைந்தனை, ஆயர் குலத்து அணிவிளக்கை, தாமோதரனை மலர் தூவி தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமானால் பல ஜன்மங்களில் நாம் சேர்த்து, இனி சேரப்போகும் அனைத்து பாவங்களும் தீயினில் தூசாக விலகும் என்று பதில் சொல்கிறாள்.

அப்பேர்பட்ட பரமனை நாம் எப்படி அணுகுவது? நாமோ அசுத்தர்கள் – என்றால், நமது அர்ஹதையெல்லாம் பார்க்க தேவை இல்லை – உள்ளமாதிரியே இப்படியே சென்று அடையலாம். அவன் வருவானா? நாம் அங்கே செல்ல வேண்டுமா? என்றெல்லாம் குழம்ப தேவையில்லை. ‘உபாயத்தில் துணிவு புறப்படவொட்டாதாப்போலே, உபேயத்தில் த்வரை முறை பார்த்திருக்க வொட்டாதிறே!’ என்று பூர்வாசார்யர்கள் அருளினார்கள்! அதாவது, கண்ணனை நாம் எப்படி அடைவது என்று பயந்தாலும், அவனை உபேயமாக – அடையும் பொருளாக நினைக்கும் போது அவனை அடையவேணும் என்கிற த்வரை – தணியாத ஆவல் இந்த வழிமுறைகளெல்லாம் பார்க்க விடாது.

ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை அழகாக நமக்காக விளக்கியிருக்கிறாள். த்ரிகரணமான மனம், வாக்கு, காயம் என்னும் கரணங்களைக்கொண்டு, கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனதினால் அனுசந்திப்பதே கர்ம கட்டை விலக்கும் என்கிறாள்! இன்னொரு வகையில், புண்ய பாவங்கள் இரண்டுமே மோக்ஷ பலனை தடுக்கும் – அதனால் அவை இரண்டையுமே பகவதர்ப்பணம் – க்ருஷ்ணார்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தேறும்.

கண்ணனை குழந்தையாக பாவித்து, அவன் செய்த பால லீலைகளை நினைத்து உருகுகிறாள் ஆண்டாள் – நம்மாழ்வார் அவனது சௌலப்யத்தை – சுலபத்தன்மையை நினைத்து நினைத்து ‘எத்திறம் எத்திறம்’ என்று மூவாறு மாதங்கள் வியந்ததைப்போலே. பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன் அல்லவா அவன்?

யாராவது சாமர்த்தியமாக வேலைகள் செய்தால் எந்த ஊர் வேலை இது? எந்த ஊர் நீர்? என்று விசாரிப்பது வழக்கம். அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்!

மாயனை, தாமோதரனை என்று இரண்டு திருநாமங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும். அவன் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று ஆழ்வார் அருளினார் அல்லவா? யசோதை சிறு கயிற்றினால் தன் பொல்லாப் பிள்ளையை கட்ட, அதனால் வடு விழுந்து தாம – உதரனாக தாமோதரனாக இருக்கும் அவன் பெரிய மாயன். தன் சர்வ சக்தியை மறைத்து அடியார்க்கு பொடியனாய் வந்த மாயக்கண்ணன்! அவன் மதுரையில் பிறந்து, யமுனையை கடந்து, ஆயர்பாடிக்கு வந்தான். இவனை பெற்ற பேறு பெற்றதால் யசோதை குடல் விளக்கம் செய்தான். அவள் இவனைக் கட்டிப்போட்ட கதையினை சிந்தித்தாலே மனிதனுடைய கர்மக் கட்டெல்லாம் கழன்று போகும்!

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்