Thiruppavai pasuram 13 | திருப்பாவை பாடல் 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்* 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்* வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* 
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்* குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே* 
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்* கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்.  

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (13)

போதரிக் கண்ணினாய்! என்று ஆச்சரியமாக இந்த வீட்டுப் பெண்பிள்ளையை அழைக்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் மிகவும் அழகாக ஒரு உருவகத்தை சொல்வர்கள் – இந்த வீட்டு வாசலில் கோபிகைகளுக்குள் சிறிய வாக்குவாதம் வந்து விட்டது – ராமனை பாடுவதா? க்ருஷ்ணனை பாடுவதா? இவர்களுக்கு தாபமோ க்ருஷ்ணன் மேல் – ஆனால் மனத்துக்கினியவன் ராமனே என்று ஒரு கட்சி கிளம்புகிறது. ஒருவரி ராமனுக்கு இன்னொரு வரி க்ருஷ்ணனுக்கு என்று இதற்கு முந்தைய பாட்டிலிருந்தே பாடி வருகிறார்கள்.

இங்கே இந்த வீட்டுக்கு வாசல் வந்ததும், க்ருஷ்ணனை நினைத்து – பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு உருவம் கொண்டு வந்தபோது கண்ணன் அவன் வாய் பிளக்க கொன்றான் என்றார்கள் ஒரு கோஷ்டியினர். பொல்லா அரக்கனான ராவணனை புல்லை கிள்ளிப்போடுவது போல் அவன் தலையை கிள்ளி எறிந்தான் என்றார்கள் மற்றையோர்.

இப்படி இவர்கள் கீர்த்திமைகள் பாட, நடுவில் ஒரு பெண்பிள்ளை, இவர்களை சமாதானப்படுத்தி, உள்ளே தூங்குகிற பெண்ணை போய் எழுப்புவதற்காக “பெண்ணே, வானில் சுக்ரன் உதயமாகி குரு கிரஹம் அஸ்தமனமானபோதே மற்ற பெண்களெல்லோரும் எழுந்திருந்து நோன்பு நோற்க போய்விட்டார்கள்… எழுந்திருந்து வா” என்று சொல்கிறாள். அவள் “அதெப்படி சுக்ரன், குரு முதலான கிரஹங்கள் உதயமாவதும் அஸ்தமனமாவதும் இவர்களுக்கு தெரியும்… இவர்கள் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால் எனுமவர்களாயிற்றே!” என்று சொல்ல, இவர்கள் பறவைகளெல்லாம் எங்கும் பறந்து கூவும் சப்தம்கூட கேட்கவில்லையா என்று சொல்லி உள்ளே சென்று அவளை தொட்டு எழுப்புவதற்காக செல்கிறார்கள்.

அவளோ இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்து தூங்குவது போல் கள்ளமாக நடிக்கிறாள். “பாவாய்! இன்னும் சூரிய உதயமாகவில்லை, இப்போதே கிளம்பி குளிர்ந்த நீரில் நீராட வேண்டாமா, இதுவே நல்ல நேரம்… உன் கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு கலந்து கொள்” என்று அழைக்கிறாள்.

இந்த பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம். இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன் – புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன் – அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன் என்று முழுவதுமே ராமனைப்பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.

அரக்கன் என்றாலே தீயவன் தானே – பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை சொல்லவே கஷ்டப்பட்டு பொல்லா அரக்கன் என்றார்கள்.

வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள். மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று காரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.

போதரிக் கண்ணினாய் என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற்போல அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள். வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அழிக்கக்கூடிய – பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

குள்ளக்குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ! என்று கேட்கும்போது க்ருஷ்ணனை பிரிந்து விரஹ தாபமே சுட்டெரிக்கிறது. இன்னும் சூர்யோதயம் ஆகிவிட்டால் எங்கும் வெம்மை படர்ந்து விடும். அதனால் இப்போதே கிளம்பி நோன்புக்கு ப்ரதான அனுஷ்டானமான நீராட்டத்துக்கு உன் பாசாங்கைத் தவிர்த்து எங்களோடு வந்து கலந்து கொள் என்று அழைக்க அவளும் வந்து இவர்களோடு இணைந்து கொள்கிறாள்.

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்