Thiruppavai pasuram 14 | திருப்பாவை பாடல் 14


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்* 
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்* தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்* 
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்* நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்* 
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.    

ஸ்ரீஆண்டாள்  திருப்பாவை (14)

ஆண்டாள் தம் குழுவினருடன் ஒவ்வொரு வீடாக சென்று இன்னும் எழுந்திருந்து வராத பெண்பிள்ளைகளையும் எழுப்பி தம்மொடு சேர்த்துக்கொண்டு செல்கிறாள். இங்கே இந்தப் பாசுரத்தில் அப்படி ஒரு வீட்டு பெண்ணை விடியலுக்கான உதாரணங்களை சொல்லி எழுப்புகிறாள். திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து, பதினைந்தாம் பாசுரம் வரை பத்து பாடல்களில் பத்து பெண்பிள்ளைகளை எழுப்புகிறாள் – இதில் ஐந்து பாசுரங்களில் விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லியும் ஐந்து பாசுரங்களில் அப்படி ஒரு அடையாளத்தையும் சொல்லாமலும் எழுப்புகிறாள். இன்றைக்கு எழுப்பப் போகிற பெண் சற்று வாக் சாதுர்யம் உள்ளவள். அவளது மதுரமான பேச்சுக்கு கண்ணனே மயங்குவன் என்று இவளை விசேஷமாக எழுப்புகிறாள்.

கிராமப்புரங்களில் இப்போதும் ஒரு வழக்கு உண்டு – யாருக்காவது காத்திருந்து மிகவும் நேரமாகிவிட்டால், அவர்கள் வந்தவுடன் – “எவ்வளவு நேரம் காத்திருந்தேன்! காத்திருந்து காத்திருந்து அலமந்து போச்சு!” என்பார்கள் – அதாவது அலர்மலர்ந்து போயிற்று – என்ற அர்த்தத்தில் – மிகவும் ம்ருதுவாக பூ மலரும் – அத்தனை நேரம் காத்திருந்தேன் என்று சொல்வது வழக்கம். அப்படி “பகலில் மலரும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் மலர, இரவில் மலரும் ஆம்பல் எனும் கருநெய்தற் பூக்கள் கூம்பிட எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் உனக்காக” என்கிறார்கள். இதைக்கேட்ட அந்த பெண், “என்னைப்பார்த்து உங்கள் நீங்கள் வாய்திறந்தது செங்கழுநீர் என்றும் நான் வாய்மூடி இருப்பதைப்பார்த்து ஆம்பல் என்று சொல்கிறீர்களா? உங்களைப்பார்த்து நான் வாயடைத்துப் போய்விட்டேன் என்றா சொல்கிறீர்கள்?” என்கிறாள். இவர்கள் “இல்லை, நிஜமாகவே பொழுது விடிந்தது – பூக்களெல்லாம் மலர ஆரம்பித்துவிட்டன…” என்று சொல்ல, “நாமெல்லாம் வயற்புறங்களில் பூக்களை பிரித்தும் மூடியும் விளையாடுவது உண்டு…, இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளமா?” என்று கேட்க, “வயற்புறங்களில் மட்டுமல்ல.. உங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள சிறு குளத்திலும் இதே கதை தான்… பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன…” என்று சொல்கிறார்கள்.

“அங்கும் நீவிர் அதுவே செய்தீர்” என்கிறாள் அவள். இவர்களெல்லாம் சிறுமிகளாக விளையாடுவதை இந்த பாசுரம் அழகாக வெளிப்படுத்துகிறது. “இதென்ன இப்படி சொல்கிறாய், அளற்று பொடியிலே (செந்நிற பொடி – காவி நிறம் என்று கொள்ளலாம்) புரட்டிய ஆடை தரித்து, தம் ப்ரம்ஹசர்யம் தோற்ற வெண்ணிற பற்களை உடையவராய் சந்நியாசிகள் தங்கள் திருக்கோயில்களில் சங்க நாதம் எழ, வழிபாடு செய்ய கிளம்பி விட்டார்கள். நாம் இன்னும் தூங்கலாமா? அனுஷ்டானமே இல்லாது போயிற்றே?” என்கிறாள். சந்நியாசிகள் க்ருஹஸ்தர்களைப்போல் தாம்பூலம் தரிப்பதில்லை – அதனால் அவர்களை வெண்பற்கள் உடையவர் என்று சிறுவர்களுக்கே உரிய விதத்தில் குறிப்பிடுகிறாள்.

இந்த பாசுரத்தில், தொடர்ந்து நங்காய்! நாணாதாய்! என்று தொடர்ந்து சொல்வதற்கு பூர்வசார்யர்கள் ஒரு அழகான விளக்கம் சொல்கிறார்கள். இந்த பெண் மிகுந்த ஞானம் உடையவள் – ஆனால் அனுஷ்டானத்தில் சிறிது வாசி ஏற்பட்டதால் அதை குறிப்பிட்டு காட்டுகிறார்கள். வெறும் ஞானம் மட்டும் இருந்து அதற்கு தகுந்த அனுஷ்டானம் இல்லை என்றால் அது ஊருக்கு உபதேசம் போல்தான் அமையும். ‘அது நாய் வாலைப்போலே’ என்றார்கள். நாய் வால் மற்ற மிருகங்களைப்போலே ஈ எறும்பு ஓட்டுவதற்கும் பிரயோசனம் இல்லை, பேருக்கு இருக்கிறது. அதுபோல ஞானம் இருந்து அனுஷ்டானம் இல்லாமல் இருப்பது கூடாது, அனுஷ்டானமும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.

வாய்பேசும் நங்காய்! உனக்கு வெட்கமே இல்லையே! க்ருஷ்ணன் பெண்களைப் பொய்யுரைத்து ஏமாற்றும் தீம்பன் – அவனுடைய சம்பந்தத்தால் அவனைப்போலவே நீயும் வாயால் பேசினாய்… செயலில் ஒன்றும் காணோமே! எங்கள் குறைதீர எழுந்திருந்து வருவாய்! என்று அழைக்கிறாள். “உங்களோடு வந்து நான் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?” என்று அவள் கேட்க, சங்கொடு சக்கரத்தையும் ஏந்தும் தடக்கைகளை கொண்ட பங்கஜாக்ஷனான பங்கய கண்ணனை பாடு! என்றார்கள்.

வ்யாக்யான கர்த்தா இங்கே ஒரு அழகான விளக்கம் சொல்கிறார். அரவிந்த லோசனான பகவான் சங்கையும், சக்கரத்தையும் இரு மலர்களைப்பொலே தாங்குகிறானாம். ஒன்று சூர்யனாகவும் இன்னொன்று சந்திரனாகவும் இருக்கிறது. இதில், அவனது நாபி கமலம் மலர்ந்து மலர்ந்து கூம்புகிறதாம். இவனோ, ‘கண்ணாலே நமக்கெழுத்து வாங்கி, நம்மையெழுத்து வாங்குவித்து கொள்ளுமவன்’ என்று ஏமாற்றுகிறான். அதாவது அவன் கண்ணழகை காட்டுவனாம். நாம் அதில் மயங்கி அருகே செல்ல, நம்மை அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு விடுவனாம். உறங்காவில்லி தாசர் கதை நினைவுக்கு வருகிறது. இப்படிப்பட்ட மாயனை எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து பாடு என்று சொல்ல அவளும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்!

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்