எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ* சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்*
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்* வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக*
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை* எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் திருப்பாவை (15)
‘திருப்பாவையாவது இப்பாட்டிறே’ என்று இந்த பாசுரத்தை பூர்வாசார்யர் ஆச்சரியப்பட்டு சொல்கிறார். திருப்பாவையில் இந்த பதினைந்தாம் பாசுரத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரமான ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தையும் இதல்லவோ திருப்பாவை என்று நெகிழ்ந்து சொல்கிறார். இந்த பாசுரத்தை பாகவத தாஸ்யம் சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்வதாகவும் கொண்டு அப்படி ஆச்சரியப்பட்டு சொல்கிறார்.
இதுவரை விடியற்காலையில் எழுந்திருந்து நீராடி, க்ருஷ்ணானுபவத்தை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிக்க போவதற்காக ஒவ்வொரு வீடாக சென்று ஆண்டாள் ஆய்ப்பாடி பெண்பிள்ளைகளை அழைக்கிறாள். இன்றைய பாசுரத்தில் கடைசியாக வயதில் சிறியவளான பெண்பிள்ளையை இளங்கிளியே! என்று கூப்பிட்டு அழைக்கிறாள். இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்பிள்ளையை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விட்டார்கள். ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் சேர்ந்தே பரஸ்பர ஸம்வாதமாக அமைந்திருக்கிறது.
சென்ற பாசுரத்தில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு! என்று இவர்கள் சொல்ல, அந்த வார்த்தைகளை இந்த பாசுரத்தில் வரும் பெண்ணும் கேட்டு, ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்’ என்று சொல்லிப் பார்க்கிறாள். அப்படியே அந்த நாமங்களிலே கரைந்து அமர்ந்து விடுகிறாள்.
ஆண்டாள் மற்ற பெண்களுடன் இவள் வீட்டு வாசலுக்கு வந்து, ‘எல்லே! இளங்கிளியே… இன்னும் உறங்குகிறாயோ!’ என்று கேட்க, இவள் ஏற்கனவே எழுந்து இவர்களுக்காக காத்திருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. இவள் இங்கே பகவந்நாமத்தை அனுசந்தித்து அதிலே தோய்ந்து இருக்கும் நிலையில் அவர்கள் பேசுவது இவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.
இப்படி சில்லென்று என் அனுபவத்தின் நடுவே அழைக்கிறீர்களே! சில்லென்று அழையேன்மின்! பூர்ணத்துவம் பெற்றவர்களே – நங்கைமீர், போதர்கின்றேன்! நான் வந்து கொண்டே இருக்கிறேன், இருங்கள் என்கிறாள். அவள் அப்படி சொல்வதற்கு, பூர்வாசார்யர் ‘திருவாய்மொழி பாடாநின்றால், செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யம் ஆமாப்போலே!” என்று சொல்கிறார். அதாவது, திருவாய் மொழி பாராயணம் செய்ய நிறைய தனத்தைக் கொடுத்து ஒருவர் ஏற்பாடு செய்திருந்தாராம். திருவாய்மொழி பாராயணமும் ஆரம்பித்தாகிவிட்டது. அவர் சிறிது காலதாமதமாக அந்த கோஷ்டிக்கு நடுவில் வர – இவர்கள் திருவாய்மொழி பாராயணத்தை சற்று நிறுத்தி விட்டார்கள்.
ஆழ்ந்து அனுபவிக்க இப்படி ஏற்பாடு செய்தவரே தடையாக இருக்கிறதைப்போலே, இந்தப் பெண் அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மற்ற பெண்பிள்ளைகள் அழைப்பது அவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.
இப்படி ஒரு பாகவதனுக்கு இன்னொரு பாகவதன் இடைஞ்சலாக இருப்பர்களோ? உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா.. உன் தாமதத்திற்கு எங்களைக் குறை சொல்லலாமா ? என்ற அர்த்தத்தில் – வல்லையுன் கட்டுரைகள் – நீ கட்டி உரைப்பதில் வல்லமை உடையவள் – பண்டே உன் வாயறிதும் – உன் வாக் சாதுர்யம் எங்களுக்கு புதிதல்ல – பழைய நாட்கள் தொட்டு எங்களுக்கு தெரியும், என்கிறார்கள்.
அந்தப் பெண் இதற்கு பதிலாக, நான் கெட்டிக்காரியல்ல – நீங்களே வல்லமை உடையவர்கள் ஆகட்டும் – வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! தவறு என்னுடயதாகவே இருக்கட்டும் – என்கிறாள். இவ்வளவில், இவள் தமோ குணம் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவள் அல்ல. ரஜோ குணத்தால் சண்டை இட விரும்புபவளும் அல்ல – இவள் சத்வ குணத்தை உடைய பெண் – தவறை தன்னுடையதாகவே ஏற்றுக் கொள்கிறாள். நீங்கள் பெரியவர்கள், நான் சிறியவள் என்ற நைச்ய பாவத்தை வெளிப்படுத்துகிறாள். இதெல்லாம் தான் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய உயர்ந்த குணங்கள் – பாகவதர்களுக்கு உரிய சீலங்கள்.
வெளியே மற்ற பெண்கள், “சரி, ஒல்லை நீ போதாய்!” – விரைவாக கிளம்பு – ‘உனக்கென்ன வேறுடையை’ – நீ மட்டும் வேறாக தனியாக பகவதனுபவத்தை அனுபவிக்கலாமா? எங்களோடு சேர்ந்து கொள்ள வா என்று அழைக்கிறார்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் காட்டிய வழியை விடுத்து நீ வேறு வழியில் செல்லலாமா? என்றும் அர்த்தம் சொல்வர். இதற்கு அந்தப் பெண், ‘எல்லாரும் போந்தாரோ?’ – எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள். ‘போந்தார் போந்து எண்ணிக்கொள்’ என்று
வந்துவிட்டார்கள் – நீயே வெளியே வந்து எண்ணிப்பார்த்துக்கொள், என்றார்கள் இவர்கள். இதற்கு பூர்வாசார்யர்கள், ‘நோன்பிற்கு புதியவர்களான மற்ற இளம்பெண்களும் வந்துவிட்டனரோ?’ என்று அவள் கருணையுடன் கேட்பதாக சொல்வர்கள்.
வல்லானை கொன்றானை, மாற்றரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட எங்களோடு வந்து சேர்ந்து கொள் என்று அழைக்கிறார்கள். வல் ஆனை – என்று குவலயாபீடம் என்னும் யானையை கொன்றான். கம்சன் முதலான அரக்கர்களை அவர்கள் அரக்க குணம் கெட அழிக்க வல்லவனான மாயக்கண்ணனை பாட வாராய் என்று அழைக்க அவளும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்! இந்த பாசுரத்தில், பகவந்நாமத்தை இடையறாது அனுசந்திக்க வேண்டும். பாகவதர்களை மதிக்க வேண்டும்.
கர்வம் – அஹந்தை இவைகளை விடுத்து, எளிமையாக நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும். ஆசார்யர்கள் சொன்ன வழியில் நடக்க வேண்டும். அனுஷ்டானத்தில் காலதாமதம் செய்தலாகாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரியதான குணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறாள்.
விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்