நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய* கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண-
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை - மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!* நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் திருப்பாவை (16)
இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில், பத்து கோபிகைகளை – ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளைகளை எழுப்பிய ஆண்டாள், அவர்களுடன் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள். பகவான் க்ருஷ்ணன் இருக்கக்கூடிய அந்த திருமாளிகையில், க்ஷேத்ராதிபதிகள், துவார பாலகாதிபதிகள் என்று கட்டுக்காவல் அதிகமாக இருக்கிறது. அங்கே வாயிலில் இருக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல் காப்போர்களை இரைஞ்சி, அவர்களுடைய உயர்வைச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். இங்கே இவர்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் தான் உத்தேஸ்யம் என்றாலும், அதை அடைய நடுவில் என்ன தடை நேருமோ என்று பயந்து, எதிர்படுகிறவர்களை எல்லாம் அடிபணிந்து வேண்டுகிறார்கள்.
நந்தகோபர் ஆய்ப்பாடி கோபாலர்களுக்கெல்லாம் நாயகர். அவருடைய திருமாளிகையில், கோவிலுக்கு த்வஜ ஸ்தம்பத்தைப்போல, கொடிக்கம்பம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில், அதில் மணிக்கதவம் என்று அழகாக இருக்கிறது. இவற்றுக்கு காவலும் இருக்கிறது. இதற்கு முந்தைய சில பாசுரங்களைப் போல், இந்த பாசுரத்திலும் பூர்வாசார்யர்கள் தம் உரைகளில், ஆண்டாளுடைய குழுவும், காவலாளிகளும் பேசுவதாக ஆச்சர்யமாக அருளியிருக்கிறார்கள்.
இவர்கள் கண்ணன் மேலுள்ள த்வரையினால், விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், கிளம்பி வந்திருக்கிறார்கள். நந்தகோபரின் காவல்காரர்களை பரமனின் ரக்ஷணத்துக்கு சஹாயம் செய்பவர்களாக கொண்டு, அவர்கள் பெயரைச் சொல்லி அழைக்காமல், அவர்களது கார்யத்தை, அதன் பெருமையைச் சொல்லி அப்பேர்ப்பட்ட இடத்தில் இருப்பவர்களே, எங்களை கதவைத்திறந்து உள்ளே அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள்.
நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள். ‘பயமுள்ள க்ஷேத்ரத்திலே மத்யராத்ரத்திலே’ வந்து மணிக்கதவம் தாள் திறவாய்! என்று கேட்கிறீர்களே! நீவிர் யாவர்’ என்று காவலாளிகள் கேட்கிறார்கள். பயமுள்ள க்ஷேத்ரம் என்று ஆய்ப்பாடியை பூர்வாசார்யர் திருஅயோத்தியோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.
இது ராமனுக்கு அனுகூலமான அவனுக்கு ஒரு ஆபத்துக்களும் ஏற்படுத்தாத அயோத்தி அல்ல – இது ஆய்ப்பாடி, இங்கே கண்ணனுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. முளைக்கும் பூண்டுகளெல்லாம் விஷப்பூண்டுகளாய் இருக்கின்றன. அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவில் பூதனை, குதிரை, யானை, கொக்கு என்று எல்லாம் கண்ணனுக்கு தீமை செய்யக்கூடியதாய் இருக்கிறது. அதனால் நாங்கள் விழிப்புடன் காவல் காக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்றும் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள் என்று கேட்க, ஆண்டாள், ‘நாங்கள் ஆயர் சிறுமியரோம்!’ என்று பதில் சொல்லுகிறாள். இதற்கு காவலாளிகள் காவலாளிகள், நீங்கள் சிறுமிகள் என்றோ, ஆயர் குலத்தவர் என்றோ பார்த்து நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. பெண்களிலே சூர்ப்பநகை போன்ற அரக்கிகள் இருந்திருக்கிறார்கள். ஆயர் குலத்தவராக பூதனை வேடமிட்டு கண்ணனை கொல்ல வந்தாள். ஆகவே நீங்கள் ஆய்ப்பாடி சிறுமிகளாகவே இருந்தாலும், இந்த நேரத்துக்கு வந்தது ஏன்? என்று கேட்கிறார்கள் காவலாளிகள்.
ஆண்டாள் அதற்கு பதிலாக ‘அறை பறை’ என்று நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம் – துஷ்க்ருத்யங்கள் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை, என்று ஆண்டாள் சொல்கிறாள். சரி, பெருமானே வாக்கு கொடுத்தானோ! அப்படியானால் சரி, ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!’ என்று கதறுகிறார்கள். மாற்றி மாற்றி பேசாதே, உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் இருக்க, ஏற்கனவே தவித்து போயிருக்கிறோம். எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.
இதற்கு மனமிரங்கிய காவலர்கள், சரி போங்கள் என்று அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அசேதனங்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. ‘அநதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதேப்போலே, ஆத்மஸ்வரூபம், ஸ்வைவலக்ஷண்யத்தாலே, அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாயிருப்பது’ என்று சொல்கிறார் பூர்வாசார்யர். இந்த கதவுகள் தம் இயல்பால் பகவத் பக்தர்களுக்கும் உள்ளே விட மறுப்பவையாய் இருக்கின்றன. அதனால் இந்த க்ருஷ்ண ப்ரேமையுள்ள கதவை நீங்களே திறந்து உதவுங்கள் – நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்
ஆடியோ வடிவில்