உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்* நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்*
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்* வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப் -
பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்* பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப* வந்து திறவாய் மகிழ்ந்து - ஏலோர் எம்பாவாய்.
ஸ்ரீஆண்டாள் திருப்பாவை (18)
இதற்கு முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையில் கண்ணனை எழுப்ப முயற்சித்த கோபிகைகள், தம் முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவர்களுக்கு அப்போது தான் பகவானை ஆஸ்ரயிக்க பிராட்டியின் புருஷகாரம் தேவை என்ற புத்தி வருகிறது. ‘ஆஸ்ரயண வேளையிலிறே க்ரமம் பார்ப்பது – போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாதே!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். க்ருஷ்ணனை அடைய விரஹ தாபத்தாலே வந்தவர்கள், தம்மை மறந்தார்கள் – சரியான உபாயத்தை –
க்ரமத்தை மறந்தனர். பிறகு புத்தி தெளிந்து இப்பாசுரத்தில் பகவான் க்ருஷ்ணனின் பிராட்டியான நப்பின்னையை புருஷகாரம் செய்தருள எழுப்புகிறார்கள். நப்பின்னை தேவி, யசோதையின் சகோதரரான ஸ்ரீகும்பரின் மகள் என்று சொல்வர். நப்பின்னை – நற்பின்னை என்பது நல் – பின்னை – நல்ல தங்கை (அக்காளைப் பற்றித்தான் தெரியுமே!) – என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார் ஒரு பெரியவர்.
மதம் உந்துகின்ற களிறு – இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபர். ஓடாத தோள்வலியன் என்ற பதத்தில் அவரது வலிமை பேசப்பட்டது. இங்கே நந்த கோபரை ஆசார்யனாகக் கொண்டு நப்பின்னையை அடைய முயற்சிக்கிறார்கள். அதனால், மதம் பிடித்த களிரைப்போல நாஸ்தீக வாதிகள், துஷ்டர்கள் வந்தாலும் ஞான பலத்தால் எதிர்த்து வெல்லக்கூடிய சக்தி படைத்தவராம் நந்த கோபர். அப்பேர்ப்பட்டவரின் மருமகளே! என்று விளிக்கிறார்கள். அவரது மருமகள் – மஹா லக்ஷ்மியான இவளிடம் தர்ம பூத ஞானம் பிரகாசிக்கிறதல்லவா! அதோடு நந்த கோபர்தான் கொடை வள்ளலாயிற்றே.. இதற்கு முந்தைய பாசுரத்தில் சொன்னார்களே! அவரது மருமகளான நீ அவரையும் விட நிரவதிகமான காருண்யம் உள்ளவளன்றோ!
இப்படி இவர்கள் அழைக்க, நப்பின்னைப் பிராட்டி எழுந்து வரவில்லையாம்! திருவாய்ப்பாடி பெண்பிள்ளைகள் எல்லோருமே நந்தகோபருக்கு மருமகள்கள் தாமே… க்ருஷ்ணன் மேல் மாளாத காதல் கொண்ட பெண்கள் தானே எல்லோரும்…! என்று பேசாமல் இருந்துவிட்டாளாம். பின் இவர்கள் நப்பின்னாய்! என்று பெயர் சொல்லி, நீ இருப்பது உன் வாசம் கமழும் குழல்களிலிருந்தே தெரிந்தது. கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்! பகவான் கந்தப்பொருள். பிராட்டி அதிலிருந்து வரும் வாசனை. இணை பிரியாத இரட்டையராயிற்றே நீவிர்! நீ யாரென்று நாங்கள் கண்டுகொண்டோம். எங்களை நீயே கடைத்தேற்ற வேண்டும்! என்று இரைஞ்சுகிறார்கள். இதற்கு நப்பின்னை, நடுராத்திரியில் வந்து எழுப்புகிறீர்களே! ஏன் என்று கேட்க, இல்லை பொழுது புலர்ந்தது… ‘வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!’ என்றார்கள்.
அது சாமத்துக்கு சாமம் கூவும், சாமக்கோழியாகக்கூட இருக்கலாம் என்று நப்பின்னை சொல்ல, இவர்கள் உன் வீட்டு ‘மாதவிப் பந்தல்’ மேல், பலகாலும் – பலமுறை குயில் முதலான பக்ஷிகள் கூவுவதை நீ கேட்கவில்லையா! என்றார்கள். அதற்கு அவ்விடத்திலிருந்து பதில் வராமல் போகவே உள்ளே என்ன நடக்கிறது என்று கதவில் துவாரம் வழியாக பார்த்து அங்கே கிடைத்த சேவையை ஆச்சர்யமாக சொல்கிறார்கள். நப்பின்னை ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் அவனோடு போட்டியிட்டு வென்ற பந்தினையும் பிடித்து வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். அதென்ன… ஒரு கையில் நித்ய விபூதியாக பகவானையும், மறுகையால் லீலாவிபூதிக்கு அடையாளமாக பந்தையும் இவள் பிடித்திருக்கிறாள்! என்று ஆச்சர்யப் படுகிறார்கள். பிஞ்சு விரல்கள் நிறைய அள்ளி நீ பிடித்திருக்கும் பந்தாக நாங்கள் பிறந்திருக்கக்கூடாதா! எதற்கு எங்களுக்கு சைதன்யம் உன் ஸ்பர்சம் இல்லாமல்! அசேதனமான பந்தாகவே இருப்போமே உன் கை படுமென்றால்!
அடுத்து சொல்கிறார்கள், நாங்கள் வந்தது உனக்கு ப்ரியமானவனான – உன் ப்ரியத்தை பெற்றவனான கண்ணனைப்பாடத்தான்! நீ மைத்துனனை பாராட்ட கண்ணனிடம் ஆசையோடு இருக்கிறாய்! நாங்களும் அப்படித்தான்! என்கிறார்கள். கண்ணனை அவள் ஏற்கனவே அடைந்தவள். இவர்கள் அடைய தவிப்பவர்கள். அதற்கு அவள் உதவியை நாடுபவர்கள். அதனால் நந்தகோபரிடமோ, யசோதையிடமோ, பலராமனிடமோ சொன்னது போல், எங்கள் கண்ணனை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்க
முடியவில்லை. அப்படிக் அங்கெல்லாம் கேட்டும் நடக்காமல் போய்விட்டது. அதனால் உன் மைத்துனன் என்று பகவானிடம் நப்பின்னைப் பிராட்டியின் சம்பந்தத்தைச் சொல்லி அவள் புருஷகாரத்தை வேண்டுகிறார்கள்.
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப என்ற பதத்தில் இவர்கள் அவள் அபய வரத ஹஸ்தங்களை காண தவிப்பது தெரிகிறது. நாங்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறோம். நீயே வந்த திற அம்மா! உன் செந்தாமரை போன்ற கரங்கள் கதவைத் திறக்க நாங்கள் அதை தரிசிக்க வேண்டும். வந்து திறவாய் மகிழ்ந்து! என்று சொல்லும் போது, மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் தர்ம பூத ஞானம் சுடர் விட்டு ஒளிர்கிறதாம். அவள் க்ருஷ்ணனை தம்முடனேயே எக்காலமும் கொண்டிருப்பதால் அவள் முகத்தில் மகிழ்ச்சி தளும்ப அந்த நிலையில் எங்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இந்த அத்யாச்சர்யமான பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் மஹா லக்ஷ்மியை நமக்குள்ளேயே உணரமுடியும். குரு பரம்பரைக்கதைகளில் இத்தகைய சம்பவம் உண்டு. உடையவர் எம்பெருமானார் ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சந்யாசியாக தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்து உண்பது உண்டாம். அப்படி வரும்போது திருப்பாவை பாசுரங்களை அனுசந்தித்தும், வாய்விட்டு பாடியும் வரும்போது, அவரது ஆசார்யனான பெரிய நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது இந்த உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியின் போது, பெரிய நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் ரொம்பவும் அனுபவித்துப் பாடிக்கொண்டே வந்ததில் இந்த காட்சியை காண நேரவும் அப்படியே மூர்ச்சித்து விழுந்து விட்டாராம்!
அந்த செய்தி கேட்ட, பெரிய நம்பியும் வெளியே வந்து ராமானுஜரை ஆஸ்வாசப்படுத்திவிட்டு, என்ன ‘உந்து மத களிற்றன்’ பாசுர அனுசந்தானமோ! என்றாராம். அவரும் அப்படி அனுசந்தித்ததால் தானே இந்த அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது! பெரியவர்கள் ஆழ்ந்து அனுபவித்ததால் இந்த பாசுரம் மிகுந்த ஏற்றம் பெற்றது என்பது தேறும்.
விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்