காஞ்சி மகாபெரியவா ஒருமுறை திருப்பதி சென்று, வேங்கடவனை தரிசித்துத் திரும்பிய போது அங்குக் கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பக்தர்கள், அவரின் நல்வாக்கைக் கேட்கக் காத்திருப்பதை அறிந்து அவர்களிடம், ";நான், உங்களுக்கு ஓர் உபதேசம் பண்ணுகிறேன். காலையில் எழுந்ததும், 'ஸ்ரீவேங்கடேசாய நம:' என்றும், இரவில் படுக்கப் போகும்போது, ஸ்ரீ வேங்கடேசாய மங்களம் என்றும் சொல்லணும்"; என்றாராம். ஒருநாள் தொடங்கும்போது, நாம் வேங்கடவனை வாழ்த்தியும், இரவு உறங்கும் முன் அவனைப் போற்றியும் முடித்தால் அந்த நாள் முழுவதும் புண்ணிய பலத்தால் நிறைந்த நாளாக அமையும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.

இரவு உறக்கத்தில் இருந்து அதிகாலை எழுகிறோம். அப்படி எழும்போது, மனம் சிந்தனையற்று நிர்மலமாக இருக்கும். அலைகளற்ற குளம்போல் அமைதியாக இருக்கும் மனதில் முதன்முதலில் படும் காட்சிதான் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில்தான் அன்றைய சிந்தனை அமையும். அதனால்தான், முதன்முதலில் நாம் கண்விழித்ததும் மங்களகரமான பொருள்களைக் காணவேண்டும். இறைவனின் திருவுருவத்தை பார்த்தபடி கண் விழித்தால் மனம் பக்தியிலும் அமைதியிலும் நிலைத்து, அந்த நாளின் தொடக்கம் நல்லதாய் அமையும். பெரும்பாலானவர்கள், அவரவர்களின் இஷ்டதெய்வத்தின் திருவுருவத்தைத் தரிசித்தபடி கண்விழிக்க விரும்புவர்.

கலியுகத்தின் கண்கண்ட கடவுளாகத் திருமலை மேல் நின்று, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் செய்யக் காத்திருப்பவன் வேங்கடவன். குலதெய்வமாக எந்தத் தெய்வம் இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வம் திருப்பதி பெருமாளாக இருக்கும். செல்வ மகளான மகாலட்சுமியைத் தன் மார்பில் தரித்த அந்தப் பெருமாளை தரிசிக்க, செல்வவளம் சேரும் என்பது நம்பிக்கை.

சரி, நாமெல்லாம் அந்த மலையப்பன் முகத்தில் விழிக்க விரும்புகிறோம், அவன் யார் முகத்தில் தினமும் விழிக்கிறான் தெரியுமா?

அனுதினமும் அதிகாலையிலேயே சுப்ரபாத சேவை நடைபெறும். இரவு இட்ட திரை விலக்க, மங்களப் பொருள்களோடு வேதியர்கள் அவன் சந்நிதி முன் வந்து நின்று வேதகோஷங்களை இசைப்பர். 'கௌசல்யாவின் புதல்வனான ராமனே, ஞாயிறானவன் வந்துவிட்டான். வந்து நித்திய அனுஷ்டானங்களைச் செய்வாயாக' என்று விஸ்வாமித்திரர் சிறுவனான ராமனை எழுப்பச் சொன்ன மந்திரத்தைச் சொல்லி அவனைத் துயில் எழுப்புவர்.

திருச்சந்நிதியின் தங்க வாயிலின் முன்னே திருமலையின் தலைமை ஜீயர் தலைமையில் அர்ச்சகர் குழாம் காத்திருப்பர். திருப்பதி பெருமாளுக்கென்றே சுந்தரத் தெலுங்கில் அற்புதக் கீர்த்தனைகளை இசைத்த அன்னமாச்சார்யரின், பூபாளக் கீர்த்தனை ஒலிக்கும். அதற்கடுத்து தேன் ஒழுகும் தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி இசைக்கப்படும். அதன்பின்னர் மங்கல மணிகள் ஒலிக்க, பேரிகையும் ஊதுகுழலும் சேர்ந்து இசைக்கப்படும்.

பெருமாளின் முன் இருக்கும் மாயத்திரை போன்ற அந்தச் சந்நிதியின் கதவுகள் திறக்கும் நேரம் நெருங்கியதும், தூப, தீபங்கள் சூழ பலத்த கோவிந்த நாமத்துடன் திருக்கதவம் திறப்பர். அதுவரை அவன் முன் நின்ற அனைவரும் ஒதுங்கிக்கொள்வர். திருவாயிலுக்கு நேராகப் பெருமாளின் திருக்கண்களுக்கு நேராக ஒரே ஒரு யாதவர் மங்களங்களில் உயர்ந்ததாகக் கருதப்படும் பசுவையும் கன்றையும் கையில் பிடித்தபடி பெருமாளுக்கு முன்பாக நிற்பார். திருப்பதி வேங்கடவன், மாடு கன்று சகிதம் நிற்கும் அந்த யாதவருக்கே ஒரு புதிய நாளின் முதல் தரிசனத்தைத் தருவார்.

காலங்கள் பல மாறியபோதும் இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆவினங்களின் தலைவனான அந்த கோவிந்தன் இன்றும் ஒரு யாதவருக்கே தனது முதல் தரிசனத்தை அருளி அவர் முகத்தில் விழிக்கிறார்.

பசுவுக்கும் பெருமாளுக்குமான பந்தம் எப்பேர்ப்பட்டது? பத்து அவதாரங்களுள் சாதாரண சம்சாரிகளும் பற்றிக்கொண்டு கரையேற உசிதமான 'கோவிந்தா' என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணாவதாரத்தில் அவன் பெயரே 'கோ 'பாலன்தானே. பசுக்களை ரட்சிப்பவன் அல்லவா அவன். கிருஷ்ணாவதாரம் முடிவுற்றதும் பசுக்கள் பரமனைக் காணாது தவித்தனவாம்.

பாலும், வெண்ணெய்யும் அளித்து கண்ணனைப் போஷித்தவை ஆவினங்கள். இந்தக் கலியுகத்திலும் திருமால் அதை மறக்கவில்லை. அதனாலேயே இன்றும் திருப்பதியில் பசுவும், கன்றும் கூடிய மேய்ப்பரான யாதவர் முகத்தில் விழிக்கிறார் எம்பெருமான் சீனிவாசன்.
ஏழுமலைக்கு வந்த வேங்கடவன் பசியோடு தவம் செய்தபோதும் அவனுக்குப் பால்சுரந்து அன்பு செய்தது ஒரு பசுவே. அகத்தியனிடம் கோவினை வேண்டி, சகல லோகத்தைக் காக்கும் நாமமான 'கோவிந்தா' நாமத்தைத் தனக்கு உரிமையாக்கிக்கொண்டதும் அவன் திருவிளையாடலே.

பசுவைப் பசு என்று கொள்வாரும் உண்டு. ஜீவாத்மா என்று கொள்வாரும் உண்டு. நம் ஜீவனே பசு. அப்படியானால் அதை, அவன் சந்நிதிக்கு இட்டுச் செல்லும் அந்த யாதவர் யார்? இறைவனிடம் நம்மை இட்டுச் சென்று அவனை அறிமுகம் செய்துவைக்க வல்லவர் குருநாதர் அன்றி வேறு யார். குருவே யாதவர். கூட வரும் கன்று... அது நம் சத் குணங்கள். சத் குணங்கள் இல்லாதவன் குருவினைக் கண்டடைய முடியாது. நம் சத்குணங்களோடே நம்மை வழிநடத்தி பகவானிடத்தில் கொண்டு சேர்க்கிறவர் குரு.

பெருமாள் யார் முகத்தில் விழிக்க ஆசைப்படுகிறார் தெரியுமா? சத்குணங்களோடு குருவின் வழிகாட்டலில் தன் சந்நிதியில் வந்து நிற்கும் ஒரு ஜீவாத்மாவின் முகத்தில்தான் பரந்தாமன் கண்விழிக்க ஆசைப்படுகிறான். நாம் அந்த ஜீவாத்மாவாக மாறி பெருமாளின் தரிசனத்தைப் பெறுவோம்.