📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

வேடுவனாய் வந்த வேதநாயகன்

Sri Mahavishnu Info
பகவத் ராமானுஜர் காஞ்சியில் இருந்த சமயம், அருகிலுள்ள திருப்புட்குழியில் வாழ்ந்து வந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவருடன் கோவிந்த பட்டர் என்பாரும் இருந்தார். இவர் ராமானுஜருக்கு தம்பிமுறை ஆவார். (சித்தியின் மகன்)

குருகுல வாசத்தில் வேதாந்த பாடங்களில் ராமானுஜருக்கும், யாதவப் பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றியது. அதனால் ராமானுஜரின் மேல் யாதவப் பிராகாசருக்கு கசப்பு மனப்பான்மை உண்டாயிற்று.

அச்சமயத்தில் அந்நாட்டு மன்னனின் மகளுக்கு பேய் பிடித்திருந்தது. மன்னனின் வேண்டுகோளின்படி யாதவப் பிராகாசர், தான் அந்தப் பேயை விரட்டி மகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி, தன் சீடர்களுடன் அரண்மனை சென்றார். உடன் ராமானுஜரும் சென்றார்.

யாதவப் பிராகாசரைக் கண்ட அரசனின் மகள், அவரை அவமானப் படுத்தினாள். யாதவப் பிரகாசரால் அவளிடமிருந்து பேயை விரட்ட முடியவில்லை. அதே சமயம் அவருடன் வந்திருந்த ராமானுஜர், தான் அப்பெண்ணைப் பீடித்திருக்கும் பேயிலிருந்து காப்பாற்றி நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறேன் என்று கூறி சில மந்திரங்களை உச்சரிக்க, அந்தப் பெண்ணை விட்டு பேய் பிரிந்து சென்றது.

தன் மகளுக்கு நல்ல நிலைமை ஏற்பட்டதைக் கண்ட மன்னன் அவரை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தான். இதனால் யாதவப் பிராகாசருக்கு ராமானுஜர்
மேல் மனக்கசப்பு மேலும் அதிகரித்தது.அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தன் சீடர்களுடன் (கோவிந்தப் பட்டரை தவிர்த்து) ஆலோசனை
செய்து ஓர் திட்டம் வகுத்தார்.

சீடர்களுடன் காசியாத்திரை செல்வதும், அங்கு ராமானுஜரை கங்கையில் தள்ளிக் கொன்று விடவும் முடிவு செய்யப்பட்டது. காசியாத்திரை தொடங்கியது. குழுவில் நடந்த விஷயங்கள் எப்படியோ கோவிந்தப் பட்டருக்குத் தெரிந்துவிட்டது.

குழுவினருக்குத் தெரியாமல் மேற்சொன்ன விவரத்தை ராமானுஜருக்கு ரகசியமாய் தெரிவித்து, அவரை எப்படியாவது தப்பித்துச் செல்லுமாறு கேட்டுக்
கொண்டார். அதன்படியே ராமானுஜரும் அங்கிருந்து தப்பித்து காஞ்சியை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

காட்டு வழிகளில் நடந்து சென்றபோது இரவு வந்துவிட்டது. மிகவும் களைத்துப்
போன அவர் வழியில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்தபோது, அவ்வழி
வந்த ஓர் வேடனும் வேடுவச்சியும் ராமானுஜரைக் கண்டு விவரம் அறிந்து, காஞ்சி செல்ல அவருக்கு உதவுவதாகக் கூறி, அவருக்கத் துணையாக அங்கேயே
தங்கினார்கள்.

பொழுது விடிந்தது. வேடுவச்சி தனக்கு தாகம் எடுப்பதாகவும், அருகில் உள்ள நீர்
நிலையிலிருந்து நீர் எடுத்து வருமாறும் கேட்டுக் கொண்டாள். அதன்படி ராமானுஜர் நீர் கொண்டு வரச் சென்று திரும்பியபோது வேடனையும், வேடுவச்சியையும் காணாது திகைத்தார்.

'தனக்கு காஞ்சி செல்ல வழிகாட்டுவதாகக் கூறியவர்களைக் காணவில்லையே.
என்ன செய்வது?' என்று காஞ்சி வரதனை மனதில் நினைத்தபடியே நடக்கலானார்  ராமானுஜர்.

அப்போது சூரிய உதயம் ஆகிவிட்டது. ஜனநடமாட்டம் கண்ணில் பட்டது. ஆனாலும் தான் எங்கிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. எனவே
அங்கு சென்றவர்களிடம் விசாரித்தார். அவர்கள் தூரத்தில் காஞ்சி வரதர் கோயில் ராஜகோபுரம் தெரிவதை சுட்டிக் காட்டி, 'தாங்கள் காஞ்சியில்தான் இருக்கிறீர்கள்' என்றனர்.

வரதராஜப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரத்தைக் கண்டவுடன் அவருக்குப் புரிந்துவிட்டது. பெருந்தேவித் தாயாரும், பேரருளாளனுமே வேடன் வேடுவச்சியாய் வந்து தன்னை காஞ்சியில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்று மகிழ்ந்து வரம் தரும் மாமணிவண்ணன் வரதராஜனின் கோயிலை நோக்கிச் சென்றார்.

ராமானுஜர் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவத்தின் நினைவாக இன்றும் பிரதி வருடமும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் இவ்வைபவம் நடந்து வருகிறது. இவ்வருடம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 10ம் நாள் இராப்பத்து சாற்றுமறை நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாளும், வைகுண்ட ஏகாதசியைத் தொடர்ந்து 10 நாட்களும் பகல்பத்து இராப்பத்து உற்சவங்களும் நடக்கும்.

அதன் நிறைவு நாளில், 'ஆழ்வார் திருவடி தொழில்' என்ற வைபவம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் 'இயற்பா சாற்றுமறை' என்ற வைபவம் நடக்கும். அதற்கு அடுத்த நாள்  அனுஷ்டான குள உத்ஸவம் என்ற பெயரில் கடைப்பிடிக்கும் வைபவமே ராமானுஜர் வாழ்வில் மேற்சொன்ன சம்பவத்தின் நினைவாக நடத்தப்படுகிறது.
-
ராமானுஜர் காசியிலிருந்து திரும்பியது முதல் காஞ்சியில் வசித்து அருளாளனின் ஆராதனைக்காக வேடுவச்சியால் குறிப்பிட்டுச் சொன்ன நீர் நிலையிலிருந்து தினமும் நீர் கொண்டு வருவாராம். மேலும் அங்கு தன் அனுஷ்டானங்களை (பூஜைகளை) செய்து வந்தமையால் அந்த நீர் நிலைக்கு அனுஷ்டானக் குளம் என்ற பெயர் ஏற்பட்டது.

அந்த இடமான காஞ்சியிலிருந்து வந்தவாசிப் பாதையில் அமைந்துள்ள செவிலிமேடு கிராமத்தில் உள்ளது. இன்றும் அந்தக் குளத்தையும் (சாலைக் கிணறு என்றும் பெயர்) ராமானுஜர் சன்னதியையும் அங்கு தரிசிக்கலாம்.

மேற்படி திருவிழா நாளில் ராமானுஜரும் வரதராஜப் பெருமாளும் காலை காஞ்சியிலிருந்து புறப்பட்டு மதியம் அங்கு வந்து சேர்வார்கள். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் இருவருக்கும் திருமஞ்சனம், நைவேத்யம் நடந்து அன்று மாலையிலேயே காஞசிபுரம் வந்தடைவார்கள்.

திரும்பும்போது வரதராஜப் பெருமாள் வேடனாய் அல்கரிக்கப்பட்டிருப்பார். வழியில் அமைந்துள்ள தூப்புல் (ஸ்வாமி தேசிகனின் அவதார தலமும், தீபப் பிராகாசர் திருக்கோயிலும் அமைந்துள்ளது) சன்னதியிலிருந்து ஸ்வாமி தேசிகன் வரதராஜப் பெருமாளையும் ராமானுஜரையும் எதிர்கொண்டழைத்து மரியாதை செய்வார்.

பின்பு வரதராஜப் பெருமாளும், ராமானுஜரும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு திரும்புவார்.

ராமானுஜர், சாலைக கிணற்றிலிருந்து வரதராஜப் பெருமாளின் நித்ய ஆராதனைக்கு நீர் கொண்டு வந்ததன் நினைவாக இன்றும் சாலைக் கிணற்று நீர் நித்தமும் கொண்டு வரப்படுகிறது. மேலும் சாலைக் கிணறு, அனுஷ்டானக் குளப் பகுதியில் அமைந்திரக்கும் ராமானுஜருக்கு பிரதி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் விசேஷ வைபவமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது செவிலிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில்
அனுஷ்டான குள உற்சவம் நடைபெற்று வருகிறது.

நீங்களும் ஒரு முறையாவது இவ்வைபவத்திற்குச் சென்று வரம் தரும் வரதனின் இன்னருளுக்கு பாத்திரமாகலாம்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்