மார்கழி அமுது - 17

Sri Mahavishnu Info

17. உலகளந்த உம்பர் கோமான்

நேற்றைய விருந்தாகிய திருப்பாவை பாசுரத்தில் என்ன பார்த்தோம்?

ஆண்டாள் மற்ற ஆய்ப்பாடி பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் பற்றிய நமது இந்த குட்டிக் கற்பனை மார்கழி 17வது நாளாகிய இன்று இடம் பெறுகிறது.

உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

நந்த கோபன் படுக்கையிலிருந்து எழுந்தவர் முதன் முதலாக இந்த சிறுமிகளின் முகத்தில் தான் விழித்தார் என்றே வைத்துக் கொள்ளலாம்.

ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''குழந்தை, யாரம்மா நீ, நீங்கள் எல்லாம் எதற்கு இங்கே அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா, மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி வழங்கி அன்போடு அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.''

இதற்குள் யசோதை அங்கு வந்துவிட்டாள் . இக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தித்தாள்

அருகில் அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா, யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம், அவற்றை கண்காணிக்கும் எங்கள் ஆயர் பாடி கோபர்கள் மற்றும் வீட்டில் உள்ள கோபியர் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். உங்களைத் துயில் எழுப்ப திருவுள்ளம் கொண்டு வந்தோம் தாயே. எங்களை ஆசிர்வதிப்ப்பீர்களாக''

இதற்குள் கிருஷ்ணனைக் கண்டு விட்டாள் ஆண்டாள். அருகே துயில் கொண்டிருந்த பலராமனையும் பார்த்துவிட்டவள் வணங்கினாள்.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.!

''எங்கள் தலைவனின் சகோதரா, அழகிய வீர பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.''

''எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது. ஞாபகம் வந்தபோது சொல்கிறேன் !!)

ஆண்டாள் அழகாக அன்று அவர்கள் அனைவரையும் வணங்கி போற்றி ஒரு அழகான பாசுரம் பாடுகிறாள். தோழியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ரகலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் பாடியது எங்கோ தென்கோடியில் உள்ள வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் காதிலும் விழுந்தது.
இதை யார் பாடுகிறார்கள்?

ஆண்டாளா கோதையா?

ஆஹா! ஆண்டாள் கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடையென பாசுரம் ஒன்று பாடுகிறாள்.
இல்லை, இல்லை, ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் மற்றொரு இளம்பெண் கோதை அல்லவோ ஆண்டாளாகி இதைப் புனைகிறாள்.

ஏட்டில் எழுத்தாணி விரைகிறது.

வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை நிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. இனி காலம் காலமாக அந்தக் காணற்கரிய நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் எழுத்துச் சிலையாக என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.
இதோ அந்த அற்புத பாசுரம்.

''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்'

தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இது வரை நூறு தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை படித்து வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியை கீழே வைக்க மனம் வரவில்லையே. எதிரே மலர்களைத் தொடுத்துக்கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

''பாமாலையில் மகிழ்ந்த அரங்கா உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் சூடிக்கொள்''.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!