தை அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்?

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, அவர்களுக்கு பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர்கள் மன திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள்.

நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசிகளை வாங்குவது நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம். 

நம் முன்னோர்களின் கூற்றுப்படி, 'மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற நான்கு நிலைகளில், நம் முன்னோர்களை மாதா, பிதா என முதல் இரண்டு நிலைகளில் வைத்திருந்தார்கள். 

அவர்களை நினைத்து நாம் தர்ப்பணம், படையலிட்டு பூஜை செய்ய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. படையலிட்டு காகத்திற்கு வைக்கும்போது, சனியின் வாகனமான காகம் அதை சாப்பிடுவதால் சனிபகவான் வழிபாடு பூர்த்தியாகின்றது. 

சனிபகவானுக்கு அதிபதி எமதர்மன். அதனால் காகம் அந்த சாதத்தை எடுத்தால் எம லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.

இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் கூற்று. 

அமாவாசை அன்று முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும்.

இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

வீட்டில் செய்ய வேண்டியவை :

தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது.

தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை :

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் புண்ணியமும், செல்வமும் கிடைக்கும்.