Sri Mahavishnu Info: திருமழிசை ஆழ்வாரின் பசியை போக்கிய பெருமாள் | The Lord Who Satisfied Thirumazhisai Alvar’s Hunger திருமழிசை ஆழ்வாரின் பசியை போக்கிய பெருமாள் | The Lord Who Satisfied Thirumazhisai Alvar’s Hunger

திருமழிசை ஆழ்வாரின் பசியை போக்கிய பெருமாள் | The Lord Who Satisfied Thirumazhisai Alvar’s Hunger

Sri Mahavishnu Info
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சித்திரை மாதம், மதியம் பன்னிரண்டு மணி.

கும்பகோணத்தின் சாலைகள் வெப்பமயமாகக் காட்சி அளித்தன.

திருக்குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோயிலில் உச்சிகால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அடியார்கள் இருவர் அவசரமாகக் கோயிலுக்குள் ஓடி வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவரான திருமழிசை ஆழ்வார். அவருடன் வந்தவர் அவரது சீடரான கணிகண்ணன்.

திருமழிசை ஆழ்வாரின் முகம் மிகவும் வாடி இருந்தது.

அதற்கான காரணத்தைக் கோயில் பணியாளர்கள் கணிகண்ணனிடம் கேட்டார்கள்.

அதற்குக் கணிகண்ணன்,
“நம் சாரங்கபாணி பெருமாளைத் தரிசிக்க காஞ்சியில் இருந்து நடைப் பயணமாக வந்தோம்.
மூன்று நாட்களாக வழியில் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை.
அந்த பசி, மயக்கம், களைப்பு தான் ஆழ்வாரின் முகத்தில் தென்படுகின்றன!” என்றார்.

பெருமாள் சந்நதிக்கு விரைந்தார் திருமழிசை ஆழ்வார்.

ஆனால் திரை போடப்பட்டிருந்தது.

சக்கரபாணி பட்டாச்சாரியார் என்னும் அர்ச்சகர் இறைவனுக்குப் பிரசாதம் நிவேதனம் செய்து கொண்டிருந்தார்.

உச்சிகால பூஜை முடிந்த பின் தான் திரை விலகும் என்பதால், வெளியே காத்திருந்தார் திருமழிசை ஆழ்வார்.

அந்த நேரத்தில் இறைவனிடம் இருந்து திடீரென “நிறுத்துங்கள்!” என்ற ஒலி எழுந்தது.

பிரசாதம் நிவேதனம் செய்த அர்ச்சகரிடம் எம்பெருமான் பேசினார்.

“எனக்கு நெருங்கிய நண்பரான திருமழிசை ஆழ்வார் என்னைத் தரிசிக்க மூன்று நாட்கள் நடைபயணமாக வந்துள்ளார்.
இப்போது அவர் வெளியே காத்திருக்கிறார். அவரை முதலில் உள்ளே அழைத்து வாருங்கள்!” என்றார்.

திருமழிசை ஆழ்வார் உள்ளே அழைத்து வரப்பட்டார்.

‘ஆராவமுதன்’ என அழைக்கப்படும் சாரங்கபாணி பெருமாளை கண்குளிரப் பார்த்தார்.

அவன் முன்னே கமகமவென மணக்கும் சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

பெருமாள் ஆழ்வாரை பார்த்து,
“பிரானே! இந்தச் சர்க்கரைப் பொங்கலை நீங்கள் முதலில் அமுது செய்யுங்கள்.
நீங்கள் உண்ட மிச்சத்தை நான் சாப்பிடப் போகிறேன்!” என்றார்.

அதிர்ந்த திருமழிசை ஆழ்வார்,
“எம்பெருமானே! தலைவன் உண்ட மிச்சத்தைத் தான் தொண்டன் உண்ண வேண்டும். இது தலைகீழாக இருக்கின்றதே!” என்றார்.

அதற்கு எம்பெருமான்,
“நான் அனைத்து உயிர்களுக்குள்ளும் உயிராய் இருக்கிறேன்.
நீங்கள் அனைவரும் எனக்கு உடலாக இருக்கிறீர்கள்.
உங்களுக்கு உணவளிப்பது என் கடமை அல்லவா?
அதனால், உங்கள் உடலுக்கு உணவாக இந்தச் சர்க்கரைப் பொங்கல், உங்கள் உயிருக்கு உணவாக என்னுடைய வடிவழகை எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

திருமழிசை ஆழ்வார் எம்பெருமானின் கட்டளையை ஏற்று சர்க்கரைப் பொங்கல் உண்டார்.

பின் அவர் உண்ட மிச்சத்தை எம்பெருமான் உண்டார்.

பொதுவாக அடியார்களை ‘ஆழ்வார்’ என்றும், இறைவனை ‘பிரான்’ என்றும் அழைப்பது வழக்கம்.

ஆனால், இங்கு எம்பெருமான் திருமழிசை ஆழ்வாரை 'பிரான்' என்று அழைத்தார்.

அதனால் தான், குடந்தையில் இறைவன் ‘ஆராவமுதாழ்வான்’ என்றும், ஆழ்வார் ‘திருமழிசைப்பிரான்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இவ்வாறு தன் பக்தர்களுக்கு உயிராக இருந்து அவர்களுக்கு உணவளிக்கும் எம்பெருமான் 'பூதபாவந:' என்றும் அழைக்கப்படுகிறார்.

‘பூதபாவநாய நம:’ என விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ஒன்பதாவது திருநாமத்தை தினமும் சொல்லி வந்தால்,

திருமழிசைப்பிரானின் பசியைப் போக்கியது போல், நம்முடைய உடல் பசி, அறிவு பசி உள்ளிட்ட அனைத்து பசிகளையும் எம்பெருமான் போக்கி அருள்வார்.

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்