ராம என்ற வார்த்தைக்கு ஆனந்தம் என்று பொருள். ராம என்ற சப்தத்துக்கு ஆனந்தத்தைத் தருபவன் என்று பொருள்.

ஏழு என்ற எண்ணின் அடிப்படையில் பார்த்தால், வாரத்துக்கு நாட்கள் ஏழு. சூரியன் பவனி வரும் தேரின் குதிரைகள் ஏழு. சப்த ரிஷிகள், சப்த ஸ்வரங்கள் என்கிற விதத்தில் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராம அவதாரமும் விசேஷம் வாய்ந்தது.

ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது 'ராம' நாமமே. எல்லாவித பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது 'ஸ்ரீராம நாமம்

ராம நாமாவை ஜபிக்கும் முறை!

'ஓம்' என்று சற்று நிறுத்தி, பின்பு 'ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம' என்று நிதானமாக பயபக்தியுடன் ஜபியுங்கள். ஜபிக்கும்போது ஸ்ரீராமனே உங்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு எண்ணிக்கை நூற்றெட்டுக்குக் குறையாமல் ஜபியுங்கள். முடிந்தால் 21,600 வரை தினமுமே ஜபிக்கலாம். ஆரம்பத்தில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் எவ்விதச் சிந்தனையும் இல்லாது நிதானமாக தினமும் ஜபியுங்கள்.

ஓர் ஆண்டுவரை ஜபத்தை - கண்டத்தில் செய்யுங்கள். இருதயத்தில் ஓர் ஆண்டு செய்யுங்கள். நாபியில் ஓர் ஆண்டு செய்யுங்கள். நாளடைவில் ஒவ்வொரு ரோமத் துவாரமும் 'ராம' நாமத்தைத் தானாகவே சொல்லும். உங்கள் உடம்பு முழுமையும் மந்திரத்தின் சக்தியால் நிறைந்துவிடும். நீங்கள் எப்பொழுதும் தெய்வப் பிரேமையில் இருப்பீர்கள். நீங்கள் 'ராம' மந்திரத்தை 13 கோடி முறை பக்தி சிரத்தையுடன் ஜபித்தால், அவரது தரிசனமும் கிட்டும்.

நீங்கள் விடாமுயற்சியுடன் இதைத் தொடர்ந்து செய்தால் நான்கு வருடங்களில் செய்து முடிக்கலாம். இது உண்மை. மூன்று விஷயங்கள் உலகத்தில் அருமையானவை. அவை - மனிதப் பிறவி, மோட்ச விருப்பம், சத்குருவின் கிருபை. நற்குணமுள்ள நல்ல ஆத்மாவுக்குத்தான் குரு கடாட்சம் கிடைக்கும். ராம நாமாவினால் பலன் ஏற்பட வேண்டுமானால், உங்களுக்கு நம்பிக்கை அவசியம் இருக்க வேண்டும். ராமநாமாவை உச்சரிப்பதனால் ஏற்படும் சலனமானது, மனத்தை - ராஜஸ, தாமச குணங்களிலிருந்து சத்வ குணத்துக்கு மாற்றுகிறது.

ராமநாமம் நினைப்போம்! ராமநாமம் துதிப்போம்! ! 

ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்