சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

Sri Mahavishnu Info

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும்.
உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம்.

எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!