Sri Mahavishnu Info: Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 18 Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 18

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 18

Sri Mahavishnu Info

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 18
மாதவன்!

நரசிங்கத்துக்கு சமானமாய் இன்னொன்றாவது! உனக்கு சமமான இன்னொரு ஆளரி இல்லை என்பதைத்தான் ஆழ்வார் ஓரரியா என்றார். உனக்கு சமமான இன்னொரு அரி இல்லை. நீ ஓரரி என்கிறார்.

இப்போதுதான் பெருமாளுக்குக் கோபம் வருகிறது. அந்தக் காட்சியை மறுபடியும் பார்க்கிறோம். ஹிரண்யனை மடியில் போட்டுக் கிழித்துவிட்டார் பெருமாள். அந்த இடத்தில் ரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. அதைக் குனிந்து பார்க்கிறார். ரத்தக் குட்டையில் அவருடைய பிரதி பிம்பம் தெரியுமில்லையா? அதாவது இன்னொரு நரசிங்கம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடனே கோபம் இரண்டு மடங்காகி விட்டது. உலகத்தில் இன்னொரு நரசிம்மமா! ஒரு ராஜாங்கத்துக்கு இரண்டு ராஜாக்கள் இருக்கவே கூடாது. ஒரே ஒரு ராஜாதான் இருக்கலாம் என்று கோபத்துடன் இன்னும் நேராக எழுந்தாராம்.

அடியார் எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்கள் கோபம் கண்ணை
மறைக்கும் என்பது சரியாத் தான்
இருக்கிறது. இது இவருடைய
பிரதி பிம்பம் என்பது கூட இவருக்கு
தெரியவில்லையே.

பகவானைப் பார்த்து சர்வக்ஞன் சர்வக்ஞன் என்கிறோமே, இவர் என்ன சர்வக்ஞன்? தன் பிரதிபிம்பம் கூடத் தெரியவில்லையா’ என்று கேட்கக் கூடாது!

பக்தனிடத்தில் உள்ள பாசம் அவர் கண்களை மறைத்தது என்பதுதான் உண்மை. இல்லையென்றால் அவருக்கு இல்லாத ஞானமா? அவருக்கு அந்த பிம்பத்தில் உள்ளது தான்தான் என்பது தெரியாதா? ஆக நரசிங்கத்திற்கு சமானமாய் இன்னொரு நரசிங்கம் கிடையாதல்லவா? இதைத்தான் பிரம்மாத்வைதம் என்கிறோம். பிரம்மத்துக்குத் திருமேனி உண்டு. பிரம்மத்துக்குக் கல்யாண குணங்கள் உண்டு. பிரம்மத்துக்கு விபூதி உண்டு. பிரம்மம் சகுணமாகத்தான் இருக்கும். அவருக்குத் திருமேனி உண்டு. குணமும் உண்டு. எல்லாமும் உண்டு. பின்னே இரண்டாவது இல்லை... இரண்டாவது இல்லை என்றால் என்ன அர்த்தம்?

இப்பேர்ப்பட்ட லக்ஷ்மியுடன், இப்பேர்ப்பட்ட பிரஹ்லாதனுடன், இப்படிப்பட்ட சங்க சக்கரங்களுடன், இப்பேர்ப்பட்ட ஆபரணங்களுடன், இப்படிப்பட்ட ஆழ்வார்களுடன் பக்தர்களுடன் பாசுரங்களுடன், இவற்றையெல்லாம் பெருமாள் சேர்த்திருக்கிறார் அல்லவா? அப்படி சேர்ந்திருக்கும் விசிஷ்ட பிரம்மத்தைப் போல மற்றொரு பிரம்மம் கிடையாது. ஆகவே, பிரம்மத்துக்கு இன்னொன்று கிடையாது என்பதில்லை. பிரம்மத்தைப் போல இன்னொன்று கிடையாது என்பதுதான் உண்மை. இதைத்தான் பிரம்மாத்வைதம் என்று சொல்கிறார்கள்.

இந்தப் பாசுரத்தில் ஒரு வேடிக்கை பாருங்கள். நாம் இப்போது லக்ஷ்மி நரசிம்ம வைபவம் பார்க்கிறோம். ஆனால், ஆழ்வார் என்ன சொல்லி அழைக்கிறார்? ‘மாதவ’ என்று அழைக்கிறார். நரசிம்மப் பெருமாளுக்கு, முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் கொடுக்கும் பெயர் ‘மாதவ!’ மா என்றால் மகாலக்ஷ்மி. தவ: என்றால் சுவாமி. மகாலட்சுமிக்கு சுவாமி யாரோ அவரை அழைக்கிறார். அவரேதான் லக்ஷ்மி நரசிம்மன்.

ஹே மாதவ. வரத்தை ரொம்பவும் பெரிசாய் மதித்துவிட்டான் ஹிரண்ய கசிபு. உன்னை மதிக்காமலேயே போனான். உன்னிடத்தில் அபசாரப்பட்டிருந்தாலாவது சரி. மாதவனிடத்திலே படலாமா?

நாராயணனிடத்தில் அபசாரப்படலாமாம். கேசவனிடத்தில் அபசாரப்படலாமாம். மாதவனிடத்தில் படக்கூடாதாம். அதிலென்ன வித்யாசம் என்று கேட்கிறீர்களா? கேசவப் பெருமானும் மாதவப் பெருமானும் ஒருவர் தானே? வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை... என்று தானே பாடினார் ஆண்டாள்?

கேசவப் பெருமான் என்றால் நல்ல கேசவாசம் அழகு உள்ளவர். கேசி என்ற அரக்கனைக் கொன்றவர். பிரம்மா, சிவன் இவர்களுக்கெல்லாம் முதலிலே தோன்றியவர். எனினும் கேசவன் என்றால், பிராட்டி சம்பந்தமே அந்தப் பெயரின் சப்தத்தில் இல்லை அல்லவா? ஆனால், மாதவன் என்று சொன்னால் லக்ஷ்மிக்குத் தலைவன் என்று அர்த்தம். வெறும் பெருமானிடத்தில் அபசாரப் பட்டால்கூடப் பரவாயில்லை. ஆனால் பிராட்டியுடன் சேர்ந்திருக்கிற பெருமாளிடம் என்றைக்கும் அபசாரப்படவே கூடாது. ஆனால், ஹிரண்ய கசிபு என்ன செய்தான்? லக்ஷ்மியுடன் சேர்ந்திருக்கும் பெருமானிடத்தில் அல்லவா அபசாரப்பட்டுவிட்டான்?

‘தனக்குத் தவ வலிமை நிறைய இருக்கிறது. தன்னை யாரும் ஜெயிக்க முடியாது’ என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டான். உன்னுடைய திருவடித் தாமரையைத் தலையால் வணங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டானாமே! உன் திருவடியை வணங்கிவிட்டால் எல்லோருக்கும் உஜ்ஜீவனம். பக்தர்கள் செய்த குற்றங்களை நீ மன்னித்துவிடுகிறாய். ஆனால் அவன் உன் திருவடியை வணங்க மறந்தான்.

உரத்தினால் என்றால் பலத்தால் என்று அர்த்தம். வரத்தை வாங்கி வாங்கி சக்தியை சேர்த்து வைத்திருக்கிறான் அல்லவா! பெருமாளுடன் சண்டை போடுமளவுக்கு ஒருவரைக் கொண்டு நிறுத்தியிருக்கிறார்களே! இல்லையென்றால் பெருமாளுக்கு வற்றலும் தொற்றலுமாய் ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தால், நரசிம்மனுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? என் தோளுக்குத் தகுந்த மாதிரி ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வா என்றால், எலும்பும் தோலுமாய், ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாயே என்று சொல்லும் படியாகவாய் ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்? இல்லை இல்லை. இவருடன் சண்டை போடுமளவுக்கு வலிமை மிக்கவன். எனவே, வரத்தில் பலம் நினைந்தவன் என்று நினைத்துவிட்டான். அது வரத்தினால் ஏற்பட்ட பலம் அல்ல! வரம் கொடுத்த பிரம்மாவைக்கூடப் படைத்த பகவானின் திருவடியின் பலம் ஆகும் என்பதை மறந்தே போனான். லட்சுமி நரசிம்மரிடத்திலேயே அபசாரப்பட்டுவிட்டானே!

இதே விஷயத்தை ராமாயணத்தில் மாரீசன் தெரிவிக்கிறார். ராவணன் மாரீசனிடத்தில் சென்று, மாய மானாகவா... சீதையைக் கவர்ந்து கொண்டு வரவேண்டும். எனக்கு உதவி செய்" என்று கேட்டான். அப்போது மாரீசன் ராவணனுக்கு ரொம்பவும் உபதேசிக்கிறார்.

ராவணா, நீ அபசாரப்படுகிறாய். ராம வைபவம் தெரியாமல் பேசுகிறாய். ராமரிடத்தில் அபசாரப்படால்கூடத் தப்பித்து வந்துவிடலாம். ஆனால் சீதாராமரிடத்தில் அபசாரப்படாதே. பகவானைக்கூட நாம் புத்தியால் தெரிந்து கொண்டுவிடலாம். ஆனால் லக்ஷ்மி நரசிம்மன், லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீயஹ்பதி என்பவரை அறிந்து கொள்வது நடவாத காரியம். அவன் பெருமை நம்மால் சொல்லொணாது.

“சீதையுடன் கூடிய ராமரிடத்தில் அபசாரம் செய்யக்கூடாது" என்று அன்றைக்கு மாரீசன் சொன்னதையேதான் இன்று இவர் சொல்கிறார்.

பிராட்டி பக்கத்தில் இருக்கும்போது பெருமானைப் பற்றிக்கொண்டு நாம் தைரியமாகக் காரியங்ளை முடித்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு அவரையும் விரோதித்துக் கொண்டு அவளையும் விரோதித்துக் கொண்டாரல்லவா, அதுதான் பெரிய குற்றம்!

வைபவம் தொடரும்..

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்