Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 19

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 19
திருவடி

ஆக, இமைப்பொழுதும் மறக்காமல் பெருமானையே நினைக்க வேண்டும், அவன் திருவடிகளையே பற்ற வேண்டும். லக்ஷ்மியுடன் கூடியிருக்கும் நரசிம்மப் பெருமானையே நினைவில் கொள்ளவேண்டும் என்பன முதல் ஆழ்வாருடைய பாசுரம்.

அடுத்ததாக பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி பாடியிருக்கிறார். அதில் ஒரு பாசுரத்தில் தெரிவிக்கிறார்.

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரங்கருதி மூர்க்கத்தவன்மை
நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன்
அடியிணையே அங்கண் ஞாலத்து
அமுது

லக்ஷ்மி நரசிம்மப் பெருமானின் திருவடித் தாமரைகள்தான் நமக்கு அமிர்தம் போன்றவை. முந்தைய ஆழ்வார் மாதவன் என்று பிராட்டியுடன் சேர்த்தே சொன்ன மாதிரி, இந்த ஆழ்வாரும் திருவன் என்று குறிப்பிட்டுள்ளார். திருவன் என்றால் லக்ஷ்மியுடன் கூடியிருக்கும் பெருமான் என்று அர்த்தம். வரத்தை முக்கியமாகக் கருதாதவராம் பெருமாள். ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றார் என்று நாம் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். பிரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணினார் என்றும், சிவனைக் குறித்துத் தவம் பண்ணினார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். வரங்கள் பெற்றதாக அறிந்திருக்கிறோம். அப்படியானால், ஏன் ஸ்வாமி, உங்கள் பெருமான் வரமே தரமாட்டாரா?" என்று கேட்பார்கள். கொடுப்பார். இவர் கொடுக்கும் வரத்தை வாங்கிக் கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. இவர் கொடுக்கும் ஒரே வரம் மோக்ஷம்! வைகுந்தத்தை உடனே கொடுத்து விடுவார்.

அப்படியானால் நாம் முன்வருவோமா? ஏதோ இந்த உலகத்திலேயே நன்றாய் வாழ்வதற்கான வரம் ஏதாவது இருந்தால், அதைப் பெற்றுக் கொள்ள முன் வருவோமே தவிர, மோக்ஷத்தை யார் விரும்பி ஏற்போம்?

பகவான் பகவத் கீதையில் சொல்கிறார்: எல்லோரும் எங்கெங்கோ ஓடி பிராயச்சித்தங்களெல்லாம் செய்கிறார்களே,எல்லோரும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்?எல்லோரும் ஏன் உன்னிடம் வரவில்லை?" என்று கேட்டால், அதற்கு அவர் சொல்கிறார்... அதையெல்லாம் பண்ணினால் அவர்களுக்குப் பலன் கைமேல் கிடைக்கிறது. சின்னச்சின்னத் தேவதைகள் எல்லாம், எதை எதைக் கேட்கிறார்களோ அதையெல்லாம் கொடுக்கின்றனர். ஆனால் அர்ஜுனா, நான் அதுபோல் கொடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து இவர்களுக்கு இதைக் கொடுக்கலாமா கொடுக்கலாமா என்று யோசித்துக் கொடுப்பேன்!" நாம் கேட்கும் ஐஸ்வர்யங்களையெல்லாம் அவரால் கொடுக்க முடியும். கொடுப்பார். ஆனால், அவர் கொடுப்பதோ மோக்ஷானந்தம்!

அதற்கு எந்த வயதில் முன்வருவோம்? சதாபிஷேகம் ஆன பிற்பாடு போனால் போகிறது என்று வருவோம். பின்னே, பதினைந்து வயதிலும், இருபது வயதிலும் வருவோமா? ‘பகவானே எனக்கு எண்பத்தைந்து வயதில் மோக்ஷத்தைக் கொடு’ என்றுகூட ஒருவன் வேண்டமாட்டான்! ஒருவேளை அவனுக்கு வயது தொண்ணூற்றைந்து என்றிருந்து, அவன் பாட்டுக்கு, ‘எனக்கு எண்பத்தைந்தில் மோக்ஷம் கொடு’ என்று கேட்டு வைத்தால், அபத்தம் அல்லவா! அதனால் கேட்க மறுக்கிறான்!

ஆனால், ஆழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா? “கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ” என்கிறார். பிறந்த அன்றையிலிருந்து, ‘என்றைக்கு மோக்ஷம் கிடைக்கும்’ என்று எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

என்றைக்கோ மோக்ஷம் என்று இருக்க வேண்டியதில்லை. இன்றைக்குக் கூப்பிடுகிறாரா? அப்படியானால், உடனே இன்றைக்கே கிளம்பத் தாயராக இருக்க வேண்டும். அப்படிக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஹிரண்ய கசிபு பட்ட அபசாரத்தை அவர் சொல்கிறார்.

நரம் கலந்த சிங்கமாகிய திருமால், லக்ஷ்மி நரசிம்மமா இருந்தபோது, இவன் வரத்தைப் பெரிதாக நினைத்து விட்டான்! அவரைப் போய் சேவித்தால் என்ன கொடுத்துவிடப் போகிறார்? மோக்ஷம் என்ற வரத்தை அளிப்பார். ‘சுவாமி எங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் தீரவே தீராதா?’; ‘என் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகாதா?’; ‘பதவி உயர்வு கிடைக்காதா?’ என்றெல்லாம் கேட்டால்... நிச்சயமாக நடக்கும். இவை அனைத்தையுமே பெருமாள் பண்ணுகிறார். எந்த வரத்தைக் கேட்டாலும் கொடுப்பார். ஆனால், நாம் அந்தத் தாழ்ந்த பலன்களைக் கேட்கலாமா? என்பதுதான் கேள்வி.

மிக உயந்த பலனைப் பெற்றுக் கொண்டுவிட்டால், மற்றதெல்லாம் தானே வந்து சேருமே! ஆனால், தாழ்ந்த ஒன்றைக் கேட்டால், உயர்ந்தது கிடைக்காது அல்லவா?

நான் ஒருவரிடம் போனேன். ஸ்வாமி அடியேனுக்கு லட்ச ரூபாய் வேண்டும். கோயில் கைங்கர்யம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அவர் உடனே, அதனால் என்ன? கொடுத்து விடுகிறேன்" என்றார். நான் ஒரு பைத்தியம். அப்படியானால் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பீரா?" என்று கேட்டேன். இது என்ன பைத்தியக்காரத்தனம்! அவர்தான் லட்சமே கொடுக்கிறேன் என்கிறாரே? அவரால் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடியுமே?

ஆகவே, உயர்வான ஒன்றைக் கொடுப்பவரால், அதற்குக் கீழே உள்ளவற்றைத் தன்னிச்சையாகக் கொடுக்க முடியும் இல்லையா?

அப்படிப்பட்ட பெருமாளிடம், சாதாரண விஷயங்களை, லௌகீகமான தேவைகளைக் கேட்கலாமா?!

வைபவம் தொடரும்...