Sri Mahavishnu Info: Vadakku Thiruveedhippillai Vaibhavam | வடக்குத் திருவீதிப்பிள்ளை வைபவம் Vadakku Thiruveedhippillai Vaibhavam | வடக்குத் திருவீதிப்பிள்ளை வைபவம்

Vadakku Thiruveedhippillai Vaibhavam | வடக்குத் திருவீதிப்பிள்ளை வைபவம்

Sri Mahavishnu Info

Vadakku Thiruveedhippillai Vaibhavam | வடக்குத் திருவீதிப்பிள்ளை வைபவம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

"வடக்குத் திருவீதிப்பிள்ளை வைபவம்"
திருநக்ஷத்திரம் : ஆனி ஸ்வாதி

திருநக்ஷத்திர தனியன்:

ஸ்ரீகிருஷ்ணாபாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யதப்ரஸாதப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

எனக்கு எல்லா ஸித்திகளையும் அளித்த அருட்பெருமையை உடையவரான ஸ்ரீகிருஷ்னரெனும் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருவடி இணையை எப்போதும் தலையால் வணங்குகிறேன்.

"தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறிதன்னை
வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை - இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்."
(மணவாள மாமுனிகள், உபதேச இரத்தினமாலை, பாசுரம் 44)

பாசுர விளக்கம் : நம்பிள்ளை என்னும் ஆசிரியர் தெளிவாக அருளிச்செய்த ஸ்ரீஸுக்தி க்ரமத்தை உட்கொண்டு, அவரது சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளை என்னும் ஆசிரியர் திருவாய்மொழியின் அர்த்தங்களை இவ்வுலகமெல்லாம் அறியும் வண்ணம் நன்றாக அருளிச்செய்த வியாக்கியானாம் ஈடு முப்பத்தாறாயிரப்படி என்பதாம்.

"சீரார் வடக்குத்திருவீதிப்பிள்ளை எழு
தேரார் தமிழ்வேதத்தீடுதனை - தாருமென
வாங்கிமுன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம்கொடுத்தார் பின் அதனைத்தான்."
(மணவாள மாமுனிகள், உபதேச இரத்தினமாலை, பாசுரம் 48)

பாசுர விளக்கம் : சீர்மை பொருந்திய வடக்குத்திருவீதிப்பிள்ளை எனும் ஆசிரியர் எழுதியருளின திருவாய்மொழி வியாக்கியானமான ஈடு முப்பத்தாறாயிரப்படியை அக்காலத்தில் நம்பிள்ளையானவர் "இதை என்னிடம் கொடும்" என்று கேட்டுவாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனம் ஆனபின் அந்த ஈட்டு ஸ்ரீகோசத்தை ஈயுண்ணி மாதவப்பெருமாள் என்னும் ஆசிரியர் கையிலே தந்தருளினார்.

"பின்னை வடக்குத்திருவீதிப்பிள்ளை அன்பால்
அன்னதிருநாமத்தை ஆதரித்து - மன்னுபுகழ்
மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்துபரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு."
(மணவாள மாமுனிகள், உபதேச இரத்தினமாலை, பாசுரம் 52)

பாசுர விளக்கம் :பிறகொரு காலத்தில் நம்பிள்ளை திருவடியான வடக்குத்திருவீதிப்பிள்ளையானவர் ஆசார்ய பக்தி விசேஷத்தினால் அந்த லோகாசார்யரின் (நம்பிள்ளையின்) திருநாமத்தை யசஸ்வியான தமது திருக்குமாரர்க்கு விரும்பி இட்டபடியால் இவ்வுலகமெங்கும் இந்த லோகாசார்ய திருநாமமானது உலகமெங்கும் புகழ்பெற்று விளங்கியது.

மேற்கண்ட மூன்று பாசுரங்களை ஒன்றுசேர்த்து அனுபவிக்க, இதுதான் "வடக்குத்திருவீதிப்பிள்ளை"யின் வைபவங்களாய் திகழ்கிறது. இதனைச் சற்று விவரமாக அனுபவிப்போம்:

நம்பிள்ளை தம்மிடத்தே எல்லா அர்த்தங்களையும் தனித்தனியாக நன்றாகச் சுற்றியிருக்கும் தம் ப்ரிய சிஷ்யரான பெரியவாச்சான்பிள்ளையைத் திருவாய்மொழிக்கு உரை எழுதச் சொல்லிப் பணிக்க, பெரியவாச்சான்பிள்ளையும் "இருபத்துநாலாயிரப்படி" என்கிற உரையை எழுதி அருளினார்.

மற்றுமொரு முறை திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அர்த்தம் அருளிய கட்டளையை நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளை பகலெல்லாம் கேட்டு, அதை அப்படியே இரவெல்லாம் எழுதிமுடித்து நம்பிள்ளைகளிடம் காட்ட, அவரும் அதைப் பார்த்து அருளி ஆனைகோலம் செய்து புறப்பட்டாப் போல, கம்பீரமாய் சுருக்கமும் பெருக்கமும் இல்லாமல் அளவோடு கூடி அழகானதாய் இருக்கையாலே மிகவும் உகந்தார். பின், "நன்றாக எழுதினீர்! ஆயினும், நம் அனுமதியின்றி எழுதினீர; ஆகையால் அதை என்னிடம் தாரும்" என்று வாங்கிக் கட்டி உள்ளே வைத்துவிட்டார். இவ்விஷயம் அறிந்த நம்பிள்ளையின் மற்றொரு சிஷ்யரான ஈயுண்ணி மாதவப்பெருமாள், நெடுநாள் நம்ப்பெருமாளின் திருவடிகளில் விழுந்து வணங்கி வேண்டிக்கொள்ள, பெருமானும் அர்ச்சகர் மூலமாக, "எதற்காக உபாசிக்கிறீர்?" என்று கேட்க, மாதவப்பெருமாளும் "நம்பிள்ளை காலக்ஷேபமாக அருளிச்செய்த திருவாய்மொழயின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானத்தை, உரைப்படுத்திய வடக்குத்திருவீதிப்பிள்ளையின் உரைநூல் உள்ளது; அதை அடியேனுக்குத் தந்தருளும்படி செய்தருளவேணும்" என்று ப்ரார்த்தித்தார். பெருமாளும் நம்பிள்ளைக்கு அப்படியே நியமிக்க, நம்பிள்ளையும் திருவாய்மொழிக்குத் தான் அருளிய ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானத்தை உரைநடைப் படுத்திய வடக்குத்திருவீதிப்பிள்ளையின் க்ரந்தத்தை ஈயுண்ணி சிறியாழ்வானப்பிள்ளை என்கிற ஈயுண்ணி மாதவப்பெருமாளுக்குத் தந்தருளினார். அன்றுமுதல் இன்றளவும் அந்த வியாக்கியானம் மாதவப்பெருமாள் மூலமாக வழிவழியாக வந்து பரந்தது.

ஒருசமயம் நம்பிள்ளைகளிடம் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தாயார் வந்து தண்டன் சமர்ப்பிக்க (விழுந்து வணங்க), பிள்ளையும் க்ஷேமம் (நலம்) விசாரிக்க, "என் சொல்ல? பிள்ளைக்குத் திருமணம் செய்துவைத்தோமே! அந்தப்பெண் பக்குவமானாள் சயனத்துக்கு அனுப்பிவைத்தேன்; அந்தப் பெண்ணின் குரல்கேட்டு உள்ளே போனேன்; அங்கே, மகன் (வ.தி.பிள்ளை) உடல் வேர்த்து நடுங்கி நின்றான். என்னவென்று கேட்டேன்; "பாம்பு படமெடுத்து ஆடுகிறது; பயந்தேன்; இப்போதும் அப்படியே இருக்கிறது" என்றான். பெண்ணைப் போகச் சொன்னேன்; மறுபடியும் ஒருநாள் அனுப்பிவைத்தேன்; அன்றும் அவ்வாறே செய்தான்; நான் என்ன செய்வது? இந்தப் பிள்ளை இப்படிச் செய்கிறானே!" என்று முறையிட்டாள். நம்பிள்ளைகளும் சிரித்து, வடக்குத் திருவீதிப்பிள்ளையின் வைராக்கியத்துக்கு மகிழ்ந்து, அவர் தாயினிடம், "மருமகள் ருதுஸ்தானம் ஆனபின், இங்கே அழைத்து வாருங்கள் என்று பணித்தார். அவளும் அப்படியே அழைத்து வந்தபோது நம்பிள்ளையும் அந்தப் பெண்ணின் வயிற்றைக் கையால் தடவிக்கொடுத்து, "என்னைப் போலே ஒரு புத்ரனைப் பெறுவாய்" என்று சொல்லி அனுப்பிவைத்து, வடக்குத் திருவீதிப்பிள்ளையை அழைத்து, "இன்று சயன அறைக்குப் போம்; பயம் ஒன்றும் வராது" என்று சொல்லி அனுப்பினார். அப்படியே வ.தி.பிள்ளையும் செய்ய, அவர் மனைவியும் திருவயிறு வாய்த்திருந்து (கரு உண்டாகி) ஓர் உத்தம புத்ரரைப் ஈன்றெடுத்தாள். வ.தி.பிள்ளையும் தம் மகனுக்கு தம் ஆசார்யரான நம்பிள்ளையின் திருநாமாமான "லோகாசார்யர்" என்று திருநாமத்தை இட்டருளினார். இதுகேட்டு நம்பிள்ளை, வ.தி.பிள்ளையிடம், "நாம் பெருமாள் திருநாமம் இடவேண்டும் என்று எண்ணியிருக்க, நீர் என் பெயரை உம் மகனார்க்கு வைத்தது சரிதானோ?"என்று கேட்க, வ.தி.பிள்ளையும் பயந்து நடுங்கி நிற்க, பெரியோர்கள் "ஆசார்ய ப்ரேமத்தாலே செய்தது இத்தனை; இன்னமும் ஒரு புத்ரனை அனுக்ரஹித்து விடவேணும்" என்று விண்ணப்பம் செய்ய, நம்பிள்ளைகளும் அப்படியே அனுக்ரஹித்தார். அவ்வாறே, வ.தி.பிள்ளைக்கு மற்றுமொரு திருக்குமாரர் அவதரித்தார். அவருக்கு நம்பிள்ளை "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்" என்று திருநாமத்தை இட்டருளினார்.

நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளியபின், வடக்குத் திருவீதிப்பிள்ளை ஓராண்வழி ஆசார்ய பரம்பரையில் இடம்பெற்று, நம் வைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்கும் வண்ணம் கைங்கர்யங்கள் செய்துவந்தார். பின்னர் தம் ஆசார்யரான நம்பிள்ளையை மனதால் வணங்கி, திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

வாழித்திருநாமம்:

ஆனிதனிற் சோதிநன்னாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை வாய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற வெமையாளும் இறைவனார் வாழியே
எங்கள்வடவீதிபபிள்ளை இணையடிகள் வாழியே.

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்