
மங்களமான சரம ஸ்லோகங்கள் பற்றி ....
சரம என்றால் இறுதி ultimate எனப் பொருள். அந்தணர்கள் இறந்தவர்மீது இரங்கல் ஸ்லோகம் சொல்வது வழக்கம். அவர் பெயரை வைத்து இயற்றப்படும். அதற்கு சரம ஸ்லோகம் என பெயர்.
நமக்கு அது எதற்கு? நாம் பகவான் தனது இறுதியான உறுதியான உத்தரவாதம் தந்துள்ள ஸ்லோகங்களை பார்ப்போம். அவையும் சரம ஸ்லோகங்கள் எனப்படும்.
ஶ்ரீமந் நாராயணர் பக்த வத்ஸலர். ஸரணாகத வத்ஸலர். அவர் தனது பக்தர்களுக்கு புராணங்களில் தான் கட்டாயம் அவர்களை காப்பதாக உறுதி அளிக்கும் 3 சரம ஸ்லோகங்கள் உள்ளன. ஶ்ரீ வைஷ்ணவர்கள் அவற்றை கொண்டாடுவதில் வியப்பு என்ன!
1. ராமர் – விபீஷண ஸரணாகதி
ஸக்ருதேவப் ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம
என்னை ஒரேமுறை சரண் அடைந்து "நான் உன்னைச் சேர்ந்தவன், காப்பாற்று" என யாசித்தால், அவர்களுக்கு அபயம் கட்டாயம் கொடுப்பேன். இது எனது விரதம்.
2. கண்ணன் – பகவத்கீதையில் அருளியது
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
வேறு தர்மங்களை செய்யாமல் விட்டுவிட்டாலும் கவலை வேண்டாம். என்னை சரணாகதி அடைந்தாலே போதும். நான் பாவங்களை நீக்கி உன்னைக் காத்து, ஸத்கதி தருவேன்.
3. வராஹ ஸ்வாமி – பரம கதி வாக்குறுதி
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண ஸன்னிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்போது விஸ்வரூபமான என்னை நினைக்க வேண்டும். இறக்கும் நேரத்தில் நினைக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நான் என் பக்தனை நினைத்து அவருக்கு பரம கதி அளிக்கிறேன்.
ஶ்ரீராமரும் க்ருஷ்ணரும் அவர்கள் பக்கம் சரண் செல்லுமாறு வலியுறுத்துகிறார்கள். ஆனால் பூவராஹர் தான் நம்மை நினைத்து உத்தம கதி அளிப்பதாகச் சொல்கிறார். இவ்வாறு ஒரு பரமபுருஷனின் அபயம் பெறும் இந்த 3 ஸ்லோகங்களும் "சரம ஸ்லோகங்கள்" என அழைக்கப்படும்.
மூவரும் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் விபவங்கள் (அவதாரங்கள்) தான். எனவே நாமும் ஶ்ரீமந் நாராயணரை ஸரணம் அடைவோம். பாவங்களை தொலைக்க, நல்ல புத்தி பெற, இறுதியில் நற்கதி அடைய – சரம ஸ்லோகங்களை நம்பிக்கையுடன் பக்தியுடன் வாசிப்போம்.