
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றால் என்ன அர்த்தம்?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?
அப்படியானால் ஆலயத்தினுள் இறைவனை தரிசிக்க வேண்டியதில்லையா?
ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்த சொற்றொடருக்கான பொருள்.
இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக நேரமின்மையால் அவதிப்படுவோர், பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள்.
ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில் படும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது.
கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது.
அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது.
தினசரி செய்தித்தாளை படிக்க இயலாதவன் கடைகளில் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் விளம்பரத் தாள்களில் கொட்டை எழுத்தினில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தலைப்புச் செய்திகளைப் படித்து அறிந்து கொள்கிறான்.
ஆனால், முழுமையான விவரத்துடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளிதழை வாங்கிப் படித்தால்தான் அந்தச் செய்திக்கான முழுமையான அர்த்தம் புரியும்.
அவ்வாறே கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது.
உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை.
அதே நேரத்தில் அனைத்து தரப்பு பக்தகோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.