மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 10
பாண்டு மன்னன் மணம் முடித்துக் கொண்ட ஒரு மாதத்திற்கு பிறகு அஸ்தினாபுரத்திற்க்கு கப்பம் கட்டாமல் இருந்த நாடுகள் மீது படை எடுத்து சென்றான். அப்படிச் சென்றவன் அந்தந்த நாட்டு மன்னர்களை அடக்கி ஆண்டான். அவர்களும் முறையே அஸ்தினாபுரத்துக்கு கப்பம் கட்டினார்கள். பாண்டு புரிந்த இந்த வீரச் செயலை பீஷ்மரும் நாட்டு மக்களும் பெரிதும் பாராட்டினார்கள்.

பாண்டு மன்னனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் மிக இருந்தது. ஆகையால் அவன் தன் காலத்தின் பெரும் பகுதியை வனத்தில் வேட்டையாடுவதிலேயே கழித்தான். அவனுடைய மனைவிமார்களாகிய குந்தியும் மாத்ரியும் தங்கள் கணவனோடு காட்டிலேயே காலம் கழித்து வந்தார்கள். ஒரு நாள் இரண்டு மான்கள் ஒன்றாக இன்பத்துடன் இருக்கும் போது பாண்டு மன்னன் அவைகள் மீது அம்பு எய்து கொன்றான். அதன் விளைவாக பாண்டு மன்னனுக்கு சாபம் ஒன்று வந்தது. இன்பத்தின் வசப்பட்டு பாண்டு தன் மனைவியை தழுவினால் அவனுக்கு மரணம் ஏற்படும் என்பது அந்த சாபம். அந்த சாபம் அவனை துயரத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஆயுள் காலம் முழுவதிலும் அவன் மகப்பேறு அற்றவனாய் இருக்கும் நிர்ப்பந்தம் அவன் மீது சுமத்தப்பட்டது. ஆகவே பாண்டுவும் அவனுடைய மனைவிகள் இருவரும் தவ வாழ்வில் ஈடுபட எண்ணினர். இச்செய்தி அஸ்தினாபுரத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜரீதிக்கு உரிய நகைகளும் பிறவும் வேலைக்காரர்கள் மூலம் அரண்மனைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சிறிது காலத்திற்குப் பிறகு பாண்டு மன்னன் தனக்கு வாரிசு இல்லாததை குறித்து கவலையுற்று இருந்தான். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வது எப்படி என்று குந்தியோடு ஆலோசனை செய்தான். குந்தியும் தான் சிறுமியாய் இருந்த பொழுது துர்வாச மகரிஷி தனக்கு மந்திரம் ஒன்று உபதேசம் செய்தார் என்று தெரிவித்தாள் அதன்படி அந்த மந்திரத்தை பயன்படுத்தி எந்த தெய்வத்தை வேண்டினாலும் அந்த தெய்வாம்சத்தோடு மகப்பேறு பெறுவது சாத்தியம் என்று அவள் தெரிவித்தாள். புத்துயிர் வந்தது போன்று உற்சாகம் பிறந்தது பாண்டு மன்னனுக்கு. தர்மதேவதையை வரவழைத்து மகப்பேறு தரும்படி வேண்டிக் கொள்ளுமாறு குந்தியிடம் பாண்டு மன்னன் தெரிவித்தான் அதன்படியே அவர்களுக்கு செல்வன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் கொடுத்தார்கள். யுத்தத்தில் ஆசையாக இருப்பவன் என்பது அந்த பெயரின் பொருளாகும். தர்மத்தை கடைபிடிப்பதிலும் அவன் தளராது இருந்தான். பிறகு வாயு தேவதையை வரவழைத்து பீமன் என்னும் இரண்டாவது மகனை பெற்றெடுத்தாள். வல்லமை பெற்றவன் என்பது அந்த பெயரின் பொருளாகும். பீமன் பிறந்த பொழுதே அரசர்களுக்கு தங்களை அறியாமலேயே நடுக்கம் உண்டாயிற்று என புராணம் கூறுகின்றது. அதற்கடுத்தபடியாக தேவேந்திரனுடைய வரப்பிரசாதத்தால் அர்ஜுனன் பிறந்தான்.

அதன் பிறகு துர்வாச மகரிஷியிடமிருந்து கற்றிருருந்த மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். இரட்டையர்களாகிய அசுவினிகளை எண்ணிக்கொண்டு மாத்ரி அந்த மந்திரத்தை ஜெபித்தாள். அதன் விளைவாக அவளுக்கு நகுலன் சகாதேவன் என்னும் இரட்டையர்கள் பிறந்தார்கள். இவ்வாறு பாண்டவ சகோதரர்கள் ஐந்து பேர் ஆனார்கள்.