மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 4
சந்தனு மன்னனின் வார்த்தையை கேட்ட அப்பெண் ஒழுக்கம் என்பது என்ன என்பதை பற்றி அரசனிடம் விளக்கினாள். பெண் ஒருத்தியிடம் இப்படி பேச்சை எடுப்பது தவறு என்றும் அதற்கு பதிலாக அவளுடைய தந்தையிடம் தெரிவிப்பது தான் முறை என்றும் அவள் ஞாபகப்படுத்தினாள். அவளின் பேச்சில் பண்பும் உண்மையும் புதைந்திருப்பதை மன்னன் அறிந்தான். செம்படவர் தலைவனான அப்பெண்ணின் தந்தையிடம் சந்தனு மன்னன் உங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தனது கருத்தை தெரிவித்தான். அதற்கு செம்படவர் தலைவன் கன்னியான எமது பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய செல்விக்கும் திருமணம் அவசியமாகிறது. எங்களை ஆண்டு வரும் மன்னன் அவளுக்கு கணவனாக அமைவது அவளுடைய பாக்கியம். ஆனால் அவளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பு நான் உங்களிடமிருந்து வாக்குறுதி ஒன்றை பெற விரும்புகிறேன் என்றான். அதற்கு சந்தனு மன்னன் நியாயமான வாக்குறுதி எதையும் அளிக்க நான் ஆயத்தமாக இருக்கின்றேன் என்றான். எமது பெண்ணுக்கும் உங்களுக்கும் மகனாய் பிறப்பவன் உங்களை தொடர்ந்து சிம்மாசனத்தில் மன்னனாக இருப்பான் என்ற உறுதி மொழியை நீங்கள் கொடுத்தால் எமது பெண்ணை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றேன் என்றான் செம்படவர் தலைவன்.

சந்தனு மன்னன் மிக அழகாய் இருக்கின்ற அப்பெண்ணிடம் காதலில் மயங்கி மூழ்கியிருந்தான். ஆயினும் இந்த நிபந்தனைக்கு அவன் இசையவில்லை. இவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் தேவவிரதனை ஒதுக்கி வைத்தாக வேண்டும். இந்த செயலில் ஈடுபட அவன் தயாராக இல்லை. திகைத்துப்போன சந்தனு மன்னன் தன் காதல் தோல்வியடைந்ததால் தனது அரண்மனைக்கு திரும்பிச் சென்றான். அங்கு அந்த பெண்ணின் மீதான காதலினால் அவனுடைய மனம் பாதிக்கப்பட்டு உடல் நிலை உறுதி குன்றியது. ஆனால் தன் துயரத்தை அவன் தன்னுடனே வைத்திருந்தான். இதைப்பற்றி அவன் யாரிடத்தும் எதுவும் பேசவில்லை.

தன் தந்தை உடல் நிலையிலும் மனநிலையிலும் உறுதி குன்றி வந்ததை தேவவிரதன் அறிந்துகொண்டான். தேவவிரதன் தன் தந்தையிடம் சென்று இதற்குக் காரணம் என்ன என்று பணிவுடன் கேட்டான். அதற்கு சந்தனு மன்னன் என் ஆருயிர் செல்வா கவலையுற்ற நான் ஒடுங்கி இருக்கிறேன் என்பது உண்மை. நீ எனக்கு ஒற்றை மகன். எப்பொழுதும் நீ போர் விஷயங்களிலேயே ஈடுபட்டவனாய் இருக்கின்றாய். மண்ணுலக வாழ்கை உறுதி அற்றது. போர் முனையோ தவிர்க்க முடியாதது. போரில் உனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அது நம் குடும்பத்தின் துர்பாக்கியம். ஒற்றை மகப்பேறு ஒருநாளும் மகப்பேறு ஆக மாட்டாது என்று நூல்கள் கூறுகின்றன. குடும்ப வளர்ச்சியையும் விரிவையும் முன்னிட்டு நான் கவலையுடன் இருக்கின்றேன்.

தேவவிரதன் மிகப்பெரிய நுண்ணறிவாளி. தந்தை கூறியதில் ஓரளவு உண்மை இருந்தது அவனுக்கு புரிந்தது. ஆனால் முழுவிவரம் தன்னிடமிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றது என்பதை அவன் உணர்ந்தான். எனவே தந்தையின் தேர்ப்பாகனை அணுகினான். தந்தையின் துயரத்திற்கு காரணம் என்ன என்று தேர்ப்பாகனிடம் வற்புறுத்தி கேட்டான். செம்படவர் தலைவனின் மகளை காதலித்து அவளை மணமுடிக்க பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது அவரது தந்தை கூறியவற்றை உள்ளபடி எடுத்து கூறினான் தேரோட்டி.