மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 3
கங்காதேவி இவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றதும் அவள் கூறியது சந்தனு மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன் விளைவாக அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடத் தீர்மானித்தான். கிட்டத்தட்ட ஒரு முனிவன் போல வாழ்ந்து வந்த மன்னன் தன்னுடைய நாட்டை நீதியுடனும் அன்புடனும் ஆண்டு வந்தான். காலமும் அதிவேகமாக கடந்து போய்க்கொண்டே இருந்தது. சந்தனு மன்னன் ஒருநாள் தன்னந் தனியாக கங்கை கரை ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அழகிய ஓர் இளைஞனை சந்தித்தான். அந்த இளைஞனின் செயல்கள் அனைத்தும் வேந்தன் கவனத்தைக் கவர்ந்தது. அந்த இளைஞனின் தெய்வீக பேரழகு அவனை வசப்படுத்தியது. இதற்கெல்லாம் மேலாக அவனுடைய வில் அம்பு விளையாட்டில் தனித்தன்மை மிளிர்ந்தது. அம்புகளைக் கொண்டு பெருக்கெடுத்து ஓடிய கங்கா நதியை ஓடவிடாமல் அணை போட்டு தடுத்தான். அத்தருணத்தில் அங்கு தேவதை போன்ற பெண் ஒருத்தி வந்தாள். அவள் யாரென்று சந்தனு மன்னனுக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவள் மன்னனிடம் நான் கங்காதேவி இவனுடைய தாய் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்த இளைஞன் நதியில் மூழ்கடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட உன்னுடைய எட்டாவது மகன் என்றாள். அதைக் கேட்ட மன்னனின் மனதில் முன்பு நிகழ்ந்து போன செயல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதன் விளைவாக அவன் பிரமித்து நின்றான்.

தேவவிரதன் என்னும் பெயர் பெற்ற இவன் நம்முடைய செல்வன் ஆவான். முன்பு கூறியபடி இதுவரை அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து இவனை வளர்த்து இருக்கின்றேன். பரசுராமரிடமிருந்து வில் வித்தையை பயின்று இருக்கின்றான். வில் வித்தையில் இவன் தன் குருவான பரசுராமருக்கு சமமானவன் ஆவான். வசிஷ்ட மகரிஷியிடமிருந்து இவன் வேதங்களையும் வேத அங்கங்களையும் வேதாந்தத்தையும் கற்று இருக்கின்றான். தேவகுருவாகிய பிரகஸ்பதி அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் என்னென்ன கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்று இருக்கின்றார்களோ அவைகள் அனைத்தையும் இந்த இளைஞன் கற்று இருக்கின்றான். யுத்தம் செய்வதிலும் ஆட்சி செய்வதிலும் வல்லமை படைத்த வீரன் இவன். நமது மைந்தனாகிய இவனை தான் திரும்பவும் மனமுவந்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என அவள் அந்த இளைஞனை சந்தனு மன்னனிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டாள்.

சந்தனு மன்னன் தேவவிரதால் தானும் தன்னுடைய நாடும் பாக்கியம் பெற்றதாக உணர்ந்தான். மகிழ்ச்சியுடன் தேவவிரதனை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். தக்க காலத்தில் தேவவிரதனுக்கு யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அந்த இளைஞனிடம் இருந்த திறமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறே பித்ரு பக்தியும் அவனிடத்தில் தலைசிறந்து திகழ்ந்தது. அமைதியாக நான்கு ஆண்டுகள் கடந்து போயின. அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சந்தனு மன்னன் யமுனை நதி அருகே உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு இடத்தில் சொல்ல இயலாத அளவிற்கு இனிமை நிறைந்த நறுமணம் கமழ்வதை உணர்ந்தான். அது எங்கிருந்து வருகிறது என்பதை சந்தனு மன்னன் நுணுக்கமாக ஆராய்ந்து நறுமணம் வரும் திசையை நோக்கி சென்றான். யமுனை நதி அருகே ஒரு தீவிலே செம்படவ வேந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய செல்வியின் பெயர் சத்தியவதி. முனிவர் ஒருவர் வழங்கிய வரத்தின் விளைவாக அந்த நறுமணம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது அந்த மங்கையை பார்த்த உடனே மன்னன் அவள் மீது காதல் கொண்டான். அவள் இருந்த இடம் ஒரு குடிசையாக இருந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. இத்தனை நாள் தவநெறியில் ஈடுபட்டிருந்த வேந்தன் இப்போது காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளவேண்டும் என்று சிறிதும் தயங்காமல் அந்தப் பெண்ணிடம் வேண்டினான்.