Sri Mahavishnu Info: Thiru Kurugur - Alwar Thirunagari Sri Adhinathan Perumal Temple Navatirupathi 5 | ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் Thiru Kurugur - Alwar Thirunagari Sri Adhinathan Perumal Temple Navatirupathi 5 | ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்

Thiru Kurugur - Alwar Thirunagari Sri Adhinathan Perumal Temple Navatirupathi 5 | ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்

Sri Mahavishnu Info
நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள பெருமாள் ஆலயங்கள், நவதிருப்பதி ஸ்தலங்கலாகவும், அவற்றினை நவகிரகங்கள் உடன் தொடர்பு கொண்ட திருக்கோயில்களாகவும் வரிசைபடுத்தி நவதிருப்பதி என ஒன்பது பெருமாள் ஆலயங்களை வரிசைபடுத்தி ஆலய தரிசனம் செய்யலாம். இந்த நவதிருப்பதிகளின் வரிசையில், ஏற்கனவே நாம் சூரிய ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தையும், சந்திரன் ஸ்தலமான ஸ்ரீவரகுணமங்கை திருத்தலத்தையும், செவ்வாய் ஸ்தலமான திருக்கோளூர் திருத்தலத்தையும், புதன் ஸ்தலமான திருப்புளியங்குடி திருத்தலத்தையும் தரிசனம் செய்துள்ளோம். இப்போது, நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமான, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தை தரிசிப்போம் வாருங்கள்.நவ திருப்பதி ஆலயங்களை ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.திருக்கோயில் அமைவிடம்:அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே!!

ஸ்ரீ நம்மாழ்வார் 

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லாஅன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே!!

ஸ்ரீ நம்மாழ்வார்திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறைவிமானம்: கோவிந்த விமானம்கிரகம்: குரு ஸ்தலம்தல விருட்சம்: உறங்காப்புளி

திருத்தல வரலாறு:
இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.குருகாசேத்திர மகிமை:பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.யானையும் வேடனும் முக்தி அடைந்த வரலாறு:முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல பெருமையினை மேலும் கூறலானார்.

தாந்தன் முக்தி பெற்ற வரலாறு:
பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் வேதம் கற்க ஆசைப்பட்டு வேத பாட சாலையில் சேர்ந்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட விதத்தில் அவனால் வேதங்களை மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு, மந்தனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்கோயில்களில் வேலை செய்து தன் காலத்தைக் கழித்து பின் உயிரிழந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காத சூழ்நிலையில், அவனை அனைவரும் ஒதுக்கிய சூழ்நிலையில், குருகூர் தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு அங்கேயே தனது வாழ்வை தொடர்ந்தான். இந்நிலையில் தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு திடீரென கண் பார்வை இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் திருமாலைச் சரணடைந்தனர். நீங்கள் எல்லோரும் தாந்தனை ஒதுக்கிய காரணத்தினால் தான் உங்களுக்கு கண் தெரியாமல் போனது, நீங்கள் அனைவரும் தாந்தனிடம் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என திருமால் அசரீரியாய்க் கூறினார். அவ்வாறே நடந்தபின் திருமாலும் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிகொடுத்து தாந்தனை முக்தி அடையச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தசேத்திரம் எனவும் பெயர் பெற்றது.சங்கமுனிக்கு அருள் கிடைத்த வரலாறு:பின்னொரு சமயம் தாந்தன் தங்கிய ஆலமரத்தின் கீழ் வேடன் ஒருவன் தங்கிய காரணத்தினாலேயே அவனது அடுத்த பிறவியில் சங்கன் என்னும் முனிவராக பிறந்து இறைவனடி சேர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் வேளையில், சங்கு முனிவரை நாரத முனிவர் சந்தித்து, சங்கன் தவம் புரியும் காரணம் கேட்க, முக்தி அடையும் பொருட்டே தவமிருப்பதாக அவர் கூற, "நீ குருகூர் சென்று பெருமாளை வேண்ட முக்தி கிடைக்கும்" என நாரதர் கூறினார். அவ்வாறே சங்கனும், சங்காக மாறி குருகூர் சென்று திருமாலை வழிபட்டு முக்தி அடைந்தார். அந்த இடம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என அழைக்கப்படுகிறது.

பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம்:

ஆதி சேத்திரம்:
பூலோகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி சேத்திரம் எனவும், இத்த இறைவனுக்கு ஆதிநாதன் எனவும் பெயர் வந்தது.

வராக சேத்திரம்:
பெரும் வெள்ளத்தில் அழிய இருந்த பூமியை, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய ஸ்தலம் என்பதாலும், பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்வித்த ஞானபிரான் குடிகொண்ட ஸ்தலம் என்பதாலும், வராக சேத்திரம் என்ற பெயர் வந்தது. இந்த ஞானபிரான் சன்னதி திருக்கோயிலின் உள்ளே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

சேச சேத்திரம்:
ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிலேயே நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் சேச சேத்திரம் என வழங்கப்படுகிறது.

தீர்த்த சேத்திரம்:
தாமிரபரணி ஆறும், அதில் உள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்த்த சேத்திரம் என அழைக்கப்படுகிறது.

தாந்த சேத்திரம்:
தாந்தன் என்னும் மானிடனை திருமாலின் அருளினால் தேவர்களும் வணங்கும் வண்ணம் உயர்த்திய ஊர் என்பதால் தாந்த சேத்திரம் என பெயர் வந்தது.

நம்மாழ்வார் வரலாறு:
பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.

இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய்மொழி, திராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.

நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு:
மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை. பிற்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின. நாதமுனிகளின் தமிழ் தொண்டு போற்றுதற்குரியது.

திருப்புளிய மர வரலாறு:
ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.

திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.

பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது.கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.

இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இத்திருக்கோயில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

கொண்டாடப்படும் உற்சவங்கள்:
ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம் திருப்பவுத்திர உற்சவமும், உறியடி உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், பெருமாள், ஆழ்வார், ஸ்ரீ வைகுண்டம் செல்லுதல் திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும், சித்திராப் பௌர்ணமி திருவிழாவும், வைகாசிப் பெருவிழாவும், கருட சேவையும், மாசி உற்சவமும், பங்குனி உற்சவமும், வைகுண்ட ஏகாதசி விழாவும் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.எதிர்காலத் தலைமுறையினருக்கு திருக்கோயில்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் சமுதாய நலனுக்கு எந்த விதத்தில் கோயில்கள் நலம் பயக்கின்றன என்பன பற்றி எடுத்துரைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்