விதுரர் கீழ்கண்ட ஐந்து இன்றியமையாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானி ஆவார்.
பரமாத்ம சொரூபம் - இறைவனை பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்.
ஜீவாத்ம சொரூபம் - ஜீவாத்மாவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல்
உபாய சொரூபம் - ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய உள்ள வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். பரமாத்மாவை அடைய ஜீவாத்மா கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ அல்லது பக்தி யோகத்தையோ பின் பற்றலாம். இந்த வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
புருஷார்த்த சொரூபம் - இறைவனை அடைந்தபின் நாம் செய்வது - அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முயர்ச்சிக்கும்போது மேற்கொள்ளும் பயணம் மற்றும் அங்கு சென்றவுடன் இறைவனுடன் கலந்து இருப்பது பற்றிய ஞானம்.
விரோதி சொரூபம் - இவ்வளவு நெருக்கமான ஜீவாத்மாவையும் பரமாத்வையும் சேர விடாமல் தடுக்கும் சாதனங்களைப் பற்றி தெரிந்து கொள்வது
ஆக மேல்சொன்ன ஐந்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு அதனை நடைமுறைப் படுத்தியவர் விதுரர் ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு செய்த உபதேசத்தில் கீழ் கண்ட 17 பேர்களும் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார். அவற்றைப் பற்றிக் காண்போம்.
1. ஆகாயத்தை நோக்கி வீணே முஷ்டியால் குத்துபவன். அதாவது தமக்கோ, சமூகத்திற்கோ பிரயோஜனம் இல்லாமல் வெற்று காரியம் செய்பவன்.
2. தன்னை விட வலிமை உள்ளவனிடம் விரோதம் கொண்டு அவனை முறியடிக்க முயற்சி செய்பவன். அதாவது வானத்தை வில்லாக வளைக்க முயற்சிப்பவன்.
3. ஒரு விஷயத்தை பற்றி ஏற்றுகொள்ளாதவனிடம் அதைப் பற்றி சொல்பவன். ஒரு விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டுமோ அவனிடம் தான் சொல்ல வேண்டும். புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனிடம் ஞானத்தை பற்றி உபதேசிப்பது இதற்கு உதாரணமாகும்.
4. தர்மத்தை மீறி நடந்து விட்டு அவ்வாறு நடந்து கொண்டதை பெருமையாக சொல்லிக் கொள்பவன்.
5. விரோதியை வணங்கி அவனது வீட்டில் உணவு அருந்துபவன்.
6. யார் ஒருத்தன் பெண்களை காப்பாற்றி அவர்களை உழைக்க வைத்து அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துகிறானோ அவன்.
7. யாரிடத்தில் பிச்சை கேட்கக் கூடாதோ - அவனிடம் பிச்சை எடுப்பவன். மேலும் அவனிடம் பிச்சை பெறுவதற்காக அவனைப் பற்றி புகழ்ந்து பேசுபவன்.
8. யார் ஒருவன் சிறந்த குலத்தில் பிறந்து விட்டு அவனது குல தர்மத்தை காக்காமல் குலத்தை தாழ்த்தும் செயலை செய்பவன்.
9. நல்ல பலம் பொருந்தியவனுடன் விரோதம் கொண்டு தேவை இல்லாமல் அவனிடம் வம்புக்கு செல்பவன்.
10. செய்யும் வேலை பற்றி சிரத்தை இல்லாதவனிடம் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்பவன்.
11. எந்த பொருளில் ஆசை வைக்கக் கூடாதோ அந்த பொருள் மீது ஆசை கொள்பவன்.
12. மருமகளிடம் பேசக் கூடாத வார்த்தை அல்லது பரிகாசம் செய்பவன்.
13. எந்த பெண்ணிடம் கூடக் கூடாதோ அந்த பெண்ணிடம் உறவு கொள்பவன் மற்றும் அவளை கர்ப்பம் தரிக்க வைப்பவன்.
14.பெண்களை நிந்திப்பவன்.
15. வாங்கிய பொருளை திருப்பி தர மறுப்பவன்.
16. தானம் என்று கொடுத்து விட்டு கொடுத்ததைப் பற்றி தம்பட்டம் அடிப்பவன்.
17. ஒரு பொய்யை மெய்யாக்க சாதுர்யமாக பேசுபவன்.
ஆகிய மேல் சொன்ன 17 பேர்களும் நரகத்துக்குத் தான் செல்வார்கள் என்று விதுரரர் விதுர நீதியில் கூறியுள்ளார். மேல் கொண்டு அவர் சொன்ன அரிய பல விஷயங்களை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.
Follow Us